வியாழன், 4 பிப்ரவரி, 2021

திமுக மாநாட்டுக்கு நிலம் கொடுத்த அதிமுக விவசாயி! திமுக மாநாட்டுக்கு நிலம் கொடுத்த அதிமுக விவசாயி!

minnambalam : வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக நடத்தும் பிரம்மாண்ட மாநாடு பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் திருச்சி அருகே சிறுகனூரில் நடக்க இருக்கிறது.இதற்காக திமுகவின் முதன்மைச் செயலாளரும் திருச்சி மாவட்டத்தின் மூத்த திமுக தலைவருமான கே.என். நேரு தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே உள்ள சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதால் தினந்தோறும் சென்று மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடுகிறார் நேரு. ஒவ்வொரு நாளும் மாநாட்டுப் பணிகள் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடமும் பகிர்ந்துகொள்கிறார்.

300 ஏக்கரில் மாநாடு திட்டமிடப்பட்டு பணிகள் செய்துகொண்டிருந்த நிலையில்... ஓரிரு நாட்களுக்கு முன் தலைமையோடு ஆலோசித்த நேரு, மாநாட்டுக்கு 300 ஏக்கர் நிலம் போதாது. இன்னும் ஒரு நூறு ஏக்கர் வேண்டும். தேவைப்பட்டால் மேலும் ஒரு நூறு ஏக்கர் சேர்த்து 500 ஏக்கர் நிலம் கூட மாநாட்டுக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மாநாட்டு பணியில் ஈடுபட்டிருப்பவர்களிடம் கூறியுள்ளார்,

இதையடுத்து மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரிடம் பேசிய நேரு, மேலும் நூறு ஏக்கர் இடத்தை தயார் செய்யும்படியும், இப்போது மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகே உள்ள நில உரிமையாளர்களிடம் இதுகுறித்துப் பேசுமாறும் கூறியுள்ளார். நேருவின் உத்தரவின்படி அவரது ஆட்கள் மாநாட்டுக்காக நிலம் கேட்டு இப்போதைய நிலத்தைச் சுற்றியிருக்கும் நிலத்து உரிமையாளர்களிடம் பேசி வருகிறார்கள்.

அதில் ஒருவரை சந்திக்க சென்றபோது அவர் அதிமுக கொடிகட்டிய மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் சென்ற நேருவின் ஆட்கள், “அண்ணே இதுமாதிரி இங்க திமுக மாநாடு நடத்துறோம். இப்ப நிலம் கொஞ்சம் அதிகம் தேவைப்படுது. உங்க நிலமும் அதைச் சுத்தி இருக்கு. உங்க நிலத்தை மாநாடு நடத்துறதுக்கு தர்றீங்களா...என்ன செய்யணுமோ அதை செஞ்சு தந்துடறோம்”என்று கூறியுள்ளனர்.

அந்த அதிமுக விவசாயி, “நிலத்துல கொத்தமல்லி போட்டிருக்கேங்க” என்று சொல்லியுள்ளார். “அதுக்கு எவ்வளவுண்ணே எதிர்பார்க்குறீங்க?” என்று கேட்டிருக்கிறார்கள் நேருவின் தரப்பினர். அதற்கு அந்த விவசாயி, “நிலத்துல ஒரு கிணறு இருக்கு.அதுல தண்ணியில்ல, நானே அதை தூத்துடணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன். முடியலை” என்று சொல்லியிருக்கிறார்.

உடனே மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், “சரிண்ணே...அந்த கிணத்தை நாங்களே தூத்துக் கொடுத்துடறோம். கொத்தமல்லிக்கு எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுங்க”என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அந்த விவசாயி, “நீங்களே பாத்து போட்டுக்கொடுங்க” என்று கூற, “அண்ணே...கொத்தமல்லி நீங்கதானே போட்டிருக்கீங்க. நீங்களே கேளுங்க. தர்றோம்” என்று சொல்ல, “முப்பதாயிரம் கொடுங்களேன்” என்று கேட்டிருக்கிறார் அந்த அதிமுக விவசாயி.

உடனடியாக பணம் கொடுக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்குள் அந்த அதிமுக விவசாயின் நிலம் திமுக மாநாட்டுக்காக செப்பனிப்பட ஆரம்பிக்கப்பட்டது.

இப்படியாக மாநாட்டு ஏற்பாடுகளை பரபரப்பாக கவனித்து வருகிறார் கே. என். நேரு.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக