வியாழன், 4 பிப்ரவரி, 2021

பெண்கள் பிள்ளை வரம் வேண்டி கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு வாயால் மண் சோறு.. திருவண்ணாமலை

May be an image of one or more people
Dr K Subashini : திருவண்ணாமலை அருகே உள்ள பரதேசி ஆறுமுகசாமி கோவிலில் இந்தப் பூசை நடந்திருக்கின்றது. பிள்ளை இல்லாத பெண்கள் பிள்ளை வரம் வேண்டி கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு வாயால் மண் சோறு சாப்பிடும் பூசை.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு மடமையா என யோசிக்க வைக்கின்றது.
அவர்கள் இந்த அளவிற்கு தம்மை தாழ்த்திக் கொண்டு ஒரு பொது இடத்தில் விலங்கு போல தம்மை பாவித்து இப்படி செய்வது வழிபாடா?
மண் சோறு சாப்பிட்டால் பிள்ளை பிறக்குமா? கொஞ்சம் தனக்கிருக்கும் மூளையைப் பயன்படுத்தி யோசிக்க வேண்டாமா?
இதற்குப் பின்னனியில் இருப்பது குடும்ப சூழல் தரும் ஒரு அழுத்தம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு பெண் குழந்தை பெறவில்லை என்றால் மலடி என்பதும்..   ஏதோ பெண் எனும் பிறப்பிற்கு குழந்தை பெற்றால் தான் பெண் என்ற அங்கீகாரமே கிடைக்கும் என்ற வகையில் சூழ்நிலையைக் கெட்டிக்காரத்தனமாக உருவாக்கி வைத்திருக்கும் சூழலில், பெண்கள் இயல்பாக எப்படியும் தம்மை தாழ்மைப் படுத்திக் கொண்டு இப்படி பொது இடத்தில் மண்டி போட்டு கைகளை, ஏதோ தவறு செய்து விட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல கட்டிக் கொண்டு வாயால் மண் சோறு சாப்பிடுவது..
எவ்வளவு பேர் நடந்திருப்பார்கள். .
எவ்வளவு கிருமிகள் அங்கிருக்கும்.. ஏதாவது யோசனை செய்தார்களா..?
இக்கால தமிழ்ப் பெண்கள் ஓரளவேனும் படித்திருக்கின்றார்கள். அவர்களே இனி தாமே, இவ்வகையான தம்மை தாழ்மைப் படுத்திக் கொள்ளும் செய்கைகளைச் செய்யகூடாது என தமக்குத்தாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.
மனிதராகப் பிறந்திருக்கும் நாம் சாதிக்கவும் செயல்படுத்தவும் எவ்வளவோ விசயங்கள் உள்ளன, அதில் மனதைச்செலுத்தி தம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்ததை இப்பெண்கள் உருவாக்க வேண்டும் .
இத்தகைய நிகழ்வுகளைக் கண்டு மிக மனம் வருந்துகிறேன்.Dr K Subashini

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக