வியாழன், 17 டிசம்பர், 2020

கேரளா உள்ளாட்சி தேர்தல் இடதுசாரிகளும் காங்கிரசும் அமோக வெற்றி . பாஜக படுதோல்வி

Veerakumar - tamil.oneindia.com: திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. தெலுங்கானா மாநிலத்தில் திடீரென முன்னேறிய அதே வேகத்துடன் கேரளாவில் கொடி நாட்ட தீவிர முயற்சி எடுத்த பாஜகவுக்கு அங்கு படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது.   இது தெரிந்ததால்தான் என்னவோ.. தெலுங்கானாவுக்கு சென்றது போல பாஜக மேலிடத் தலைவர்கள் கேரளா உள்ளாட்சி தேர்தலில் தலை காட்டவில்லை. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித் ஷா என பல தலைவர்கள் படையெடுத்தனர்.      அவர்கள் வருகை தராததற்கு காரணம்.. எப்படியும் தோற்கப் போவது உறுதி என்பதை அவர்கள் உறுதி செய்துவிட்டதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், கடைசி நேரம்வரை வெற்றிக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு இருந்தது பாj p


அதே ஊழல் குற்றச்சாட்டு, அங்கேயும் கேரள தங்க கடத்தல் வழக்கில், ஸ்வப்னா கைது உள்ளிட்டவற்றை வைத்து முதல்வர் பினராயி விஜயனை பாஜக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக தலைவர்களும், இதேபோன்ற ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரத்தை கொண்டுசென்றனர். அதாவது, திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியதாக, தமிழகத்தில் எவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டதோ அதே போன்ற பிரச்சாரம், கேரளாவில் அந்த மாநில 'பிளேவர்' கலந்து பாஜகவால் முன்வைக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன


கடைசி இடத்தில் பாஜக மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளாட்சிகளில் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி அமோக முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடம் காங்கிரசுக்கு. கடைசி இடம்தான் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.


தமிழக தலைவர்கள் பாணி எப்படி, பாஜக தலைவர் முருகன், எச்.ராஜா போன்றோர் தமிழகம் முழுக்கவே யாத்திரை சென்றனரோ அப்படியான ஒரு பயணம் தான் இது. இங்கே எப்படி நடிகர்களை கட்சியில் சேர்த்து பிரச்சார பீரங்கிகளாக மாற்றி வருகிறார்களோ, அப்படியே மலையாளத்தில் முன்னணி நடிகர் சுரேஷ்கோபியை பாஜகவுக்கு இழுத்தனர். அவரை வைத்து பிரச்சாரம் செய்து பார்த்தனர். ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.


தமிழகம், கேரளாவின் தனித்துவம் தமிழகமும், கேரளாவும் எப்போதுமே தனித்துவமாக வாக்களித்து வருகின்றனர். நாடு முழுக்க வலுவிழந்து போயிருந்தாலும் கேரளாவில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெறுவது வாடிக்கையாக இருக்கிறது. தமிழகத்திலும் திராவிட கட்சிகள் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. திமுக அல்லது அதிமுகதான் தமிழகத்தில் வெற்றி பெறுகிறது.

தங்கள் கொள்கையில் கேரளா மற்றும் தமிழக மக்கள் எப்போதுமே ஒரே உறுதிப்பாட்டில் இருக்கிறார்கள். மனிதவள மேம்பாடு, கல்வி, சுகாதாரம் என பல்வேறு விஷயங்களில் இந்த உறுதியின் காரணமாக அவர்களுக்கு நல்ல பலனும் கிடைத்து உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்த்தால் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில், பாஜகவின் யுக்திகள் எதுவுமே எடுபடாது.. அதற்கு கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், ஒரு முகம் காட்டும் கண்ணாடி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக