சனி, 23 ஜனவரி, 2021

அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்கள்

Image may contain: 1 person, text that says 'TAMILNADU தீக்கதிர் CHIER அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்களை அபகரிப்பதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்துப் போராடும்.... நமது நிருபர் ஜனவரி'
  Chinniah Kasi :  · அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்களை அபகரிப்பதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்துப் போராடும்.... ஜனவரி 23, 2021 மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்கள் ஆண்டுக்கு 274.9 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு 122.3 மில்லியன் டன் மட்டுமே மேற்படி துறைமுகங்களால் கையாளப்பட்டுள்ளது. இது இத்துறைமுகங்களின் திறனில் 44 சதவீதம் மட்டுமே ஆகும். இந்நிலையில் காட்டுப்பள்ளி அருகில் 330 ஏக்கர் எல்&டிக்கு சொந்தமான சிறிய துறைமுகத்தை அதானி நிறுவனம் வாங்கி 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசு அனுமதியளித்தால் சுமார் 3,300 ஏக்கர் விளை நிலங்களும், 2,000 ஏக்கர் கடல் பகுதிகளிலும், சுமார் 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களும் அபகரிக்கப்படும் ஆபத்துள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான நிலத்தை இழப்பதுடன், லட்சக்கணக்கான மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதோடு, சுமார் 80க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்துடன் கடலரிப்பு ஏற்பட்டு பழவேற்காடு துறைமுகம் அழிந்து போவதுடன், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். எனவே துறைமுக விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. தமிழக அரசும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.மேலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் துறைமுகங்களை அதன் முழு திறனுடன் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்காக உருவாக்கப்பட இருக்கும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து செயல்படும்.
ஒரே மாதிரியான இழப்பீடு வழங்குக!
தமிழகத்தில் பவர் கிரிட் நிறுவனம் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் தொடங்கப்பட்ட 14 திட்டங்களில் 13 திட்டங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அனைத்து இழப்பீடுகளும் முழுமையாக வழங்கப்படவில்லை.
பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாவட்டத்திற்கு மாவட்டம் வித்தியாசம் இருக்கிறது. மேலும் மின்கம்பம் அமைத்த இடத்திற்கும், கம்பி செல்லும் இடத்திற்கும் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறு, துரவு கிணறு மற்றும் கட்டிடங்கள் உட்பட அனைத்துக்கும் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிலம் மற்றும் பயிர்களுக்கு அரசாணை எண் 54 இன் படி இழப்பீடு அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.
அனைத்து திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு 100 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் உள்ளது, மிகப்பெரும் அநீதியாகும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் கருணைத் தொகை வழங்க வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு வாடகை வழங்க வேண்டும்.
பயிர்கள் மற்றும் மரங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். திட்ட பாதையிலுள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்டவைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். புதிய மின் திட்டங்களை சாலை ஓரமாக புதைவடம் மூலம் செயல்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டங்கள், காத்திருப்புப் போராட்டங்களை அனைத்து அமைப்புகளை இணைத்து நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு முடிவு செய்துள்ளது.இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் கே.முகமதலி, டி.ரவீந்திரன், மாநிலச் செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, சாமி.நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் வரவேற்றார். நிறைவாக மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக