திங்கள், 15 பிப்ரவரி, 2021

பண்பாட்டுப் படையெடுப்பின் பக்கவிளைவே நரபலிகள்

May be an image of text that says 'பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்! urtime. மஞ்சை வசந்தன்'
May be an image of 2 people
May be a black-and-white image of 2 people and text that says 'அலேக்யா சாய் திவ்யா'
Manjai Vasanthan : · பண்பாட்டுப் படையெடுப்பின் பக்கவிளைவே நரபலிகள். நரபலி என்பதே பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாய் நிகழ்த்தப்படும் படுகொலை. உலகில் தமிழர்களுக்கென்று ஓர் உயர்ந்த பண்பாடு உண்டு. தமிழினம் தொல்லினம் என்பதால் அவர்கள் பகுத்தறிவின்பாற்பட்ட, இயற்கையோடு இயைந்த மனிதநேயமுடைய சமத்துவ வாழ்வை வாழ்ந்தவர்கள். தன்னை ஒத்த மனிதர்களை மட்டுமின்றி மற்ற உயிர்களையும் நேசித்த உயிர் நேயர்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். புறாவைக் காப்பாற்ற தன் தொடையை அறுத்துக் கொடுத்தான் சிபி மன்னன். முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. பகுத்தறிவுக்கு இவை ஏற்புடைய செயல்கள் அல்லவென்றாலும் அவர்களின் உயிர்நேயம் இங்கு உய்த்து உணரத்தக்கது. தமிழர்க்கு கடவுள் நம்பிக்கையில்லை. அவர்களிடையே நன்றியின்பாற்பட்ட வழிபாடு மட்டுமே உண்டு. தனக்குப் பயன்படுபவற்றை மதித்து வணங்கினான். அப்படி வணங்கும்போதுகூட பலியிடும் வழக்கம் தமிழர்க்கு இல்லை.
ஆரியரால் வந்த அழிவு: உலகுக்கே பண்பாட்டையும், நாகரிகத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள். கலை, கட்டுமானம், கப்பல், மருத்துவம், வான் ஆய்வு, கணிதம் என்று பல்துறைத் திறன் பெற்றவர்கள். பித்தகரஸ் தேற்றத்தை அவருக்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் தமிழர். அப்படி வாழ்ந்த தமிழர்கள் நிலத்தில் அயல்நாட்டிலிருந்து பிச்சையெடுத்துப் பிழைக்க வந்தனர் ஆரியர்கள்.
சிறு சிறு குழுக்களாக வந்தேறிய ஆரியர்கள் தமிழர்களோடு ஒப்பிடும்போது மிக மிகச் சிறு எண்ணிக்கையில் இருந்தனர். எனவே, தமிழர்களைக் கண்டு ஒவ்வொரு நொடிப் பொழுதும் அஞ்சி அஞ்சி வாழ்ந்தனர்.
அந்த அச்சத்தின் விளைவாய் தங்கள் எதிரிகளான தமிழர்கள் அழிய வேண்டும் என்று அவர்களின் தெய்வங்களை வணங்கினர்.
வருணன், அக்னி, இந்திரன், வாயு போன்றவற்றையே அவர்கள் வணங்கி, தங்கள் எதிரிகள் அழிய வேண்டும் என்று யாகங்கள் நடத்தினர். அந்த (கோமேதம், அசுவமேதம்) யாகங்களில் மாடு, குதிரை ஆகியவற்றைப் பலியிட்டனர். அந்நிலையில் தமிழர்களிடையே பலியிடும் வழக்கம் எதுவும் இல்லை.May be an image of 2 people, people standing and text that says '1 புருஷோத்தம் நாயுடு பத்மஜா'
காலம் செல்லச் செல்ல, அவர்களின் பண்பாட்டுப் படையெடுப்பும், ஆதிக்கமும் மிகுந்தது. பெரும்பான்மை இனமான தமிழர்களை வலிமையால் வெல்ல முடியாது என்பதால் பூஜை, யாகம், மந்திரம் போன்ற மூடச் செயல்களால் தமிழர்களை வீழ்த்த முற்பட்டனர்.
காலப்போக்கில் தமிழர்களும் யாகம், பூஜை போன்றவற்றில் மயங்கி, அறிவிழந்து அவற்றைப் பின்பற்றினர்.
அதன் பின் தமிழர்களிடையேயும் பலியிடும் பழக்கம் பற்றிக் கொண்டது. தாங்கள் வணங்கிய வீரன், கருப்பன், மாடன், முனியன் போன்ற கடவுளர்க்கு பலியிட்டனர். வீடு கட்டுமுன் பலியிடுதல், போர் தொடுக்கும் முன் பலியிடுதல் என்று பலியிடும் பழக்கம் வளர்ந்தது. முதலில் விலங்குகளை மட்டும் பலி கொடுத்தவர்கள், பின்னாளில் மனிதனைப் பலி கொடுத்தால் மகத்துவம் அதிகம் என்று எண்ணி மனிதர்களைப் பலி கொடுக்கத் தொடங்கினர். மனிதனைக் குறிக்க நரன் என்னும் ஒரு சொல் உண்டு. பிற்காலத்தில் மனித பலியே நரபலி எனப்பட்டது.May be an image of 2 people and text that says 'கிரானராஜன் பார்வதி'
மகாபாரதப் போர் தொடங்கும் முன் அரவான் பலி கொடுக்கப்பட்டதை மகாபாரதம் தெரிவிக்கிறது. மன்னர்களே பலி கொடுக்கும் செயலைத் செய்ததால், மக்களும் அதைச் செய்யத் தொடங்கினர். காரியம் நிறைவேற தாங்கள் பெற்ற பிள்ளையையே பலி கொடுக்கவும், அவர்கள் முன்வந்து அவ்வாறு தங்கள் பிள்ளைகளையே நரபலி கொடுத்தனர்.
சிலர், தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுக்க மனம் ஒப்பாத நிலையில் மற்றவர்களின் பிள்ளைகளைக் கடத்திவந்து பலி கொடுத்தனர். காரியம் நிறைவேற வேண்டும், நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நரபலி கொடுத்துவிட்டு, அந்த உண்மை வெளிப்பட்டு, காவல் நிலையத்தாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்குச் சென்று தண்டனை பெற்று வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர்.
அண்மையில் நாட்டில் நிகழ்ந்தேறிய நரபலி சம்பவங்கள் கீழே:
பெற்ற மகள்களை பெற்றோரே பலியிட்டனர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் 24.1.2021 அன்று இரண்டு மகள்களை பேராசிரியர்களான பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வரும் புருஷோத்தம் நாயுடு, அப்பகுதியிலுள்ள மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி பத்மஜா தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியை. புருஷோத்தமன் நாயுடு, பத்மஜா தம்பதி கடந்த சில மாதங்களாக வீட்டில் அற்புதங்கள், அதிசயங்கள் நடக்கும் செல்வம் பெருகும் என்று கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.
தங்களின் 27 மற்றும் 22 வயதான இரு மகள்களையும் ஆடைகளின்றி பூஜையில் அமர வைத்து, நம் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை நீங்கள் செய்தாக வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி கண்களை மூடி வேண்டிக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இரு மகள்களும் கண்களை மூடிய நிலையில் இருந்தபோது, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தப்படும் தம்புள்ஸ், ஈட்டி போன்ற ஆயுதங்களை வைத்து இரண்டு மகள்களையும் பெற்றோரே துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்றுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரிடம், சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களின் 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். இருவரும் மீண்டும் உயிரோடு வந்துவிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள், அறிவியல் சிந்தனைகள், கல்வி அறிவு இவையெல்லாம் வளர்ந்து, எத்தனையோ மூடச் செயல்கள் ஒழிந்துள்ளன. என்றாலும், கடவுள், மந்திரம், மறுபிறப்பு போன்ற மூடநம்பிக்கைகள் படித்தவர்கள் மத்தியிலும் பற்றிக்கொண்டு நிற்பது கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய படித்தவர்கள் மகள்களையே மடமையால் கொன்ற கொடூரம் கடுமையான தண்டனைக்குரியது.
கல்வி போதிக்கும் பேராசிரியர்களே இப்படி மூடநம்பிக்கையின் பிடியில் கட்டுண்டு கிடப்பது சமூக அவலமில்லையா! இந்த விவகாரத்தில் கண்ணை விற்று, சித்திரம் வாங்குவதுபோல பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்து பலன் அடைய முயன்றது பாமரத் தனத்தின் உச்சநிலையாகும். கொலை செய்யப்பட்ட மகள்கள் இரண்டு, மூன்று நாள்களில் எழுந்து வருவார்கள் என்று அந்தப் படித்த பெற்றோர்கள் கூறினார்களே _ நம்பினார்களே _ மீண்டும் எழுந்து உயிருடன் வந்தார்களா? இதிலிருந்து விளங்கவில்லையா நரபலி ஒரு முட்டாள்தனம் என்பதும் அதற்கு எந்தவிதப் பயனுமில்லை என்பதும். நரபலி நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை ஆழ்ந்து சிந்தித்து திருந்த வேண்டும்.
கேரளாவில் 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த தாய் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (வயது 40). இவருடைய மனைவி சபிதா (38). அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-ஆவது மகன் ஆமிலின் (6). 1ஆ-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் 7.2.2021 அன்று பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்ட சபிதா, தனது 3ஆ-வது மகனை கொலை செய்துவிட்டதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
தோஷம் நீங்க...
சபிதா கடந்த சில நாள்களாக சோர்வான நிலையில் இருந்துள்ளார். அவருக்கு தோஷம் இருப்பதாகவும், அதற்கு 3ஆ-வது மகனை நரபலி கொடுத்தால் அந்த தோஷம் நீங்குவதுடன், மகனும் உயிரோடு வந்து விடுவதாகக் கனவு வந்து உள்ளது.
எனவே, அவர் தனது 3ஆ-வது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்தார். மகனை வீட்டில் உள்ள குளியலறைக்குத் தூக்கிச்சென்று கத்தியை எடுத்து கோழியை அறுப்பதுபோன்று கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். வீட்டில் புதையல் கிடைக்க குழந்தையை நரபலி கொடுக்கச் சொல்லும் சாமியார்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்தவர் பார்வதி. 70 வயது மூதாட்டியான அவரிடம் டோனாவூரைச் சேர்ந்த சாமியார் கிரானராஜன் (55) என்ற மந்திரவாதி அறிமுகமாகி இருக்கிறார். பில்லி சூனியம் வைப்பது, மாந்திரீகம் செய்வது, புதையல் எடுப்பது ஆகியவை தனக்குத் தெரியும் என்று அவர் அப்பகுதி மக்களை நம்ப வைத்திருக்கிறார். கிரானராஜனுக்கு மாந்திரீக விஷயங்கள் தெரியும் என்று மக்கள் நம்பியதால் அவரை எதிர்த்துக் கூட யாரும் பேசாமல் இருந்திருக்கிறார்கள். பார்வதி பாட்டிக்குக் குழந்தைகள் இல்லாததால் குமரேசன் என்பவரை வளர்த்து வந்திருக்கிறார். அவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடைசி பையன் அய்ந்து மாதக் கைக்குழந்தையாக இருக்கிறார். பார்வதியின் வீட்டில் அடிக்கடி இரவு நேரப் பூஜைகள் நடந்துள்ளன. பார்வதி பாட்டியின் வீட்டில் புதையல் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் புதையலை எடுத்தால் கோடீஸ்வரனாகிவிட முடியும் என்று ஆசை வார்த்தை சொல்லியிருக்கிறார். தன்னைத் தவிர வேறு யாராலும் புதையலை எடுக்க முடியாது என்றும், அதற்காக சிறப்பு விரதம் இருந்து யாகம் நடத்த உள்ளதாகவும் சொல்லியுள்ளார்.
மந்திரவாதி சொன்னதை உண்மை என்று நம்பிய பார்வதி பாட்டி, வீட்டில் புதைந்து கிடக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையலை எடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். புதையல் எடுப்பதற்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்த மந்திரவாதி, அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். பின்னர் புதையல் எடுக்கும் பூஜைக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பூஜையை 31.7.2020 அன்று தொடங்கியுள்ளார், மந்திரவாதி கிரானராஜன். பூஜையில் பலியிடுவதற்காகக் கோழி மற்றும் கருப்புப் பூனை வேண்டும் எனக் கேட்டுள்ளார். பார்வதியின் மகன் குமரேசன் கோழி, கருப்புப் பூனையைத் தயாராக வைத்திருந்திருக்கிறார். திட்டமிட்டபடி பார்வதி பாட்டியின் வீட்டுக்குள் பூஜை தொடங்கியிருக்கிறது. மந்திரங்களைச் சொன்னபடியே கிரானராஜன் வீட்டை வலம் வந்திருக்கிறார். பின்னர், திட்டமிட்டபடி கோழியை வீட்டின் ஒரு மூலையில் பலி கொடுத்துள்ளார். அதன் பிறகு கருப்புப் பூனையை வெட்டிப் பலிகொடுக்க ஏற்பாடு நடந்திருக்கிறது. புகை மூட்டம், ஆள் சத்தம் ஆகியவற்றால் அச்சம் அடைந்த பூனை, பலிகொடுக்க இருந்தபோது கையில் இருந்து நழுவிப் பாய்ந்து ஓடி மறைந்தது. அதனால் மந்திரங்கள் பலிக்காமல் போய்விடுமே என கிரானராஜன் பதறியுள்ளார்.
`திட்டமிட்டபடி பூஜையில் பலி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடும். அதோடு, வீட்டுக்குள் இருக்கும் புதையல் படு பாதாளத்துக்குச் சென்றுவிடும். பாதியில் பூஜையை நிறுத்தினால் குடும்பத்து ஆள்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பயமுறுத்தியிருக்கிறார். மந்திரவாதி சொன்னதைக் கேட்டு பார்வதி பாட்டியும் அவரின் மகன் குமரேசனும் அச்சம் அடைந்துள்ளார்கள்.
அதனால், பூஜையை நிறைவு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்வதி பாட்டி கேட்டிருக்கிறார். அப்போது மந்திரவாதி, இந்த பூஜை முடிக்க குமரேசனின மூத்த மகன் அல்லது இளைய மகனை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். புதையலும் கைக்குக் கிடைத்துவிடும் என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த குமரேசன் தன்னுடைய மகன், அய்ந்து மாத கைக்குழந்தையைப் பலிகொடுக்கச் சம்மதித்துள்ளார். ஆனால், அவரின் மனைவி அதற்குச் சம்மதிக்க மறுத்து சண்டை யிட்டிருக்கிறார்.
இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது, குமரேசனின் மனைவி கையில் இருந்த குழந்தையை மந்திரவாதி கிரானராஜன் பிடுங்க முயன்றுள்ளார். அவரது கையைத் தட்டிவிட்டு கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண், அழுதபடியே கிராமத்து மக்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். அவர்கள் களக்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த களக்காடு போலீஸார் குழந்தையை மீட்டதுடன், போலிச் சாமியார் கிரானராஜனைக் கைது செய்தார்கள். அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மூதாட்டி பார்வதி மற்றும் குமரேசன் ஆகியோரையும் கைது செய்தார்கள். தாயின் கூச்சலால் நரபலி சம்பவம் நடைபெறாது தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆசிரியரின் கடும் கண்டனம்
அண்மையில் நடந்தேறி வரும் நரபலி மூடநம்பிக்கைகளை கண்டித்து ஆசிரியர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், கல்லூரி துணை முதல்வர் _ பள்ளி முதல்வர் என்கிற அளவுக்கு மெத்தப் படித்த பெற்றோர் தாங்கள் பெற்றெடுத்த இரு மகள்களைக் கொடூர முறையில் கொலை செய்யும் அளவுக்கு மதம் _ அதனைச் சார்ந்த நம்பிக்கை என்னும் மூடத்தனம் இரண்டும் சேர்ந்து கொலைகாரர்களாக்கிய கொடுமையை என்ன சொல்ல!
பகுத்தறிவுபற்றிப் பேசினால் நான்கு கால் பாய்ச்சலாகப் பாயும் மதவாதிகள், ஆன்மிகவாதிகள், ஊடகங்கள் இந்தக் கொடூரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்?
திராவிட இயக்கத்தையும், பகுத்தறிவுக்
கருத்துகளையும் எதிர்க்கும் _ கேலி செய்யும் சக்திகள், ஆந்திராவில் நிகழ்ந்துள்ள இந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது புத்தி கொள்முதல் பெறுமா?
பகுத்தறிவு இல்லாப் படிப்புப் பாழ், பாழே! இதனைத் தெரிந்துகொள்வீர் என வலியுறுத்தியுள்ளார். (விரிவாக தலையங்கத்தில் காண்க)
ஆரியர் செய்த பலியிடும் வழக்கம் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து பெற்ற பிள்ளையையே பலியிடும் அளவுக்குக் கொடுமையாக உச்சம் பெற்றது.
இவ்வாறு நரபலி கொடுத்தவர்கள் அனைவருமே காவல்துறையில் மாட்டிக் கொண்டு வாழ்விழந்த பின்னும் இந்த அறியாமையிலிருந்து மக்கள் விழிப்பு பெற்று மீளாமல் தொடர்ந்து இதுபோன்ற கொடிய செயல்களில் ஈடுபடுவது நாட்டில் எந்த அளவுக்கு மூடநம்பிக்கை வேரூன்றி இருக்கிறது என்பதைக் காட்டுவதோடு, அதை ஒழிக்க நாம் பெரும் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
எனவே, அரசும், சமூகத் தொண்டர்களும், தொண்டு அமைப்புகளும் மந்திரம், பேயோட்டுதல், பலியிடுதல், அலகு குத்துதல் போன்ற மூடச் செயல்களை மக்களிடமிருந்து அகற்ற தொடர்ந்து செயல் விளக்கங்களையும், பிரச்சாரங்களையும் செய்ய வேண்டும்.
மந்திரவாதிகள், பேயோட்டிகள் போன்றவர்களைக் கண்காணித்து, அவர்கள் பேச்சில் பொதுமக்கள் அறிவிழந்து செயல்படுவதைத் தடுக்க வேண்டும். தொண்டு அமைப்புகளும் காவல் துறையினரும் விழிப்போடு கண்காணித்தால் இதுபோன்ற குற்றங்களை முற்றாக அகற்றலாம்; அகற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக