வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

முதல் மலையாள இலக்கண நூலில் ”தமிழ்ச் சூத்திரங்கள்”

May be an image of text
Sundar P : · முதல் மலையாள இலக்கண நூலில் சூத்திரங்கள். மலையாள மொழிக்கு முதல்முதலாக எழுதப்பட்ட இலக்கண நூல் ”லீலாதிலகம்” என்ற நூலாகும். இந்நூலின் காலத்தை 16 ம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர். இந்த நூலில் மலையாள மொழிக்கான இலக்கணங்களை எழுதும் போது தமிழ் இலக்கண நூல்களையே அந்த ஆசிரியர் மேற்கோளாகக் காட்டுகின்றார். தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், அகத்தியம் போன்ற நூல்கள் அவற்றுள் அடங்கும். இவர் எடுத்துக்காட்டுகின்ற அகத்தியச் சூத்திரம்,
””எகர ஒகர ஆய்த ழகர
றகர னகரம் தமிழ், பொது மற்றே””
என்பதாகும்.
இந்நூற்பா தமிழ் நூல்கள் எவற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூலை பேராசிரியர் இளைய பெருமாள் 1971 இல் மிக அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மலையாள மொழியின் அடிப்படைத் தன்மைகள் தமிழ்மொழியின் தன்மையில் இருந்து பெரியளவில் வேறுபடவில்லை என்பதை இந்நூலின் வழியாக நாம் புரிந்துகொள்கிறோம்.
இந்த விவரங்கள் உள்ள படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
 
பேராசிரியர்.
பொ வேல்சாமி
.....
தமிழ் மொழியிலிருந்துதான் மலையாள மொழி உருவானது என்ற கருத்தைக் கால்டுவெல், குண்டர்ட் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் வெளியிட்டபோது கேரளத்து அறிஞர்கள் அதை ஒத்துக் கொண்டனர்.
பேராசிரியர் இளங்குளம் குஞ்சம்பிள்ளை என்ற மலையாள மொழி ஆய்வாளர் இந்தக் கருத்தை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
சங்க காலத்திலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுவரை கேரளத்தின் செய்யுள் மொழியும், பேச்சுவழக்கு மொழியும் தமிழாகத்தான் இருந்தது என்கிறார் இளங்குளம்.
கேரளத்தின் நவீனப்படைப்பாளிகளும் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, சங்கப் பாடல்கள் சில ஆகியவற்றைத் தங்கள் மண்ணின் கவிதைகளாகவே உரிமை கொண்டாடுகிறார்கள்.
வையாபுரிப்பிள்ளையின் கருத்துப்படி தொல்காப்பியம்கூட தென் கேரளத்தைச் சார்ந்தது.
குலசேகர ஆழ்வார் கேரள அரசர்; சேரமான் பெருமாள் நாயனார்; புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் வேணாட்டிகள் என கேரளப் படைப்பாளிகளின் நீண்ட பட்டியலே உள்ளது.
அதோடு தீயாட்டுப் பாட்டுகள், சர்வப்பாட்டுகள், கிருஷிப்பாட்டுகள், வள்ளப் பாட்டுகள், சாற்றுப் பாட்டுகள் முதலிய நாட்டார் பாடல்களும் தமிழ் செல்வாக்குடையவை.
கி.பி. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ராமசரித காப்பியம்’, கி.பி.15-ம் நூற்றாண்டில் எழுந்த ‘கிருஷ்ணகாதை’, ‘பாரதமாலை’ போன்ற காவியங்களும் தமிழ் மரபுக்கே முதலிடம் கொடுப்பவை.
இந்தக் 'காவியக் கர்த்தாக்கள்' தங்கள் பாடல்களைத் தமிழ்க்கவி என்று கூறிக்கொள்ளுவதில் தயக்கம் காட்டவில்லை.
ஒரு சான்று:
ஆதி தேவனில் அமிழ்ந்த மனக் காம்புடைய சீராமன்
அன்பினோடே இயம்பின தமிழ்க் கவி வெல்வோர்
போதில் மாதின் இடமாவருடல் வீழ்வதினு பின்
போகி போக சயனன் சரணதார் அயர்வாரே
கி.பி. 9-ம் நூற்றாண்டில் கேரள இலக்கிய மரபில் சமஸ்கிருதக் கலப்பு வேகமாகப் பாய்ந்ததால் மணிப்பிரவாளத்தில் வைசிக தந்திரம், உண்ணிநீலி சந்தேசம், உண்ணிச்சிரி தேவி சரிதம், அனந்தபுர வர்ணனம் போன்ற இலக்கியங்கள் தோன்றின.
-
Nakkeeran Balasubramanyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக