வியாழன், 17 டிசம்பர், 2020

பிராம்மணர்களுக்கு கன்னிகாதானம் செய்தவன் சிவலோகத்தை அடைவான்.

Image may contain: 1 person, text that says ''பிராம்மணர்களுக்கு பசு தானம் செய்தவன் முக்தியடைவான், கன்னிகாதானம் செய்தவன் சிவலோகத்தை அடைவான் -திருமதி. சௌ.பாலசரஸ்வதி தேவ குஞ்சரியம்மாள் இயற்றிய "சூத சங்கிதா ஸாராம்ருத வசனம்" நூல்,8 ஆவது அத்'

Dhinakaran Chelliah : அன்னதானம் கன்னிகாதானம் பசுதானம் அமாவாசியில் நிஷ்காமிய சித்தனாய் அந்தணர்க்கு அன்னமிட்டவன் சிவ பெருமானுடைய சாரூபமுத்தியை அடைவான். 

கிருஷ்ணபட்சம் சதுர்த்தசியில் பிராம்மணர்களைப் பரமசிவனாகப் பாவித்து அன்னமிட்டவன் கன்மபந்தமொழிந்து மோட்சம் அடைவான். திரயோதசியில் வேதியர்க்கன்ன மிட்டவன் பூலோகத்தில் பெருவாழ்வு வாழ்ந்து பிறகு பிரம்மலோகத்தைப் பெறுவான். துவாதசியில் பிராம்மணர்களை விஷ்ணுவாகக் கருதி அவர்களுக்கு அன்னமிட்டவன் தேவனாய் வாழ்ந்து பின் வைகுந்தத்தை அடைவான். ஏகாதசி தினம் உபவாசமிருந்து துவாதசி தினம் விஷ்ணு சொரூபமாகக் கருதிப் பிராம்மணர்களுக்கு அன்னமிட்டவன் சகல பாவங்களினின்றும் விடுபடுவான். தசமி திதியில் பிராம்மணர்களை இந்திரனாகப் பாவித்து அன்னமிட்டவன் தேவனாய் இந்திர லோகத்தில் வாழ்வான். நவமி திதியில் எமனைச் சிந்தித்து பிராம்மணர்களுக்கு அன்னமிட்டால் எமன் எப்போதும் அவர்களிடம் மகிழ்ச்சி உடையவனாயிருப்பான்.

அஷ்டமியில் ஶ்ரீபரமேசுவரனை உத்தேசித்து வேதியர்க்கு அன்னமிட்டவன் சகல பாவங்களும் ஒழிந்து ஈசன் திருவடியை அடைவான்.
சப்தமியில் சந்திரனை உத்தேசித்து வேதியர்க்கு அன்னமிட்டவன் உலகத்தில் சிறந்து வாழ்ந்து பின் சந்திரலோகத்தை அடைவான்.
ஷஷ்டி திதியில் சூரியனைக் கருதி அந்தணர்க்கு அன்னமிட்டவன் ஒளிரூபமுடையவனாய் சூரியலோகத்தை அடைவான்.
பஞ்சமி திதியில் உமாதேவியை சிந்தித்து வேதியர்க்கு அன்னமிட்டவன் சகல பாவங்களுமொழிந்து தத்துவஞானத்தைப் பெறுவான்.
சதுர்த் திதியில. இலட்சுமியை உத்தேசித்து மறையவர்களுக்கு அன்னமிட்டவன் எந்நாளும் அழியாத செல்வத்தை அடைவான்.
திரிதியையில் பிராம்மணர்க்கு அன்னமிட்டால் மும் மூர்த்திகளும் அவனுக்கு அநுக்கிரகம் செய்வார்கள்.
துவிதியையில் வேதியர்க்கு அன்னமிட்டால் அவனிடத்தில் சகல வேதங்களும் நிறைந்திருக்கும்.
பிரதமையில் அன்னமிட்டவன் மெய்ஞ்ஞானத்தைப் பெற்று மோட்சத்தை அடைவான்.
பிராம்மணர்களுக்கு பசு தானம் செய்தவன் முக்தியடைவான்,கன்னிகாதானம் செய்தவன் சிவலோகத்தை அடைவான்.
-திருமதி.சௌ.பாலசரஸ்வதி தேவ குஞ்சரியம்மாள் இயற்றிய “சூத சங்கிதா ஸாராம்ருத வசனம்” நூல்,எட்டாவது அத்யாயம்.
திதி,அமாவாசி,பிரதமை என நீட்டி எழுதாமல் எல்லா நாட்களிலும் பிராம்மணர்களுக்கு அன்னதானம் இடுவது சிறந்தது என ஒற்றை வரியில் எழுதியிருக்கலாம்.
இதற்கு முந்தைய #மூடநம்பிக்கை பதிவில் பிண்ணூட்டத்தில்
“Nobody forced people to do this... Its people's choice... Necessary or unnecessary is decided by whoever does it...” என ஒரு நண்பரும்,
“It all depends upon individual beliefs” என இன்னொரு நண்பரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
எந்த ஒரு விசயத்தையும் வைதிகம் கட்டாயப் படுத்தவில்லை என்பது முற்றிலும் தவறு.அதற்கு உதாரணம்தான் மேலுள்ள பதிவு. அதாவது பிராம்மணர்களுக்கு அன்னமிட்டால் மோட்சம், பிராம்மணர்களுக்கு பசுதானம் கன்னிகாதானம் அளித்தால் சிவலோகத்தை அடைவான் என ஆசை காட்டுவது. அதுமட்டுமல்லாமல் கட்டளையிடும் நூலைப் பற்றி இன்னொரு உதாரணம் இதோ;
“தானம் வாங்குதற்கு உரிய உத்தம பாத்திரமாவார் வேதாகமங்களையும் சிவபுராணங்களையும் ஓதி உணர்ந்தவர்களாய், பாவங்களை முற்றக் கடிந்தவர்களாய், சந்தியாவந்தனம் சிவபூசை முதலிய கருமங்களைத் தவறாமல் விதிப்படி சிரத்தையோடு செய்பவர்களாய், இல்லறத்தில் வாழ்பவர்களாய் வறியவர்களாய் உள்ள பிராமணர்கள்.இவர்களல்லாத பிறருக்குத் தானஞ்செய்தவர், பத்து பிறப்பு ஓந்தியாயும்(நொண்டி அல்லது ஊனம்), மூன்று பிறப்புக் கழுதையாயும்,இரண்டுப்பிறப்பு தவளையாயும்,ஒரு பிறப்பு சண்டாளராயும்,
பின் சூத்திரராயும், வைசியராயும்,அரசராயும்,பிராமணராயும் பிறந்து வறுமையினாலும், நோயினாலும் வருந்தி உழலுவர். ஆதலால் உத்தம பாத்திரமாகிய பிராமணருக்கே தானஞ்செய்தல் வேண்டும்”
-சிவாலய தரிசன விதி நூலில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்
இன்னும் உதாரணங்கள் வைதிக நூல்களில் ஏராளம் உண்டு. இனிமேலாவது அவரவர்களது நம்பிக்கை, யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என எழுத வேண்டாம் என நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக