திங்கள், 11 ஜனவரி, 2021

திமுகவின் தேர்தல் மாநாடு: பி.கே. நடத்திய கூட்டம்!

minnambalam :  சட்டமன்றத் தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகிக்கொண்டிருக்கிறது திமுக கூட்டணி. தேர்தல் நோட்டிபிகேஷன் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்ற நிலையில் கூட்டணிக் கட்சியினருக்கான தொகுதிகள், திமுக போட்டியிடும் தொகுதிகள் என்பது பற்றிய ஆலோசனைகள் தீவிரமாகியிருக்கின்றன. திமுக தலைவரை அண்மையில் வைகோ, ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்தார்கள். அப்போது திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கான இடங்கள் பற்றி அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில்...

திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கடந்த வாரம் சென்னையில் ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என். நேரு, ஆ.ராசா, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., சேகர்பாபு, செந்தில்பாலாஜி , சிற்றரசு, உள்ளிட்டோரோடு சபரீசனும் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் திமுகவுக்குத் தற்போது தமிழக வாக்காளர்களிடையே ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை தங்களது ஐபேக் டீமின் தொடர்ச்சியான சர்வேக்கள் மூலமாக... கணினி வரைபடங்கள் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். தற்போதைய நிலையில் திமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு வேறு ஏதும் பணிகளை செய்யாமல் இருந்தால்கூட 120 தொகுதிகளில் வெற்றிபெற்றுவிடும். தேர்தல் பணிகளை வேகமாக செய்தால் இன்னும் ஒரு 60 தொகுதிகள் அதிகமாகப் பெற வாய்ப்பிருக்கிறது என்று கூறி பிரசாந்த் கிஷோர் அந்தத் தொகுதிகள் பற்றிய விவரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேநேரம் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தில் ஏற்கனவே பேசும்போது, ‘திமுகவுக்கு வெற்றி உறுதி. ஆனால், அதை சாதாரணமாக கிடைக்க விட மாட்டார்கள். எனவே கடைசி வரை நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பாடம் நடத்தினார்.

அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் திமுகவின் தேர்தல் மாநாடுக்கான ஒரு திட்டமும் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாகவே தேர்தலுக்கு முன் திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஒரு பிரமாண்ட மாநாட்டை நடத்தும். காலையில் இருந்து மாலை வரை கட்சியின் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் என பேசி மாலை நிறைவாக திமுகவின் தலைவர் உரையாற்றுவார். கூட்டணியை இறுதி செய்யும் விதமாகவும், தேர்தலைச் சந்திப்பதற்கு தொண்டர்களை தயார் செய்யும் விதமாகவும் இதுபோன்ற மாநாடுகளை திமுக நடத்தும்.

ஆனால் இந்த வருடம் நடக்கப்போகும் திமுக மாநாடு கொஞ்சம் வித்தியாசமானது. அதுபற்றிய பவர் பாயின்ட் மூலமான விளக்கங்களைதான் பிரசாந்த் கிஷோர் கூட்டத்தில் கம்ப்யூட்டர் மூலம் விளக்கியிருக்கிறார்.

அதாவது மாநாட்டின் முற்பகுதி அமர்வு என்பது முழுக்க முழுக்க திமுகவின் பூத் ஏஜென்ட்டுகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கானது. வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளிலிருந்து வாக்குப் பதிவு நடக்கும் நாள், வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மையம், அதன் பின் வாக்கு எண்ணும் நாளன்று வரை களத்தில் இருப்பவர்கள் மட்டுமே மாநாட்டின் இந்த முற்பகுதியில் கலந்துகொள்ள வேண்டும். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. பூத் ஏஜெண்ட்டுகள், வழக்கறிஞர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டை கொடுத்து அவர்களை மட்டும் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மாநாட்டின் முதற்பகுதியில் பங்கேற்று பயிற்சி அளிப்பதுதான் திட்டம்.

அதன் பின் மாலையில் கட்சியினர், கூட்டணிக் கட்சியினர், தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் அரசியல் மாநாடு. இதில் குறைந்தது மூன்று லட்சம் பேராவது கலந்துகொள்ளும் வகையில் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள், திமுகவில் மேலும் இடம்பெறப் போகும் கட்சிகளின் தலைவர்கள் என அனைவரையும் அழைத்து தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்துவதுதான் திமுகவின் திட்டம். மாநாட்டுப் பணிகளில் இறங்கிவிட்டது திமுக” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக