புதன், 2 டிசம்பர், 2020

சார்பட்டா பரம்பரையின் சாம்பியன் ‘நாக்அவுட் கிங்’ காசிமேடு ஆறுமுகம்! குத்துச்சண்டை.. தமிழகம் இழந்த ஒலிம்பிக் வாய்ப்புகள்

Gnatppan Siva : · சார்பட்டா பரம்பரையின் கடைசி காலத்து அசைக்கமுடியாத சாம்பியனாக இருந்து, ‘நாக்அவுட் கிங்’ காசிமேடு ஆறுமுகம். 1977 வரைக்கும் இவர் கொடிதான் பறந்தது. ‘‘எங்க பரம்பரைய ‘சதுர்சூரிய சார்பட்டா பரம்பரை’ன்னு சொல்வாங்க. அதுக்கு அர்த்தம் தெரியாது!, பாக்ஸிங் மேடையில முதல்ல அடிப்பதுபோல லெப்ட், ரைட்னு எதிராளி முகத்துக்கு முன்னாடி கையைக் காட்டி பயம் காட்டுவேன். ‘இவன் அடிக்கமாட்டான்’னு எதிராளி முடிவுக்கு வரும்போது சடார்னு வெயிட்டா ஒரு பன்ச் விடுவேன். இதுதான் என் ஸ்டைல். இதுக்குத்தான் ‘நாக்அவுட் கிங்’னு பேர் கிடைச்சுது. -

நாக் அவுட் ஆறுமுகம்.. வன்முறை பூமியாக இப்போது காட்டப்படும் வடசென்னைதான் அந்த வீரம் விளைந்த மண்.             இந்தப் பகுதியில்தான் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்ற பெயர்களில் அமைந்த இரண்டு குழுக்களிலிருந்து புறப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோதியிருக்கிறார்கள்.. ‘‘போட்டியில் மோதும் இரண்டு பாக்ஸர்களையும் ஸ்டூடியோவில் வைத்து முதலில் போட்டோ எடுப்பார்கள்.             இந்த போட்டோவைத்தான் பிட் நோட்டீஸ், விளம்பர தட்டிகள், போஸ்டர்கள், தியேட்டர் ஸ்லைடுகளில் காண்பிப்பார்கள். போட்டோவில் இரண்டு பாக்ஸர்களும் ஈக்குவலா தெரியணும். இல்லாவிட்டால் பாக்ஸர்களுக்கான அசோசியேஷன் அனுமதிக்காது. எல்லா போட்டிகளுக்கும் ஒரு கான்டிராக்டர் இருப்பார். அவரிடம் கான்ட்ராக்டில் கையெழுத்து போட்டதும்தான் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியும்." -பாக்ஸர் மோகன்..

 


 kungumam :பெருமிதம் கொள்ளவும், ஆரவாரம் செய்யவும், வெற்றித் தருணங்களை ஒலிம்பிக் போட்டிகளில் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுகிறோம். இந்தியனாக இது வேதனை தருகிறது; தமிழர்களுக்கு அதில் இன்னும் வேதனை. தோற்கிறார்களோ, ஜெயிக்கிறார்களோ... அதிகம் வீரர்களை அனுப்பி வைத்த மாநிலம் என சொந்தம் கொண்டாடுகிறது குட்டியூண்டு ஹரியானா. நாமோ, ககன் நரங் ஜெயித்ததும் ‘அவர் சென்னையில் பிறந்தவர்’ என ஆறுதல் அடைகிறோம்.

ஆனால், குத்துச்சண்டை மேடையை ஆக்ரோஷமாக ஆக்கிரமித்து வெற்றிக்கொடி நாட்டிய எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய களமாக தமிழ் மண் இருந்தது. அந்தப் பாரம்பரியத்தைக் கண்டுகொள்ளாமலும் கைதூக்கி விடாமலும் அழித்தது அரசாங்கம்தான்! நூற்றாண்டுகளைத் தாண்டிய அந்த வீரப் பரம்பரையின் வரலாறுகூட இங்கே யாருக்கும் தெரியாது என்பதுதான் சோகம்...,, வன்முறை பூமியாக இப்போது காட்டப்படும் வடசென்னைதான் அந்த வீரம் விளைந்த மண். இந்தப் பகுதியில்தான் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்ற பெயர்களில் அமைந்த இரண்டு குழுக்களிலிருந்து புறப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோதியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி என தமிழர்கள் கொண்டாடிய மாபெரும் மனிதர்களே ரசிகர்கள் போல உட்கார்ந்து இந்தக் குத்துச்சண்டையை ரசித்திருக்கிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்! 

‘பப்ளிக் பாக்ஸிங்’ எனப்பட்ட இந்தப் போட்டிகள் 1989 வரைகூட நடந்திருக்கின்றன. இன்று வடசென்னையிலிருக்கும் நேரு ஸ்டேடியம், சூளையிலிருந்த கண்ணப்பர் திடல் மற்றும்
தண்டையார் பேட்டை மைதானம் போன்ற அன்றிருந்த பொட்டல் மைதானங்களில்தான் போட்டிகள் நடந்தன.

மைதானத்தின் நாற்புறமும் தட்டிகள் கட்டி, நடுவில் வீரர்கள் மோதுவதற்கான மேடை அமைத்து, மேடையின் நாலு பக்கமும் கயிறுகள் கட்டப்பட்டு, பரபரப்பான கலவர சூழ் நிலையில் நடந்த போட்டி ஒவ்வொன் றும் திருவிழா.

இந்தப் போட்டிகளின் கடைசி கால சாம்பியன்களாக இருந்தவர்களில் ஒருவர், இடியப்ப நாயக்கர் பரம்பரையில் வந்த டெக்னிக்கல் பாக்ஸர், ஸ்டைலிஷ் பாக்ஸர் டில்லிபாபு.
‘‘எங்க பரம்பரையோட எல்லப்ப செட்டியார் பரம்பரை ஒன்றும் இணைந்திருந்தது. நான் பதினெட்டு வயசுல குத்துச்சண்டை மேடைக்கு வந்தவன். அதுக்கு முன்னால இங்க தமிழ் குத்துச்சண்டைதான் பழக்கமா இருந்தது. முகத்தில் மட்டுமே குத்துவதை இப்படிச் சொல்வாங்க. நாங்க போட்டது ஆங்கிலக் குத்துச்சண்டை. இடுப்புக்கு மேலே எங்கு வேண்டுமானாலும் குத்துவதுதான் இது. இப்போ இருக்கும் குத்துச்சண்டையைப் போன்றது. எனக்கு ஆறு சகோதரர்கள். எல்லோருமே முறையா பயிற்சி எடுத்தவங்க.

ஸ்டேட் மற்றும் நேஷனல் பாக்ஸிங் போட்டிகள்ல மோதியிருக்கேன். இதை ‘அமெச்சூர் பாக்ஸிங்’னு சொல்வாங்க. சாம்பியன் ஆனதால, எனக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. அப்ப ரொம்ப குறைவான சம்பளமுள்ள வேலை அது. அதை வேண்டாம்னு சொல்லிட்டு, முழுநேர புரொஃபஷனல் பாக்ஸரா மாறினேன்.

புரொஃபஷனல் பாக்ஸிங் என்றால் பப்ளிக்கில் சண்டை போடுவது. அமெச்சூரில் பணம் கிடைக்காட்டாலும் மரியாதை கிடைக்கும்; பாதுகாப்பானதா இருக்கும். ஆனால் ஊக்கம் பத்தாது. பப்ளிக் பாக்ஸிங் ரிஸ்க்கானது. நிறைய பணம் சம்பாதிக்கலாம். அமெச்சூர் போட்டி மாதிரி இல்லாமல் இதில் பாக்ஸிங் விதிகள் எல்லாம் கிடையாது. அப்படிப்பட்ட போட்டிகள் நிறைய நடந்திருக்கு’’ என்கிறார் டில்லிபாபு.

டில்லிபாபுவின் தம்பியான மோகனும் பாக்ஸர்தான். ‘‘போட்டியில் மோதும் இரண்டு பாக்ஸர்களையும் ஸ்டூடியோவில் வைத்து முதலில் போட்டோ எடுப்பார்கள். இந்த போட்டோவைத்தான் பிட் நோட்டீஸ், விளம்பர தட்டிகள், போஸ்டர்கள், தியேட்டர் ஸ்லைடுகளில் காண்பிப்பார்கள். போட்டோவில் இரண்டு பாக்ஸர்களும் ஈக்குவலா தெரியணும். இல்லாவிட்டால்
பாக்ஸர்களுக்கான அசோசியேஷன் அனுமதிக்காது. எல்லா போட்டிகளுக்கும் ஒரு கான்டிராக்டர் இருப்பார். அவரிடம் கான்ட்ராக்டில் கையெழுத்து போட்டதும்தான் போட் டோவுக்கு போஸ் கொடுக்க முடியும்.

முதல் போட்டியிலேயே பணம் கொட்டாது. பெயர் தெரியாத யாருக்கும் பெரிதாக பணம் போட முன்வரமாட்டார்கள். முதல் போட்டியில் ஜெயித்தால், அடுத்த போட்டியில் ரேட் உயரும். ஒரு போட்டியில் தோற்றால் அடுத்தடுத்த போட்டிகளில் நம்ம ரேட் கம்மியாகிடும். போட்டி நடத்துவதற்கான பணமும், ஜெயித்த வீரர்களுக்கான பணமும், பார்வையாளர்களிடமிருந்து டிக்கெட் மூலம் கான்ட்ராக்டர் வசூலிக்கும் பணமே. கான்ட்ராக்டர் முதல் போட்டு இந்தத் தொழிலுக்கு வருவார். ஒரு பலமான எதிராளியை முதலில் எங்களிடம் சொல்வார். நாம் அவரிடம் பேரம் பேசணும். நம்ம திறமை மேல கான்ட்ராக்ட ருக்கும் நம்பிக்கை இருந்தால் கேட்கும் ரேட்டுக்கு ஒத்துக்குவார். பலமான இருவரின் மோதலைப் பார்க்க மக்கள் நிச்சயம் விரும்புவார்கள். இதனால் டிக்கெட் வசூல் அமோகமாக இருக்கும்.
செட்டில்மென்டின் பாதிப்பணம் கான்ட் ராக்டில் கையெழுத்திடும்போதும், மீதி போட்டியிட மேடையில் ஏறுவதற்கு முன்பும் கொடுக்கப் படும். ஜெயித்தால் அடையாளமாகக் கொடுப்பார்கள். அண்ணன் வாங்கிய கடைசி பரிசுத்தொகை சுமார் பதினேழாயிரம் ரூபாய்’’ என்றார் மோகன்.

போட்டியிடும் வீரர்கள், தங்கள் நண்பர்கள், உறவுகள் புடைசூழ மைதானத்துக்கு ஊர்வலமாகச் செல்வார்கள். அவர்கள்மீது மாடிகளிலிருந்து பெண்கள் பூ தூவுவார்கள். சிலர் கையில்லா பனியனுடனும் சிலர் வெற்று உடம்புடனும் போட்டி யிடுவார்கள். ஒரு போட்டியைக் காண குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரசிகர்கள் வருவதுண்டு. பெண்கள் வருவதில்லை. வீரர்களை உற்சாகப்படுத்த அவர்கள் போடும் கூச்சல் காதைக் கிழிக்கும். போட்டி இரண்டு, நான்கு, ஆறு, பத்து, பன்னிரண்டு என பல ரவுண்டுகள் போகும். ஒரு மேடையில் பத்திலிருந்து பதினைந்து ஜோடிகள் வரை மோதுவதுண்டு. இதை ஜதை என்பார்கள். ஆரம்பத்தில் ஜூனியர் வீரர்கள் மோதுவார்கள். போகப்போக சீனியர்களின் மோதல் அனல் பறக்கும். சில சமயம் தங்கள் ஆதர்ச ஹீரோக்களின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் கலவரத்திலும் இறங்கியதுண்டு.

சார்பட்டா பரம்பரையின் கடைசி காலத்து அசைக்கமுடியாத சாம்பியனாக இருந்து, ‘நாக்அவுட் கிங்’ என்று பெயர் எடுத்தவர் காசிமேடு ஆறுமுகம். 1977 வரைக்கும் இவர் கொடிதான் பறந்தது.
‘‘எங்க பரம்பரைய ‘சதுர்சூரிய சார்பட்டா பரம்பரை’ன்னு சொல்வாங்க. அதுக்கு அர்த்தம் தெரியாது! பாக்ஸிங் மேடையில முதல்ல அடிப்பதுபோல லெஃப்ட், ரைட்னு எதிராளி முகத்துக்கு முன்னாடி கையைக் காட்டி பயம் காட்டுவேன். ‘இவன் அடிக்கமாட்டான்’னு எதிராளி முடிவுக்கு வரும்போது சடார்னு வெயிட்டா ஒரு பன்ச் விடுவேன். இதுதான் என் ஸ்டைல். இதுக்குத்தான் ‘நாக்அவுட் கிங்’னு பேர் கிடைச்சுது.

இந்த விளையாட்டுல தோப்பு, ஜெயிப்புன்னெல்லாம் கிடையாது. விளையாடுறதுதான் முக்கியம். சில பாக்ஸர்கள் வெளியிலெல்லாம் ரவுசு பண்ணினாங்க. ரவுடித்தனம் பண்றவங்க, ஸ்டேஜில் ஜெயிக்கமுடியாது. பாக்ஸிங்குல குழந்தைத்தன்மையும் விளையாட்டுத்தன்மையும் இருக்கணும். சிலர் இதில் இறந்திருக்காங்க. சிலர் கோமா வரைக்கும்கூட போயிருக்காங்க. இந்த பாக்ஸிங் வாழ்வா, சாவா என்பதை தீர்மானிக்கக்கூடியதா பலருக்கு ஆகியிருக்கு’’ என்கிறார் ஆறுமுகம்.

வடசென்னையில் வளர்ந்த ஓவியர் வெங்கடேசன், இந்தக் குத்துச்சண்டை பரம்பரையினர் தொடர்பாக ஆராய்ச்சி செய்தவர். ‘‘பப்ளிக் பாக்ஸிங்குல பல ரவுண்டுகள் நின்று விளையாடுபவர்களுக்குத்தான் ரசிகர்களிடையே மரியாதை கிடைக்கும். போட்டியில் ஒரு தலைமை ரெஃப்ரியுடன் நாலு சைட் ரெஃப்ரியும் இரண்டு சைடுகளிலும் நிப்பாங்க. எதிராளியின் முகத்தில் பல்வேறு ரவுண்டுகளில் குத்திய வீரர்களுக்குத்தான் டெக்னிக்கல் அடிப்படையில் வெற்றி கிடைக்கும். இன்னொரு விஷயம்... எதிராளியை ஒரு குத்தில் வீழ்த்தணும்னு எந்த பாக்ஸரும் நினைக்கமாட்டான். ஒரு அடியில் வீழ்ந்திட்டா, அந்த பாக்ஸருக்கு அடுத்த போட்டியில் பணத்தொகை கம்மியாகிடும். இது அவன் குடும்பத்தை பாதிக்கும். இதற்காக பல ரவுண்ட் ஆடுவார்கள். ஆனால் பல ரவுண்ட் ஆடுவதற்கு உடலில் சக்தி இருக்கவேண்டும். இதற்காகத்தான் உடலைப் பேணுவதில் அதிக அக்கறை எடுப்பார்கள் பாக்ஸர்கள். மேடையில் வெறும் வீறாப்புடன் வந்தவர்கள், கோபக்காரர்களாக பொங்கியவர்கள், போதைப் பொருளின் மயக்கத்தில் வந்தவர்கள் பெரும்பாலும் தோற்றதுதான் சரித்திரம். மனமும் உடலும் ஒருமித்து இருந்தால்தான் இந்தப் போட்டியில் நின்று விளையாடமுடியும். சிலர் போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே மேடையில் ஏறி கோல்ட் செயினைக் காட்டி ‘எங்கூட மோதத் தயாரா’ன்னுகூட கேட்பாங்க. சிலவேளை இதுக்குக்கூட போட்டி நடக்கும். பப்ளிக் பாக்ஸிங் சென்னை மக்கள் இழந்த ஒரு மாபெரும் கேளிக்கை’’ என்கிறார் அவர்.

வாழ்க்கையை ஓட்ட இது உதவவில்லை என்பதால், இவர்களில் யாருமே அடுத்த தலைமுறையை குத்துச்சண்டை மேடைக்குக் கொண்டுவரவில்லை. காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பழைய விஷயமாகிவிட்டது பாக்ஸிங். முறையான வழிகாட்டுதல் இருந்திருந்தால், இவர்களில் பலர் இந்தியாவைப் பெருமைப்படச் செய்திருப்பார்கள்.
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக