வியாழன், 3 டிசம்பர், 2020

முகக்கவசம் அணியாததால் அந்தரத்தில் விமானத்துக்குள் அடிதடி!


 puthiyamugam.com : ஆம்ஸ்டெர்டாமிலிருந்து இபிஸா நகருக்குச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகளுக்கிடையே முகக் கவசம் அணிவது தொடர்பான பிரச்னை வன்முறையில் சென்று முடிந்துள்ளது.

பலர் தடுக்க இரு ஆண்கள் கோபமாகச் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டையில்லாத ஒருவரை பலர் தடுத்துப் பிடிக்கிறார்கள். அவரை மற்றொருவர் தாக்குகிறார். அங்கிருப்பவர்கள் “நிறுத்துங்கள், இங்கே குழந்தைகள் உள்ளனர்.” என்று கத்துகின்றனர். அந்த வீடியோவின் கடைசியில் சட்டையில்லாத அந்த நபர் கீழே தள்ளப்பட்டு மற்றவர்களால் தரையில் அழுத்தி பிடிக்கப்பட்டிருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த பதிவில் ’இச்சண்டையில் ஈடுபட்ட ஒருவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் மது அருந்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஎல்எம் நிறுவன விமானத்தில் நடந்த இந்த சண்டையின் காரணமாக அந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரும் அவரது நண்பரும் விமானத்துக்குள் முகக் கவசம் அணிய மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கேஎல்எம் நிறுவனம், அதனுடைய விமானங்களில் பயணம் மேற்கொள்ளும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் எனவும், இவை அல்லாதவர்கள் விமானத்தில் ஏறுவதற்கே தடை செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக