வியாழன், 4 பிப்ரவரி, 2021

கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வாகன அழிப்பு திட்டம்.. உண்மையில் யாருக்கு, என்ன பாதிப்பு..?

பழைய வாகனங்களுக்கு மூடவிழா
Prasanna Venkatesh - tamil.goodreturns.in :2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட ஆட்டொமொபைல் துறைக்கு நேரடியாக எவ்விதமான தளர்வுகளையும் மற்றும் சலுகைகளையும் மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கவில்லை என்றாலும், Vehicle scrappage policy மற்றும் இதர அறிவிப்புகள் மூலம் மறைமுகமாக ஆட்டோமொபைல் துறைக்குச் சாதகமான சலுகைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. பட்ஜெட் அறிக்கையில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்த புதிய Vehicle scrappage policy மூலம் பல லட்ச கார் உரிமையாளர்களை நேரடியாகப் பாதிப்பது மட்டும் அல்லாமல் புதிய கார்களின் விலையில் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னார்வ வாகன அழிப்புத் திட்டம் ..... இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களைப் புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தன்னார்வ வாகன அழிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது இந்தியா ஆட்டோமொபைல் துறைக்கு மறைமுகமாகப் பல சாதகமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வாகனங்களுக்கு மூடவிழா பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ள படி இத்திட்டத்தின் மூலம் 15 வருடங்களுக்குப் பழமையான பர்சனல் வாகனங்களும், 15 வருட பழமையான வர்த்தக வாகனங்களும் தானாக முன்வந்து அழிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது மத்திய அரசு. இதேவேளையில் அழிக்கப்படும் பழைய வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்குமா என்பது குறித்து மத்திய அரசு முழுமையான விளக்கத்தை அளிக்கவில்லை.

கிரீன் டாக்ஸ் விதிப்பு சில நாட்களுக்கு முன்பு சாலை போக்குவரத்துத் துறை பழைய வாகனங்கள் மற்றும் அதிக மாசுபாட்டை உருவாக்கும் வாகனங்களைப் பயன்படுத்தவதை தடுக்கும் வகையில், கிரீன் டாக்ஸ் விதிக்கப்பட்டது. இது கிட்டதட்ட தன்னார்வ வாகன அழிப்புத் திட்டத்திற்கு, கிரீன் டாக்ஸ்-க்கும் பிணைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கூடுதலான சாலை வரி இந்தக் கிரீன் டாக்ஸ் படி 15 வருட பழைய வாகனங்களுக்கான பதிவை (Registration) புதுப்பிக்கும் போது 10 முதல் 25 சதவீதம் கூடுதல் சாலை வரி விதிக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் பழைய வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறத் தவறினால் பதிவைப் புதுப்பிக்க முடியாது.

ஊக்கத்தொகை கண்டிப்பாக அவசியம் இந்நிலையில் தன்னார்வ வாகன அழிப்புத் திட்டத்திற்கு அரசு ஊக்கத்தொகை கொடுக்காவிட்டால் இத்திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, திட்டமும் செயல்படாது என இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பவன் கோங்கயா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கத்தொகைக்கு மத்திய அரசின் திட்டம் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி மத்திய அரசு, பழைய வாகனங்களை அழிப்போருக்கு மாநில அரசிடம் இருந்து முழுமையாகச் சாலை வரி திரும்பப்பெறுதல், புதிய வாகனங்களை வாங்கும் போது வாகன தயாரிப்பாளர்களிடம் இருந்து 1 முதல் 2 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஸ்டீல் மீதான இறக்குமதி வரிக் குறைப்பு மேலும் பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு பொருட்கள் மீதான இறக்குமதி குறைக்கப்பட்டதன் மூலம் ஸ்டீல் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி விலை குறைந்து கார் விலை உயர்வைத் தடுக்க முடியும். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 2022ஆம் நிதியாண்டில் மீண்டும் விலைகளை உயர்த்த திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த அறிவிப்பு மூலம் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த முடியும். இந்நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆடம்பர கார்களின் விலை 1.5 லட்சம் ரூபாய் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கிரீன் டாக்ஸ் மற்றும் தன்னார்வ வாகன அழிப்புத் திட்டம் மத்திய அரசு அறிவித்துள்ள பசுமை வரி எனப்படும் கிரீன் டாக்ஸ் மற்றும் தன்னார்வ வாகன அழிப்பு திட்டத்தின் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பழைய கார் விற்பனை சந்தை பெரிய அளவில் பாதிக்கப்படும். கூடுதல் சாலை வரி, தகுதி சான்றிதழ் எனப் பல்வேறு காரணிகள் இருக்கும் காரணத்தால் பழைய வாகனங்களின் மதிப்பு பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வாகனங்கள் விற்பனை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள இவ்விரு திட்டங்கள் மூலம் பழைய வாகனங்களின் பயன்பாடு மற்றும் விற்பனை குறையும் நிலையில், புதிய வாகன விற்பனைக்கான சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைய உள்ளது. பழைய வாகனங்களை அழிக்கக் கொள்கைகள் வந்துள்ள நிலையில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும். இதனால் புதிய கார் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக