செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் தியாகப் பணி புரிந்த மாதரசி மங்களம்மாள்! (1884 – 1971)

May be an image of 1 person
Maniam Shanmugam : · யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் தியாகப் பணி புரிந்த மாதரசி மங்களம்மாள்! யாழ்ப்பாணத்தில் பிறந்த பெண்ணொருவர் காந்தியவாதியாகவும், பெண் விடுதiவாதியாகவும், இதழியலாளராகவும், இந்தியாவில் அரசியல்வாதியாகவும் வாழ்ந்த வரலாறு நமது இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் அப்படியொருவர் வாழ்ந்திருக்கிறார். அவரது பெயர் மங்களம்மாள் மாசிலாமணி (1884 – 1971) யாழ்ப்பாணத்திலுள்ள ஓட்டுமடம் பகுதிக்கு நான் செல்லும் போதெல்லாம் ‘பீ.ஏ.தம்பி ஒழுங்கை’ என்ற வீதியால் செல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் அந்த வீதிக்கு அந்தப் பெயர் வந்த காரணத்தை அறிந்திருக்கவில்லை. ஆனால் மங்களம்மாளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த பின்னர்தான் அதை அறிந்து கொண்டேன்.
அந்த வீதியின் பெயருக்கு உரியவரின் பெயர் கதிரவேலுப்பிள்ளை. அவர் மங்களாம்மாளின் தாய்வழிப் பாட்டனார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ஒரு வழக்கறிஞர் என்பதுடன், அந்தக் காலத்தில் மிகச் சிலரே அரிதாகப் பெற்றிருந்த பீ.ஏ. பட்டத்தையும் பெற்றிருந்தார். அதன் காரணமாக, மக்கள் அவரை “பீ.ஏ. தம்பி” என அழைத்தனர். அதன் காரணமாகவே அந்தப் பெயர் அவர் வாழ்ந்த வீதிக்குப் பின்னர் சூட்டப்பட்டது.
மங்களாம்மாள் மாமனாரான பொன்னம்பலபிள்ளையின் ஒரே மகனான மாசிலாமணிப்பிள்ளையை திருமணம் செய்தார். மாசிலாமணிப்பிள்ளை அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘தேசாபிமானி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அத்துடன் அவர் இலங்கையிலும் இந்தியாவிலும் பல பொதுப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் மாசிலாமணிப்பிள்ளை இந்தியா சென்று அங்கு வாழத்தொடங்கினார். மங்களம்மாளும் கணவருடன் கூடச் சென்றார். அங்கு இருந்த காலத்தில் கணவரின் ஆலோசனையின் பேரில் மங்களம்மாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த நேரத்தில் 1924இல் கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெண்கள் அரங்கிற்கு மங்களாம்மாளே தலைமை தாங்கினார். 1927இல் காந்தியின் முன்னலையில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் போதும் மங்களம்மாளும் வரவேற்புக் குழுவில் இருந்ததுடன், பெண்கள் அரங்கத்தின் வரவேற்புரையையும் இவரே நிகழ்த்தினார்.
1926இற்கு முன்னர் பெண்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. அது நீக்கப்பட்ட பின்னர் சென்னை மாநகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எழும்பூர் வட்டாரத்தில் போட்டியிட்ட நீதிக்கட்சித் தலைவரான நாடுவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மங்களம்மாள் போட்டியிட்டார். அவர் அத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் யாழ்ப்பாணத்தில் பிறந்த ணெ;ணொருவர் போட்டியிட்டமை எலலோரது கவனத்தையும் ஈர்த்தது.
மங்களம்மாள் இந்தியாவில் இருந்த காலத்தில் ‘தமிழ் மகள்’ என்ற பெயரில் பெண்களுக்கான மாத இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். யாழ்ப்பாணம் திரும்பி வந்த பின்னரும் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார். சுமார் 40 ஆண்டு காலம் அந்த இதழ் வெளிவந்தது. 1971இல் அவர் தமது 85ஆவது வயதில் இறக்கும் போது கடைசி இதழ் முற்றுப்பெறாமல் இருந்தது. அவர் இறந்த பின்னர் வெளிவந்த அந்த இதழில் அவரது படத்தை அட்டையில் தாங்கியிருந்ததுடன், அவரைப் பற்றிய இரண்டு கட்டுரைகளும் பிரசுரமாகியிருந்தன.
மங்களம்மாள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் சமூகத்தினதும் பெண்களினதும் முன்னேற்றத்துக்காக பல அமைப்புகளை உருவாக்கிச் செயற்பட்டிருக்கிறார். அந்த வகையில் 1902ஆம் ஆண்டு மங்களம்மாள் தனது 18ஆவது வயதில் வண்ணார்பண்ணையில் ஆரம்பித்த ‘பெண்கள் சேவா சங்கம்’ என்ற அமைப்பே தமிழ் பெண்கள் மத்தியில் அமைக்கப்பட்ட முதலாவது பெண்கள் அமைப்பாகக் கருதப்படுகிறது. 12 அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கத்தில் பின்னர் 50 உறுப்பினர்கள் வரை சேர்ந்திருந்துள்ளனர். இச் சங்கம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றில், “இச் சங்கம் மதசார்பற்றதாய், தமிழ் மகளிருக்குப் புதிய அறிவையும், தன்னம்பிக்கையையும் ஊட்ட வல்லதாய், பெண் விடுதலைக்கான முதலாவது அடியை எடுத்து வைப்பதாய்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மங்களம்மாள் இந்தியாவிலிருந்து வந்த பின்னர் 1932ஆம் ஆண்டு ‘மகளிர் தேசிய சேவைச் சங்கம்’ (வண்ணார்பண்ணை) என்ற பெயரிலும் அமைப்பொன்றை உருவாக்கிச் செயற்பட்டிருக்கிறார். இச்சங்கத்தின் நிர்வாகக் குழுவில் யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் ஸ்ரீகாந்தா அவர்களினது மனைவி பெயரும் காணப்படுகின்றது. ‘தமிழ் மகளிர் கழகம்’ என்ற இன்னொரு அமைப்பிலும் மங்களம்மாள் முக்கிய பங்கு வகித்துச் செயற்பட்டிருக்கிறார். தீண்டாமை ஒழிப்பு, பெண் சமத்துவம் போன்ற நோக்கங்களுக்காகச் செயற்பட்ட இக்கழகத்தின் குறிப்பு ஒன்றில் ‘பாரம்பரிய கலைகலாச்சாரங்கள் குன்றாது மலர்ச்சியடைய இக்கழகம் செயற்பட்டதாக’க் கூறப்பட்டுள்ளது.
மங்களம்மாள் தனது பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இருந்த ஏழை முதல் பணக்காரர் வரையான பல வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றுள்ளார். தனது காலத்தில் தான் ஈடுபட்ட சகல நடவடிக்கைகள் குறித்தும் சேகரித்த ஆவணங்களை மூன்று பெட்டிகளில் பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால் அவர் இறந்த பின்னர் அவர் வாழ்ந்த வீடு புதுப்பித்துக் கட்டப்பட்ட பொழுது அந்த ஆவணங்கள் கவனிப்பாரற்று அழிந்து போய்விட்டன. அது ஒரு சோகமான விடயமாகும். அவை இருந்திருக்குமாயின் அவர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளின் மகத்துவம் மேலும் தெரிய வந்திருக்கும்.
மங்களம்மாளின் பணிகளுக்கு அவரது கணவர் மாசிலாமணிப்பிள்ளை அளித்த ஆக்கமும் ஊக்கமும் வர்ணிக்க முடியாதவை. நாம் வாழும் இன்றைய நவீன காலகட்டத்திலேயே பெண்களை பொது விடயங்களில் ஈடுபட விடாது வீட்டுக்குள் பூட்டி வைக்கும் நிலைமை இருக்கிறது. அந்தக் காலத்து கட்டுப்பெட்டித்தனமான யாழ்ப்பாணத்துச் சமூக நிலைமையைச் சொல்லவும் வேண்டுமா? அப்படியிருந்தும் மாசிலாமணிப்பிள்ளை தனது மனைவி மங்களம்மாளை சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்து ஒத்துழைப்பும் வழங்கியிருக்கிறார். அது மாத்திரமின்றி, தனது நேரத்தை மட்டுமின்றி, தனது சொத்து சுகம் எல்லாவற்றையும் சமூகத்துக்காகவும் தேசத்துக்காகவும் அர்ப்பணித்துச் செயற்பட்டிருக்கிறார்.
தமிழ் பாசிசவாதிகளுக்காகவும், சினிமாச் சில்லறைகளுக்காகவும் விழாவெடுக்கும் நமது இன்றைய தமிழ் சமூகம் இத்தகைய தியாகசீலர்களை மறந்துவிட்டதுதான் நமது துரதிஸ்ட்டமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக