வியாழன், 17 டிசம்பர், 2020

BBC : இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: விடுதலை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேட்டி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலை விவகாரத்தில் நிலையான தீர்வு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் புதன்கிழமை பேசிய அவர், இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் குறித்து இந்திய தூதரகத்துடன் விசேட பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்திய உயர்மட்ட குழுவும், இலங்கை உயர்மட்ட குழுவும் காணொளி காட்சி வழியாக இந்த விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவிருப்பதாகவும் வரும் 22 மற்றும் 30ஆம் தேதிகளில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.    இனி வரும் காலங்களில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட வேளையில், கொரோனா தொற்றுக்கு பிந்தைய நாட்களில் சில இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்று முன்தினம் 5 இந்திய மீனவ படகுகள், 36 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இரு நாட்டு நல்லுறவுக்கு முக்கியத்துவம் தரும் அதே சமயம், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய படகுகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் அனுமதிக்கப்பட்ட படகுகளை கொண்டு செல்லுமாறும் இந்திய மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை அவற்றை கொண்டு செல்ல எவரும் முன்வரவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

எனவே அந்த படகுகளை அழிப்பதா அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பணமாக்குவதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த படகுகள் விற்பனை செய்யப்பட்டு பணமாக்கப்படும்பட்சத்தில், அந்த பணத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தற்போது புதிய பிரச்னை எழுந்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.>இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விற்கப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் தொகையை தங்களுக்கு வழங்குமாறு இந்திய மீனவர்கள் கோரி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களை போலவே வலைகள் சேதமாக்கப்பட்ட மற்றும் படகுகள் சேதமாக்கப்பட்ட இலங்கை மீனவர்களும் இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கையில் காவலில் உள்ள தங்கள் நாட்டு மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் அந்த நல்லெண்ணத்தை இந்திய தரப்பே முன்னெடுக்க வேண்டும். காரணம், இந்திய மீனவர்களே அத்துமறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைகிறார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மீனவர் விவகாரம் தொடர்பாக வரும் 22 மற்றும் 30ஆம் தேதிகளில் இந்திய - இலங்கை பேச்சுவார்த்தையில் அனைத்து அம்சங்களும் காணொளி ஊடாக ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

இந்திய மீனவர்களால் இலங்கை கடல் வளம் அழிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், அதன் தாக்கத்தை இலங்கை மீனவர்கள் மட்டுமின்றி இந்தியாவும் அனுபவிப்பதாக கூறினார்.

எனவே, இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது நிலையான தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்திய - இலங்கை இடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் மீனவ பிரச்னைக்கு தீர்வு காண அண்மையில் கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லே இணக்கம் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், கடந்த 7ஆம் தேதி கோபால் பாக்லே ஆலோசனை நடத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

இதற்கிடையே, யாழ்ப்பாணம் ஊர்காவல் துறை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 22 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளிலேயே 18ஆம் தேதி வரை தனிமைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. எஞ்சிய மீனவர்கள் கற்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக