வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ஜாக்கி வாசுதேவின் பேட்டியில் மறைந்திருக்கும் விஷக்கருத்துக்கள்

May be an image of 2 people, motorcycle and road

Abilash Chandran : · இந்து மதத்தை தலைகீழாக்க ஜக்கியின் புதிய பிரம்மாண்ட திட்டம் ஜக்கி வாசுதேவ் சாணக்யா யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பெட்டியைக் கண்டேன். இரண்டு விதங்களில் அது முக்கியமானது எனப் பட்டது:
ஜக்கி போன்று பாஜகவுக்கு அணுக்கமான மதத்தலைவர்களின் அடுத்த கட்ட திட்டத்தை அது அம்பலப்படுத்தியது. இந்து மதம் முழுமையாக கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு, பக்தி என்பது நுகர்வு மட்டுமே எனும் இடத்திற்கும் நாம் செல்லும் போது (பிராமணர்களின்) சாதி மேலாண்மை என்னவாகும் எனும் பாண்டேவின் கவலை வெளிப்பட்டது.
இந்த ஒட்டுமொத்த பேட்டியும் ஒரு செட் அப் ஆகவும் இருக்கலாம் என்றாலும் கூட அது ஒரு முக்கியமான பேட்டிதான்.
முதல் விசயத்துக்கு முதலில் வருகிறேன். 1. அது என்ன புதிய திட்டம்? கோயில்களை தனியார்மயமாக்குவதைப் பற்றி ஜக்கி பேசுகிறார். ஆனால் அது கார்ப்பரேட்மயமாவதாக, ஒரு சில தனிமனிதர்களிடம் செல்லுவதாக தோன்றக் கூடாது என்பதால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோயிலை அப்பகுதியின் சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் இணைந்து ஒரு குழுவை உருவாக்கி அதன் பரிந்துரைகளின் பேரில் கோயில் விழாக்களை நடத்துவது, வருமானத்தை பராமரிப்பது, பெருக்குவதே தனது பரிந்துரை என சுற்றி வளைத்து சொன்னார்.
இதைப் பற்றி பேசும் போதே தன்னுடைய மத அமைப்பின் பங்கு இதில் என்னவாக இருக்கும் என சொல்ல மறுத்தார், ஆனால் அவர் குறிப்புணர்த்தும் வழிபாட்டு முறைமை, சடங்குகள், வியாபார சாத்தியங்கள் அப்படியே ஈஷா அமைப்பை நினைவுபடுத்துவதாக இருந்தது. இதற்கு உள்ள பிரதான தடை கோயில் பராமரிப்பு அரசின் அறநிலைத் துறையின் கைவசம் இருப்பது தான். பராமரிப்பு மட்டுமல்ல கோயில்களின் பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள், கோயில் விழாக்கள், சடங்குகளை நடத்துவதில் ஒருவிதமான கட்டுப்பாடும் அரசிடமே உள்ளது. இந்த ஏற்பாடானது வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது தோன்றியது எனக் கூறும் ஜக்கி அப்போதே சிறுபான்மையினர் ‘விழித்துக் கொண்டு’ தமது மத நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தமக்கானது என போராடி அந்த உரிமையை பெற்றுக்கொண்டதாகவும், இந்துக்கள் முட்டாளாகி விட்டனர் என்றும் கூறுகிறார்.
ஜக்கி ஒரு சதியாலோசனைக் கோட்பாட்டையும் அடுத்து எடுத்து விடுகிறார்: ‘பல இந்துக்கோயில்கள் போதுமான பராமரிப்பு இன்றி அழிந்து வருகின்றன, அவற்றை இந்து மக்களே பாதுகாக்காவிடில் அவை அடுத்த நூறாண்டுகளில் காணாமல் போய் விடும், இந்தியாவில் பிறகு கோயிலே இருக்காது, இது இந்துவிரோத ஆட்சியாளர்களின் திட்டம்’ எனும் கணக்கில் பேசுகிறார். இப்படி பீதியைக் கிளப்பி இதை ஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையாக்கி மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என முயலும் போது அவர் ஒன்றை கவனிப்பதில்லை - நம் வரலாற்றில் எத்தனையோ கோயில்கள் அழிந்து புது கோயில்கள் அவ்விடத்தில் முளைத்துள்ளன. பல நூற்றாண்டுகளாய் ஒரே கோயிலை பரமாரித்து வைப்பது ஒற்றை புனித நூலின் அடிப்படையிலான கிறித்துவம் போன்ற மதங்களின் போக்கு. இந்து மதம் தோன்றி மறையும் கோயில்கள், நம்பிக்கைகள், போக்குகளால் உயிர்த்திருப்பது. கடந்த ஐநூறாண்டுகளில் இந்து மதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனித்தாலே ஆச்சரியம் ஏற்படும், ஆனால் கிறித்துவத்தில் இதில் ஒரு சதவீதம் கூட அடிப்படை மாற்றம் கூட ஏற்பட்டிருக்காது. கோயில்கள் அங்கங்கே கவனிப்பின்றி அழிவது உண்மையே, ஆனால் அதனால் கோயில் கலாச்சாரம் காணாமல் போகாது. இந்துக்களை பொறுத்தமட்டில் ஒரு கல்லை எடுத்து வைத்து வழிபட்டால் அங்கு ஒரு கோயில் தோன்றி விடும். அப்படி நீங்கள் ஒரு தேவாலயத்தில் உருவாக்க முடியுமா சொல்லுங்கள்? தேவாலயங்கள் பல இடங்களில் மூடப்பட்டு இடிக்கப்பட்டால் அது கிறித்துவத்தை நேரடியாக பாதிக்கும், விவிலியம் தடை செய்யப்பட்டாலும் பாதிக்கும், ஆனால் இந்து மதத்துக்கு இது நடந்தால் எந்த பாதிப்பும் இராது. இடிந்த கோயிலுக்குப் பக்கத்தில் பத்து கோயில்களை சுலபத்தில் எழுப்புவார்கள். தெருவுக்கு நாலு பிள்ளையார் கோயில் இருக்கிற, கோயில் இருக்கிற திசையில் பார்த்து பஸ்ஸைப் பிடிக்கிற அவசரத்தில் கும்பிட்டு விட்டு போகிற, மரத்தில் குங்கும் பூசி அதை தெய்வமாக்குகிற தேசம் இது.
ஜக்கியின் விருப்பம் கிறித்துவத்தைப் போன்று இந்து மதத்தையும் ஒரு கராறான கட்டமைப்பின், நடைமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனமாக்கி, அதை ஒரு நிர்வாகப் புள்ளியின் கீழ் கொண்டு வருவது. இந்து மதத்துக்கு ஒரு ‘திருச்சபையை’ உண்டு பண்ணி, அதற்கு என ஒரு ஒற்றைப் ‘புனித நூலை’ உருவாக்கி, குருமார்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, கிறித்துவத்தில் உள்ளதைப் போன்றே குறிப்பிட்ட நாட்களில் பொதுமக்களை ஒரு வழிபாட்டிடத்தில் திரட்டி போதனை வழங்குவது / பூஜை செய்து ஜக்கி பாணியில் நடனமாட வைப்பது / தேரிழுத்து, குடமுழுக்கு செய்வது. எல்லாவற்றுக்கும் ஒரு ‘ஒழுங்கைக்’ கொண்டு வருவது. ஆளுக்கொரு கோயில், தோன்றும் போது கும்பிடுவது, விருப்பமுள்ளது போல நம்புவது, சிறு சிறு கும்பல்களாய் கோயிலுக்கு சென்று வரும் மக்களை பெருந்திரளாய் ஒரு வழிபாட்டிடத்தில் திரட்டுவது. அதற்காகவே அவர் கோயில் பக்கமாய் வருகிறார். ஏனென்றால் இப்போதைக்கு இந்து பக்தர்கள் திரளும் இடம் கோயிலே.
ஜக்கி அடுத்து இதன் வணிக நலன்களை, இதுவரை யாரும் தன்னலப்படுத்தாத கோடானு கோடி பக்தபெருமக்கள் எனும் வளத்தை, வருவாய் ஆதாரத்தை, முதலில் பயன்படுத்துகிறவர் தானாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
அது என்ன வருவாய்?
நான் கோயில் சொத்தை ஆட்டையைப் போடுவதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அதை விட மிகப்பெரிய சொத்து ஒன்று உள்ளது - ‘இந்து மக்கள்’. இதுவரையிலும் ஜக்கி, ஶ்ரீ ஶ்ரீ போன்றோரின் ‘வாடிக்கையாளர் இலக்கு’ என்பது மத்திய, மேல்மத்திய, மேற்தட்டு நகரங்களில் வாழும் மக்களே. அடுத்து, வெளிநாட்டினர். ஆனால் ஒரு பெரும் மக்கள் திரள் இந்த இலக்குக்கு வெளியே இருக்கிறார்கள். கோயில்களை இவர்களிடம் ஒப்படைத்தால் இதுவரைக் காணாத அளவுக்கான பிரம்மாண்டத்துடன் விளம்பரங்களுடன் கட்டமைப்புகளுடன் விழாக்களை நடத்துவதுடன் டிவியிலும் நேரலையாக்கி, அத்துடன் இந்த விழாக்களில் கலந்து கொள்ள வெளிநாட்டு பக்தர்களையும் கொண்டு வருவார்கள். இந்த பக்தி சந்தையில் ‘காணிக்கை’ வசூலிப்பதுடன், merchantise எனப்படும் வியாபாரப் பொருட்களான சிலைகள், மாலை, படங்கள், கூடவே யோகா, தியானம், மனப்பயிற்சிகள், ‘மகிழ்ச்சிக்கான பயிற்சிகள்’ போல பல விசயங்களையும் விற்க முடியும். இப்போதைக்கு ஒரு சின்ன வட்டத்தில் நடக்கும் வியாபாரம் இந்தியா முழுக்க கீழ்த்தட்டில் இருந்து மேல்தட்டு வரை விரிந்தால் என்னவாகும் என்பதே ஜக்கியின் வணிக முன்மொழிவு (business proposal).
இப்போது நாம் ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்றால் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு செல்வோம். பெரும்பாலும் வீட்டுக்குள்ளாகவே கும்பிட்டுக் கொள்வோம். விசேச தினங்களில் பூஜை பண்ணுவதற்காக போவோம். சில பெயர் பெற்ற கோயில்களுக்கு விசிட் அடிப்போம். இப்போது இதையெல்லாம் முறைப்படுத்தினால் நீங்கள் எந்தெந்த வேளைகளில், நாட்களில் கோயிலுக்கு செல்ல வேண்டும், எந்த கோயிலில் என்னென்ன நிகழ்ச்சிகள் என்பது பெருமளவுக்கு சமூகவலைதளங்கள், இணையம், டிவி வழி விளம்பரப்படுத்தப்படும். மாலையானால் ஒரு மாலுக்கோ கடற்கரைக்கோ செல்வது போல கோயில் நிகழ்ச்சிக்குப் போவது ஒரு ‘மகத்தான’ பொழுதுபோக்காக மாற்றப்படும். நாட்டின் மிகப்பெரிய சமூகமாக்கல் வெளியாக கோயில் வெளி மாறும். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும், அங்கு பரிந்துரைக்கப்படும் புரொக்கிராம்களில் பணம் செலுத்தி கலந்து கொண்டாக வேண்டும் எனும் சமூக அழுத்தம் ஏற்படுத்தப்படும் அல்லது இயல்பாகவே ஏற்படும். நாமெல்லாம் நமது மாத வருமானத்தில் 10-25% யோசிக்காமல் இந்த அமைப்புகளுக்கு கொடுக்கும் நிலை வரும்.
இந்தியா முழுக்க ஏகப்பட்ட கோயில்கள் உள்ளன. ஆன்மீக சுற்றுலா என எடுத்துக் கொண்டால் இன்னும் போதுமானபடிக்கு பணம் கறக்கப்படாத எத்தனையோ புனித தலங்கள் உள்ளன. ஈஷா போன்ற அமைப்புகளிடம் ஒப்படைத்தால் அவர்கள் இவற்றை பிரதானப்படுத்துவதுடன் புதுப்புது கோயில்களையும் உண்டு பண்ணி இவற்றுடன் இணைப்பார்கள். ஒரு வார, ஒரு மாத பேக்கேஜுகளின் அடிப்படையில் இந்தியா முழுக்க இந்த பயணங்களை ஒருங்கிணைத்து பணம் வாங்கிவார்கள். ஒவ்வொரு கோயிலின் ஒரு குறிப்பிட்ட சிறப்பு சடங்கில் கலந்து கொள்ள இவ்வளவு கட்டணம் எனச் சொல்லுவார்கள். புகார் வரக் கூடாது என்பதற்காக பொது சடங்குகளையும் வைத்துக் கொள்வார்கள். இப்போது ஒரு திருப்பதி உள்ள இடத்தில் பல நூறு திருப்பதிகளை உண்டு பண்ணுவார்கள்.
இந்த புரோஜக்ட் நிகழ்ந்தேறுவது சுலபம் அல்ல. அரசு அவ்வளவு சுலபத்தில் கோயில்கள் மீதான உரிமையை விட்டுத் தராது. கோயில் சொத்தை ஆட்டையைப் போட்டு வைத்திருக்கும் குழுக்களும் முரண்டு பிடிக்கும். ஆனால் மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றி மாற்றத்தை கொண்டு வந்தால் மிச்ச ஆட்களை ஜக்கி, ஶ்ரீஶ்ரீ போன்றோர் சரிகட்டி விடுவார்கள். அது நடந்தால் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஜக்கி ஒரே வருடத்தில் மாறி விடுவார். ஆனால் அது மட்டுமல்ல பிரதமருக்கு அடுத்த படியான அதிகாரமும் அவருக்கு வந்து விடும். அங்கு தான் சூட்சுமமே இருக்கிறது.
இந்து மதம் இந்தியாவின் மிகப்பெரிய மதம், பெரும்பான்மையினரின் மதம், ஆனால் அது நிறுவனமயப்பட்ட கராறான மதம் அல்ல. மையப்படுத்தப்பட்ட மதம் அல்ல. ஆகையால் இந்து மத வாக்கு வங்கியை உருவாக்க இந்துத்துவர்கள் படாதபாடு பட வேண்டி வந்தது. அயோத்தி பிரச்சனையை அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போதுதான் அங்கு ஒரு ராமர் கோயிலைக் கட்ட, அதற்கு பிரதமரைக் கொண்டு அடிக்கல் நாட்ட முடிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்து உணர்வை கிளர்த்தி, மதவாதத்தை தூண்ட இஸ்லாமிய படையெடுப்பு, இந்துமத ஆபத்தில் இருக்கிறது போன்ற கதையாடல்களை பரப்ப வேண்டி உள்ளது. இதுவே கிறித்துவத்தை எடுத்துக் கொண்டால் தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியின் மத குருமார்களே சில கட்சிகளுடன் ஒப்பந்தம் பண்ணிக் கொண்டு வாக்காளர்களை ஒருங்கிணைப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இந்து மதத்துக்குள் அப்படி ஒரு ஏற்பாடு இப்போது வரை இல்லை. இந்து எனும் உணர்வே திடமாக இல்லை. அது இல்லா இடங்களிலும் ஒழுகிச் செல்லும் நதியாக உள்ளது. எனக்கு மத நம்பிக்கை இல்லை, கோயிலுக்கு செல்ல மாட்டேன், ஆனால் தத்துவ நூல்களைப் படிப்பேன், அந்த கருத்துக்களைப் பற்றி சிந்திப்பேன். இப்படியே கோயிலுக்கு செல்வோரில் நம்பிக்கை இல்லாதோர், பல தெய்வங்களை நம்புகிறவர்கள், எந்த ஒரு புனித நூலையும் படிக்காதோர் என பல வகையினர் உண்டு. ஒரு ரோமன் கத்தோலிக்கர் புரொட்டெஸ்டெண்ட் சடங்குகளை பின்பற்றவோ அந்த திருக்கோயிலுக்கு செல்லவோ மாட்டார். ஆனால் இந்து மதத்துக்குள் இந்த வரையறைகள் இல்லை. ஜக்கி இந்த மாற்றத்தை கொண்டு வந்து விட்டால் இந்துக்களுக்கான எல்லைகளை வகுத்து அவரவருக்கான பக்த கோடிகளை கட்டுப்படுத்துவது, அவர்களிடம் இருந்து ‘வரி’ வசூலிப்பது, அவர்களை தொடர்ந்து ஒரே இடத்தில் திரட்டி ஒரே திசையில் சிந்திக்க வைப்பது சுலபமாகும். தமிழகத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் தேவாலய குருமார்களை, இஸ்லாமிய தலைவர்களைப் போன்றே இந்து குருமார்களும் இந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பார்கள். அவர்களிடம் எந்த கட்சிக்கு இணக்கமாக உள்ளதோ அந்த கட்சியே தொடர்ந்து தேர்தல்களில் வெல்ல முடியும் எனும் நிலை வரும். இது இயல்பாகவே பாஜகவுக்கு சாதகமாக அமையும். “மதம் என்பது தனிப்பட்ட தேர்வு அல்ல, அது ஒரு சமூக கலாச்சார தேர்வு, அதுவே அரசியல் பொறுப்புமாகும்” என தனித்தனியாக உள்ள மூன்று புள்ளிகளையும் இணைத்தால் பின்பு இங்கு முற்போக்கு, மதசார்பற்ற அரசியலுக்கு சாத்தியமே இருக்காது. நமது தேர்தல் அரசியல் களம் தலைகீழாகி விடும்.
2024இல் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் போது பெரும்பாலும் இந்த இந்துமத தனியார்மயமாக்கலுக்கு சாதகமான சட்டம் கொண்டு வரப்படும் என நான் நம்புகிறேன். நாம் கற்பனையே பண்ண முடியாத ஒரு இந்து சமூக உணர்வை இது கட்டமைக்கும். இந்துமதம் ஒரு முழுமையான cult அமைப்பாக உருமாறத் தொடங்கும். அதற்கு எதிர்ப்பும் இன்னொரு பக்கம் இருக்கும். அதற்கு கார்ப்பரேட் சாமியார்கள் இப்போதே அடிபோடத் தொடங்கி விட்டார்கள் என ஜக்கியின் இந்த பேட்டியில் தெரிகிறது.
ஜக்கி இந்த விசயத்தை சொல்லும் போது கிறித்துவம், இஸ்லாம் போன்ற சிறுபான்மை மதங்களையும் அரசு நிர்வகிப்பது எவ்வளவு அவசியம் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் மிகப்பெரிய அளவிலான பொதுசொத்துக்களை மத அமைப்புகள் வளைத்துப் போட்டிருக்கின்றன. ஊழல், கல்வியை மதவாதமாக்கி, அதன் மூலம் மக்களை பிற்போக்குவது எல்லாம் இதனால் நிகழ்கின்றன. வெளியில் இருந்து வருகிற நன்கொடைகளுக்கு கணக்கு காட்ட வேண்டிய, வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லாததால் பொருளாதார முறைகேடுகள் நடக்கின்றன. அண்மையில் டி.ஜி.எஸ் தினகரனின் சொத்துக்கள் மீதும் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் நினைவிருக்கும். ஜீஸஸ் கால்ஸ் என்பது மற்றொரு ஈஷா அமைப்பு தான். மதத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனிமனிதர்களிடம் ஒப்படைக்கும் போது கணக்கு காட்டப்படாத பணம் பெரும் முதலீடாக ஓரிடத்தில் திரளும். இதை வைத்து மக்களை தமது நிரந்தர வாடிக்கையாளர்களாக்கி பெரும் கட்டமைப்புகளில் முதலீடு செய்து நன்கொடையாக கறுப்புப் பணத்தை வாங்கி மேலும் பலமடங்கு லாபம் பெருக்குவார்கள்.
இதை இந்த மதங்களுக்குள் இருக்கும் மக்களே அறிவார்கள். கிறித்துவத்திலும், இஸ்லாத்திலும் இருக்கும் மக்களின் வெளிப்படையான மத அடையாளம் என்பது நிறுவனமயமாக்கலால் செயற்கையாக உண்டு பண்ணப்படுவது. இது தனிமனித வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளதுடன் புதிய சிந்தனைகளை உடனடியாக ஏற்பதிலும் சிக்கல்களை உண்டுபண்ணுகின்றன. இந்தியாவில் மிகச்சிறிய எண்ணிக்கையில் இந்த மாற்ற மதத்தினர் இருப்பதால் இது நம் சமூக அரசியலில், பொருளாதாரத்தில், பண்பாட்டு வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்து மதத்துக்குள் இம்மாற்றங்கள் வரும் போது நிலைமை கட்டுமீறிப் போகும். நான் நம்பிக்கையில்லாத இந்து, நான் கோயில் வழிபாட்டை எதிர்க்கிற இந்து, நான் நீங்கள் முன்னிறுத்தும் இந்துமதத்தை ஏற்காத இந்து என என அப்போது சொன்னால் சமூகவிலக்கம் செய்வார்கள், கல்லை எடுத்து வீட்டில் அடிப்பார்கள், பெரிய அழுத்தத்தை கொடுப்பார்கள். நீங்கள் மதத்துக்கு வெளியே சுலபத்தில் இருக்க முடியாது. இங்கே இல்லாவிட்டால் இன்னொரு மதத்தில் போய் இரு என வலியுறுத்துவார்கள். மேற்கில் பெர்ட்னெண்ட் ரஸல், நீட்சே போன்றோர் கிறித்துவத்தை மறுபரிசீலனை பண்ணும் போது தீவிரமான விவாதங்களை அதற்காக எழுப்பினார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு பாமரன் இதை சாதாரணமாக போகிற போக்கில் செய்கிற சாத்தியம் உள்ளது. நீங்கள் இந்துக் கடவுளின் சிலையை உடைத்தால் நீங்கள் ஒரு ஞானியாக கூட அறியப்படலாம். உங்கள் மத எதிர்ப்புக்காக நீங்கள் கொண்டாடக் கூடப்படலாம். அது இங்குள்ள மக்களுக்கு சுலபத்தில் புரியும். அதற்கு தத்துவம் எல்லாம் தேவையில்லை. ஆனால் ஜக்கி சொல்லுகிற மாற்றங்கள் வந்து விட்டால் அதெல்லாம் பகற்கனவாகி விடும். அவர்கள் இந்து மதத்துக்கென ஒரு விவிலியத்தை, குரானை எழுதுவார்கள், இந்து மதத்துக்கென தேவாலயங்களை, மசூதிகளை கட்டுவார்கள். ‘இந்து மதத்தின் போப்பாக’ ஜக்கி உலகம் முழுக்க பார்கக்ப்படுவார். அதுவே அவரது கனவு.
ஆகையால் சிறுபான்மையினரிடம் இருந்து நிர்வாகப் பொறுப்பை வாங்கி, இந்து அறநிலையத் துறையானது அனைத்து மத அறநிலையத் துறையாக மாறும்படி சட்டமியற்ற வேண்டும். சிறுபான்மையினரை மட்டும் தனியாக சாந்தப்படுத்தும் அரசியலை செய்கிறார்கள் எனும் குற்றச்சாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும். கூடவே மதத்தை சமூக நடவடிக்கையாக அல்லாமல் தனிமனித நாட்டமாக மட்டுமே வைத்துக் கொள்கிற வாய்ப்பை சிறுபான்மை மக்களுக்கும் வழங்கலாம். மத நிறுவனங்களுக்கு கணக்கின்றி கறுப்புப்பணத்தை நன்கொடையாக வாங்கும் சட்டப்பாதுகாப்பையும் ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில், சமூகப்பொருளாதார சமத்துவம் நிலவ வேண்டுமெனில் அங்கு மதத்துக்கு மிகச்சிறிய இடமே இருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.
2. ஜக்கி சாதி குறித்து பேசிய இடம் சுவாரஸியமானது. தனது கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய எல்லா சாதியினருக்கும் வாய்ப்புண்டு என்கிறார் (ஈஷாவில் இது நடைமுறையில் எப்படி உள்ளது எனத் தெரியவில்லை.) இதை பாண்டே எதிர்க்கிறார். ஆகம விதிப்படி தான் பூசை செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும், அதற்கு எந்த சமூகம் (பிராமணர்கள்) தயாராக உள்ளதோ அது செய்யப்பட்டும் என்கிறார். ஜக்கியோ ஒருவரது பக்தியைப் பொறுத்து அவர் பூசாரியாக தேர்வு செய்யப்படலாம் என்கிறார். ஆனால் கவனமாக தமிழகத்தில் எல்லா சாதியினரும் பூசாரியாகும் சட்ட அனுமதி உள்ளது, அதை அரசு வேண்டுமென்றே நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது என்பதை அவர் சொல்லாமல் மறைக்கிறார். அவருக்கு வேண்டுமெனில் அச்சட்டத்தை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவும் நடைமுறைப்படுத்தும்படி கேட்கலாமே? ஆனால் ஜக்கி அதை செய்ய மாட்டார்.
ஏனென்றால் ஜக்கியின் நோக்கம் சாதியை ஒழிப்பதல்ல. தாராளமய வியாபாரத்துக்கு சாதி தடையாக இருக்குமிடத்தில் மட்டும் அதை விலக்கி விட்டு கல்லா கட்டுவது. இது நமது தனியார் நிறுவனங்களில் உள்ளதைப் போன்ற ஒரு மேலோட்டமான சமத்துவத்தை உருவாக்கும். இறுதியில் அதிகாரம் ஒரு சில சாதிகளிடம், ஒரு சிறு குழுவிடம் தான் நிலைக்கும். ஏனென்றால் அவர்களிடமே பொருளாதார, பண்பாட்டு முதலீடு இருக்கும்.
வருங்காலத்தில் ஜக்கியின் ஆசை பலிக்குமா? மீண்டும் பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி ஒரு சட்டம் போட்டு மோடி இதை சாத்தியப்படுத்துவாரா? இப்போது நாம் காணும் பல்லடையாள, பன்முகத்தன்மை கொண்ட இந்துமதம் மையப்படுத்தப்பட்ட ‘அபிரகாமிய மதமாக’ மாறுமாறுமா? அது நம் அரசியலில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக