சனி, 23 ஜனவரி, 2021

பா.ஜ.க.வின் அஜெண்டா... ரகசிய பேரம்? ராகுல் அதிர்ச்சி!

nakkeeran :சட்டமன்ற தேர்தலில் ‘மிஷன் 200' என்கிற இலக்கை அடைவதற்கான திட்டத்தில் செயலாற்றி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 200 தொகுதிகளில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இதனைப் பக்குவமாக கூட்டணி கட்சிகளிடமும் தெரிவித்து வருகிறது அறிவாலயம்.      இதில் காங்கிரசுக்கு மட்டும் இரட்டை இலக்க அளவில் சீட் என்றாலும், தி.மு.க. சொல்லும் எண்ணிக்கையை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்வையிட மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, சீட் பற்றி தி.மு.க. தலைமையிடம் பேசி முடிக்கலாம் என்கிற ப்ளானும் நிறைவேறாததால் அவர் அப்செட் என்கிறார்கள்.  

ராகுல் காந்திக்கு நெருக்கமான தமிழக எம்.பி. ஒருவர், “தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க அதி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டுள்ளதாகவும், அதை முறியடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக 190-200 இடங்களில் போட்டியிட தி.மு.க. தீர்மானித்திருப்பதால் காங்கிரசுக்கு 15 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் தி.மு.க. தரப்பிலிருந்து ராகுல் காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.

 2011-ல் 63 சீட்டுகளும், 2016-ல் 41 சீட்டுகளும் தி.மு.க. கூட்டணியில் பெற்ற காங்கிரஸ், அதே எண்ணிக்கையைக் கேட்டு அடம்பிடிக்கவில்லை. ஆனால், 30 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ள முடிவு செய்திருந்தார் ராகுல். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மட்டும் கூட்டணி; புதுச்சேரிக்கு வேண்டாம் அல்லது தமிழகம் போல புதுச்சேரியிலும் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி எனவும் தி.மு.க. தெரிவித்ததில் ராகுலுக்கு கூடுதல் அதிர்ச்சி.

இப்படிப்பட்ட சூழலில்தான், ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக தனி விமானத்தில் மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, மதுரை தாஜ் ஹோட்டலில் மு.க.ஸ்டாலினை சந்திக்க நினைத்தார். அதுகுறித்து தி.மு.க. தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இந்த விசயங்கள் எதுவுமே தமிழக காங்கிரசுக்குத் தெரியாது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ராகுல் வருவதே முதல்நாள்தான் கே.எஸ்.அழகிரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மதுரையில் ஜல்லிக்கட்டைப் பார்க்க ராகுல் வந்தபோது, அவர் அருகில் இருந்தார் உதயநிதி. சாதாரணமாக பேசிக்கொண்டனர். சீட் பற்றி ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி பேசுவார் என சொல்லப்பட்டதால் அப்செட்டாகி, தாஜ் ஹோட்டல் விசிட்டை ரத்து செய்து, பொது மக்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு டெல்லிக்குப் பறந்துவிட்டார் ராகுல். அவரை ஸ்டாலின் சந்தித்திருந்தால், சீட் விஷயத்தைத் தாண்டி கூட்டணியின் கௌரவம் வெளிப்பட்டிருக்கும். தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் அஜெண்டாவுக்கு தி.மு.க. சம்மதிக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களைக் காலி செய்து வரும் மோடியும் அமித்ஷாவும், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க.விடம் ரகசிய பேரங்களை நடத்தியுள்ளதாகவும், அதனால்தான் அங்கே கூட்டணி இல்லை என்று சொல்வதாகவும் ராகுல், சோனியா உள்பட மூத்த தலைவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இல்லையெனில், அது தமிழகத்திலும் கூட்டணி முறிவுக்கு வழி வகுக்கும்.

மதுரையிலிருந்து டெல்லி திரும்பியதும் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் முகுல் வாஸ்னிக், ஏ.கே.அந்தோணி, வேணுகோபால் ஆகியோரிடம் விவாதித்துள்ளார் ராகுல்காந்தி. அப்போது, கூட்டணியிலிருந்து காங்கிரசே விலகிச் செல்ல வேண்டும்கிற சூட்சமத்தை தி.மு.க. கையாள்கிறது. அது அவர்களுக்குத்தான் நட்டம். புதுச்சேரியை நாம் விட்டுக்கொடுத்தால் தமிழகத்திலும் கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாம் என மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளனர். ராகுலும் அந்த யோசனையில் இருப்பதால் சோனியாவின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்'' என்று விரிவாக சுட்டிக்காட்டினார் காங்கிரஸ் எம்.பி.!

தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, "காங்கிரஸை ஸ்டாலின் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், காங்கிரசுக்கு மட்டுமல்ல, தோழமைக் கட்சிகளுக்கு அதிக இடங்களில் சீட்டுகள் ஒதுக்குவது அதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் சாதகமாகும். இதைத் தடுக்க, அந்த கூட்டணிக்கு எதிராக தி.மு.க. போட்டியிடுவதுதான் புத்திசாலித்தனம். காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு சொற்ப எண்ணிக்கையில் ஜெயிப்பதை விட, குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டு அத்தனை சீட்டுகளும் ஜெயிப்பதுதானே லாபம்? புதுச்சேரியைப் பொறுத்தவரை, தனித்துப் போட்டியிடலாம் என அங்குள்ள தி.மு.க. சீனியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தற்போதைய சூழலில், முதல்வர் நாராயணசாமியை மீண்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் நிச்சயம் பா.ஜ.க. - அதி.மு.க. கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிடும். அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 5-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ தயாராகி வருகிறார்கள். பா.ஜ.க.வைத் தடுக்கும் வியூகத்தில்தான் தி.மு.க. உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினிடம் இதனைச் சொல்லியுள்ளார். அதி.மு.க. - பா.ஜ.க. தலைவர்கள் போடும் கணக்குகளைக் கவனித்துதான், அதனை முறியடிக்க பல்வேறு வியூகங்களுடன் தோழமைக் கட்சிகளை அணுகுகிறது தி.மு.க.'' என்கின்றனர் தி.மு.க. எம்.பி.க்கள்.

புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதன் மூலம் பல்வேறு மாங்காய்களை அடிக்கத் திட்டமிடும் அமித்ஷா, புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்டை துவக்கியிருக்கிறார். கடந்த வாரம் டெல்லிக்கு ரகசிய விசிட் அடித்த நமச்சிவாயம், அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசித்துள்ளார். அவர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கவைத்து, முதல்வர் நாராயணசாமியின் பெரும்பான்மை பலத்தைக் குறைக்க பா.ஜ.க. திட்டமிடுகிறது. புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து, தேர்தலுக்கு முன் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வருவதுதான் திட்டம்.

புதுச்சேரி மக்கள் தேசிய சிந்தனைக்கே அதிக முக்கியத்துவம் தருவதால் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என அமித்ஷாவிடம் சில சர்வேக்களின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. புதுச்சேரிக்கான ஸ்பெஷல் ப்ளான்களும் ரெடியாகி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக