திங்கள், 15 பிப்ரவரி, 2021

கமல் உள்ளே வருவாரா; காங்கிரஸ் வெளியே போகுமா? திமுகவுக்குள் நடக்கும் திரைமறைவு பேச்சுவார்த்தை!

minnambalam : மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் கமல் பேசியதாக எந்தக் காணொளியும் வெளியில் வரவில்லை; ஆனால் உள்ளே அவர் பேசியதாக, சிலர் கூறியதாக பல தகவல்கள் வெளியாகின.
அதில் முக்கியமானது, அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார் என்பதுதான்.
பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக, திமுகவை அவர் இவ்வளவு காட்டமாக விமர்சித்ததில்லை என்பதால் அவர் இந்தத் தேர்தலிலும் தனித்தே களம் காண்பார் என்பதாகத்தான் அவருடைய அபிமானிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளே கமல் அப்படிப் பேசினாலும் தேர்தல் நெருங்கும் போது அவர் என்ன செய்வார் என்பது குறித்து யாராலும் யூகிக்க இயலவில்லை.
அதேநேரத்தில் இந்தத் தேர்தலில் கமல் என்ன செய்ய வேண்டுமென்று தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் நினைக்கின்றன என்பது பற்றி பல்வேறு தகவல்களும் செவிகளில் வந்து விழுகின்றன.
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது, இழுபறியாகிக் கொண்டிருக்கிறது, அவர் அதைச் சொன்னார், இவர் இதைச் சொன்னார் என்று தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றித்தான் ஊடகங்களில் பலவிதமான யூகங்கள் உலா வருகின்றன.
ஆனால் திமுக கூட்டணிக்குள் கமல் உள்ளே வருவதற்கும், காங்கிரஸ் வெளியே போவதற்குமான வாய்ப்புகள் அதிகமாகி வருவதாக ஒரு தகவல் கிடைக்க, அதுபற்றி விசாரித்தோம்.

திமுக தலைமையின் நகர்வுகளை அறிந்திருக்கும் தலைமைக்கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்...

‘‘திமுக கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்கீடு என்பது பற்றித்தான் பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். உண்மையில் வெளிப்படையாக அதுதான் நடக்கிறது. ஆனால் ஸ்டாலினும், அவருடைய மருமகன் சபரீசனும் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி சில பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் முன்னணி தலைவர்கள் துரைமுருகன், டிஆர் பாலு, முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி,ஆ.ராசா, ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட யாருக்கும் இந்த முயற்சிகள் தெரியாது.

அப்படி நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமானது, கமலுடன் நடக்கும் பேச்சுவார்த்தை. கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கிய 41 சீட்களில் 21 சீட்களை கமல் கட்சிக்கு ஒதுக்கி விடலாம் என்பதுதான் சபரீசனின் திட்டம். திமுக கூட்டணிக்குள் அவரை கொண்டு வருவது குறித்து கமலிடம் சபரீசன் தொடர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். நேரடியாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்பதற்காக, தொழிலதிபர் மார்ட்டினின் மருமகன் அர்ஜூன் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதுதான் திமுக கூட்டணிக்கு வந்தால் 21 சீட்டுகள் கண்டிப்பாகத் தருகிறோம் என்று கமலுக்கு உறுதி தரப்பட்டிருக்கிறது.

ஆனால் கமல் உடனடியாக எந்தப் பதிலும் தரவில்லை. யோசித்துச் சொல்வதாகச் சொல்லி அனுப்பி விட்டார். இந்தத் தகவல் உளவுத்துறை மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் போய்விட்டது. உடனே அவரும் தன் சார்பில் ஒரு தூதுவரை அனுப்பி கமலிடம் பேசியிருக்கிறார். கூட்டணிக்குள் வரச் சொல்கிறார்களா அல்லது திமுகவுடன் போகாமலிருக்கச் சொல்கிறார்களா என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கமலை முதல்வரின் தூதுவர் சந்தித்துப் பேசியபின்பே, கமலின் பேச்சிலும் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. பொதுக்குழுவில் திமுகவை அவர் வெளுத்து வாங்கியது, அந்த சந்திப்புக்குப் பின்புதான். இதில்தான் சபரீசனின் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இருந்தாலும் சபரீசன் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. பொதுவெளியில் கமல் இதைப் பேசவில்லை என்பதால் இன்னும் அவர் கமலுடன் பேசிக்கொண்டே இருக்கிறார். விஜய் டிவியில் முன்பு பணியாற்றிய மகேந்திரன், இப்போது கமலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவர்தான் ‘கமல் திமுக கூட்டணிக்குக் கண்டிப்பாக வருவார். தேர்தல் தேதி அறிவித்ததும் அதற்கான முயற்சிகள் வேகமெடுக்கும்; நிச்சயம் நல்ல முடிவுக்கு வரும்’ என்று சொல்லியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் சபரீசன் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இதற்கிடையில், திமுகவின் இந்த முயற்சி பற்றி ராகுல் காந்திக்கும் தகவல் போய்ச்சேர்ந்திருக்கிறது. அதைக் கேள்விப்பட்ட ராகுல் காந்தி, ‘நமது கட்சி தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி. நமக்கான சீட்டைக் குறைப்பதற்காக கமல் கட்சியைக் கொண்டு வர திமுக முயற்சி செய்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. கேட்ட சீட்டைக் கொடுத்தால் கூட்டணியில் இருப்போம். இல்லாவிட்டால் வெளியேறுவோம்.’ என்று கடுமையாக தன்னுடைய கோபத்தை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பத்து நாட்களுக்கு முன்பு, டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்திப்பதற்காக சபரீசன் முயன்றபோது, அவரைச் சந்திக்க மறுத்ததற்குக் காரணம் இதுதான் என்கிறார்கள். கமலை கூட்டணிக்குள் கொண்டு வரும் சபரீசனின் முயற்சி வெற்றியடைந்தால், காங்கிரஸ் நிச்சயம் வெளியே போய்விடும். கமல் உள்ளே வந்து, காங்கிரஸ் வெளியே சென்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை இப்போது கணிக்க முடியாது.’’ என்றார்.

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்...ஆளவந்தானில் கமல் பாடிய பாட்டு. ஆள்வோருக்கும் ஆள நினைப்போருக்கும் கமல் இப்போது இப்படித்தான் தெரிவார்!

–பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக