வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

சாத்தான்குளம்: `8 மாதங்களாகியும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரலை’ - பென்னிக்ஸ் சகோதரி வேதனை

vikatan -பி.ஆண்டனிராஜ்:  ஜெயராஜ் மகள் பெர்சி
ஜெயராஜ் மகள் பெர்சி

`ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் போஸ்ட்மார்ட்டம் நடந்து எட்டு மாதங்களாகியும் இன்னும் ரிப்போர்ட் கொடுக்கப்படவில்லை' என ஜெயராஜ் மகள் பெர்சி வேதனை தெரிவித்திருக்கிறார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கில் கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்திருந்ததாக, கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில்வைத்து இருவரையும் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.  நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடல்களும் ஜூன் 24-ம் தேதி, நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

பிரேத பரிசோதனை முடிவுகள் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் முடிவுகள் இதுவரை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பலமுறை அரசு மருத்துவமனையில் கேட்டும் அறிக்கை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இருவரும் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், வழக்குக்குத் தொடர்புடைய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இதுவரை கொடுக்கப்படாதது ஜெயராஜ் குடும்பத்தினரை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

ஜெயராஜ் மகள் பெர்சி
ஜெயராஜ் மகள் பெர்சி

அதனால் ஜெயராஜின் மகள் பெர்சி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் இன்று மனு கொடுத்தார். அதில், உயிரிழந்த இருவரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உடனடியாக தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது பற்றி ஜெயராஜின் மகள் பெர்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``எனது சகோதரன் பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவலர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள். அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சோகத்திலிருந்து நாங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

நெல்லை அரசு மருத்துவமனையில் பெர்சி
நெல்லை அரசு மருத்துவமனையில் பெர்சி

என் தந்தை, சகோதர் இருவரின் உடற்கூறு ஆய்வு முடிந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த விசாரணை வரும் 18-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்து நடத்துவதற்கு எங்களுக்கு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை அவசியமாகத் தேவைப்படுகிறது.

அதனால் உடற்கூறு ஆய்வியல்துறையில் அறிக்கை குறித்துக் கேட்க வந்தோம். ஆனால், அங்கு எங்களுக்கு முறையான பதில் தர மறுத்ததுடன், எங்களிடமிருந்து ஆய்வறிக்கை பெறுவதற்கான மனுவைப் பெற்றுக்கொள்ளக்கூட யாரும் முன்வரவில்லை.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுக்க, தொடர்ந்து தாமதப்படுத்தினால் நீதிமன்றம் செல்வோம்.
பெர்சி, உயிரிழந்த ஜெயராஜ் மகள்

அதனால், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு உடற்கூறு ஆய்வறிக்கையை உடனடியாக வழங்காவிட்டால் நீதிமன்றத்துக்குப் போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக