சனி, 26 டிசம்பர், 2020

இரட்டை இலையை முடக்க சதி: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

minnambalam :அதிமுகவின் உச்சமாக கருதப்பட்ட பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அக்கட்சி முதல் முறையாக சட்டமன்றப் பொதுத் தேர்தலை 2021 ஆம் ஆண்டு சந்திக்க இருக்கும் நிலையில்... இன்னமும் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய கூட்டணி கட்சிகள் இந்த நடவடிக்கையை முழுமையாக வரவேற்கவில்லை. குறிப்பாக அதிமுக வின் முக்கிய கூட்டணி கட்சியான பாஜக பல்வேறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தில் தற்போதைய துணை முதல்வரான பன்னீர்செல்வத்துக்கு முழுமையான ஒப்புதல் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாகவே அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார் என்றும் அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

இதை உறுதிப்படுத்துவது போல கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வத்துக்குமிடையே மீண்டும் இடைவெளி விடுவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மின்னம்பலத்தில் எடப்பாடி ,ஓ. பன்னீர் தொடரும் மோதல் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் பற்றி பாரதிய ஜனதா கட்சி விரைவில் அறிவிக்கும் என தேசிய மகளிர் அணிச் செயலாளர் வானதி சீனிவாசனும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் தான் இன்று கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் விருத்தாசலத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க சதி நடக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்று டிசம்பர் 26 விருத்தாசலத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும் மாவட்டச் செயலாளரும், மண்டலப்பொறுப்பாளரும் அமைச்சருமான சிவி சண்முகம்...

"எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இல்லாத நிலையில் நாம் சந்திக்க இருக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. கட்சிக்கு சில தலைவர்கள் வேண்டுமானால் துரோகம் செய்து இருக்கலாம். ஆனால் தொண்டர்கள் யாரும் அதிமுகவுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.

எம்ஜிஆரின் வாரிசு என்று யாரும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எம்ஜிஆரின் வாரிசு என்பது நமது இரட்டை இலை சின்னம் தான். அந்த சின்னத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. இந்த தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்கிற தேர்தல். தேர்தலில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். யார் எம்எல்ஏ ஆகிறோம் யார் மந்திரி ஆகிறோம் என்பது பற்றி கவலை இல்லை. கருப்பு சிவப்பு வெள்ளை கரை வேட்டியை கட்டி இருக்கும் நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதிமுகவின் ஐம்பதாம் ஆண்டு விழாவை நாம் ஆட்சியிலிருந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும். ஆனால் நமக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் முடக்க சதி நடக்கிறது” என்று பேசியுள்ளார்.

ஜெ. மறைவுக்குப் பின் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக சென்ற நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதன்பின் ஓ.பன்னீர்- எடப்பாடி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சின்னத்தை மீட்ட நிலையில், இப்போது மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருப்பது அரசியல் அரங்கத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக