புதன், 2 டிசம்பர், 2020

மேட்டுப்பாளையம்.. 17 உயிர்களை பறித்த தீண்டாமை சுவர்! மீண்டும் புதிய சுவரிலும் இதே..

மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக : 2 டிசம்பர் 2020 கடந்த ஆண்டு, டிசம்பர் 02 ஆம் தேதி அதிகாலை கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் சுமார் 25 அடி உயர கருங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தையே உலுக்கிய அந்த கோர விபத்து நடந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இன்றுவரை அப்பகுதியில் பாதுகாப்பில்லாத நிலையில் பல குடியிருப்புகள் இருக்கின்றன.                     சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தனது உறவினர்களை இழந்த மணி, வலிநிறைந்த நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். அன்றைய தினம் எங்கள் பகுதியில் கனமழை பெய்தது. மழை பெய்தாலே ஆதி திராவிடர் காலனியை மட்டும் வெள்ளநீர் சூழ்ந்து கொள்ளும். காரணம், இப்பகுதி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. இடிந்து விழுந்த சுவரின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் எனது இரண்டு சகோதரர்களின் குடும்பங்கள் வசித்து வந்தன.          நான், எனது மகன் மற்றும் மருமகளோடு ஓடையின் அருகே வசித்து வந்தேன். அதிக மழைப் பொழிவு காரணமாக எனது வீட்டுக்குள் மழைநீரும் சாக்கடைநீரும் இடுப்பளவு வந்து விட்டது. அருகில் வசிப்பவர்களின் உதவியோடு வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த போது, எனது தம்பியின் வீடு இடிந்துவிட்டதாக தகவல் வந்தது."

"அலறி அடித்துக்கொண்டு அங்கு சென்று பார்க்கையில், அந்த இடம் இருட்டாகவும் நிசப்தமாகவும் இருந்தது. வெளிச்சம் அடித்து பார்க்கையில்தான் சுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது தெரிய வந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். எனது உறவினர்கள் இதில் இருக்க மாட்டார்கள், அருகில் இருக்கும் நண்பர்கள் வீட்டில்தான் இருப்பார்கள் என நம்பிக்கை வைத்து அனைவரது வீட்டிலும் சென்று பார்த்தேன். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. எனது தம்பி, அவரது மனைவி, மூத்த சகோதரரின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் தூங்கிய நிலையிலேயே இறந்து கிடந்தனர்," என கூறியவாறு கதறி அழத்துவங்கிவிட்டார் மணி.

மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: இன்னும் தெருவில் வாழும் தலித் மக்கள்
படக்குறிப்பு,

மணி

"அந்த விபத்திற்குப் பிறகு நான் இந்த பக்கம் வருவதேயில்லை. அந்த விபத்து ஆற்றமுடியாத மனவேதனையைத் தந்துவிட்டது. தினம்தோறும் அதை நினைத்து அழுது கொண்டுதான் இருக்கிறோம். சுவர் இடிந்து விழுந்த விபத்துக்கு பிறகு நடூர் பகுதி மக்கள் அனைவருக்கும் அச்சம் உருவாகியுள்ளது. அடுத்துவரும் ஏதாவது ஒரு கன மழையில் எங்கள் வீடுகளும் சரிந்து விழும் நிலையில்தான் உள்ளது. எனது சகோதரர்களின் குடும்பங்கள் வசித்து வந்த இடம் காலி நிலமாக தற்போது உள்ளது. ஆனால், விபத்துக்குக் காரணமான சுவர் இருந்த இடத்தில் மீண்டும் ஒரு புதிய சுவர் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே வீடுகட்டி வாழ எங்களுக்கு தைரியமுமில்லை, யாரையும் எதிர்க்க சக்தியுமில்லை," என கனத்த மனதோடு பேசினார் மணி.

மணியின் தாய் கமலாம்மாளுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஏற்கனவே முதல் மகனை இழந்த இவர், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூத்த மகனின் குடும்பத்தையும், மற்றொரு மகன் மற்றும் அவரது குடும்பத்தையும் இழந்து நிற்கிறார்.

மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: இன்னும் தெருவில் வாழும் தலித் மக்கள்
படக்குறிப்பு,

அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் சுவருக்கு அருகே அமர்ந்து பேசும் கமலாம்மாள்.

"அன்று ஒரு விசேஷத்திற்காக திருப்பூர் வரை சென்றுவிட்டேன். வந்து பார்க்கையில் எனது மகன்களின் குடும்பம் மொத்தமாக செத்துக் கிடந்தது. தினமும் அவர்களின் வீட்டில்தான் தூங்குவேன். அன்று வெளியூர் போகாமல் இருந்திருந்தால் நானும் இறந்திருப்பேன். மகன், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என அனைவரையும் இழந்துவிட்டு உயிர் வாழ முடியாமல் தவித்து வருகிறேன்," என தெரிவித்த கமலாம்மாள் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை கையில் எடுத்து கதறி அழத்தொடங்கிவிட்டார்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் நிதி உதவி, தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு, வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு மற்றும் பாதுகாப்பு இல்லாத வீடுகளுக்கு மாற்றுவீடு ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்கும் என முதலமைச்சர் எடப்பாடி. கே. பழனிசாமி அப்போது தெரிவித்திருந்தார்.

ஆனால், அரசு சார்பில் நிதி உதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக விபத்தில் உறவினர்களை இழந்த பலர் புகார் தெரிவிக்கின்றனர்.

"எனது குடும்பத்தில் மட்டுமே 7 பேரை இழந்துள்ளேன். ஆனால், ஒருவருக்கான நிதி உதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இறந்த மற்றவர்களுக்கான நிதியை வழங்குவதில் வாரிசு சிக்கல் இருப்பதாக கூறி தர மறுக்கின்றனர். ஒவ்வோர் அரசு அலுவலகமாக அலைந்து பார்த்துவிட்டேன். இறந்த 6 பேருக்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை. என் குடும்பத்தில் அனைவருமே தினக்கூலி வேலைகள் செய்பவர்கள்தான். அரசு வழங்கும் நிதி எங்களின் வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். மேலும், வீடு கட்டித் தருவதாக கூறினார்கள். இன்றுவரை நான் எனது மகளோடு சேர்ந்து வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். உறுதியளித்தபடி எனது பேரனுக்கு வேலைவாய்ப்பாவது உருவாக்கி தாருங்கள் என கோரிக்கை வைத்தும் எந்த பலனுமில்லை" என வெறுத்த மனநிலையில் பேசிமுடித்தார் கமலாம்மாள்.

இந்த விபத்தில் தனது மனைவி, மகள், மாமியார், அண்ணனின் மகன் மற்றும் மகள் என ஐந்து பேரை இழந்துள்ள பழனிச்சாமி, தங்க இடமின்றி தற்போது தெருவில் வசித்து வருவதாக கூறுகிறார்.

மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: இன்னும் தெருவில் வாழும் தலித் மக்கள்
படக்குறிப்பு,

பழனிச்சாமி

"அன்றைக்கு எங்கள் வீட்டில் தூங்க இடமில்லாததால் நானும், எனது மகனும் அருகில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டோம். காலை 5.30 மணிக்கு சுவர் இடிந்து எனது குடும்பத்தினர் அனைவரும் சிக்கிக் கொண்டதாக தகவல் வந்தது. சென்று பார்க்கையில் யாரும் உயிரோடு இல்லை. முந்தைய நாள் இரவு வரை மகிழ்ச்சியாக சிரித்து பேசிய எனது குடும்பம் செத்துக்கிடந்தது. அரசு மருத்துவமனை முழுவதும் அன்று எங்களின் குடும்பத்தினரின் பிரேதங்களால் நிறைந்து கிடந்தன" என கூறியவர் பொங்கி எழும் கண்ணீரை அடக்கிக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

"எனது குடும்பத்தில் மிச்சம் இருப்பது நானும், எனது மகனும் மட்டுமே. அவன் வேலையில் கிடைக்கும் பணத்தை வைத்துத்தான் நாட்களை கழித்து வருகிறேன். வயது முதிர்வு காரணமாக உடல் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளது. அலுவலகங்களை கூட்டி சுத்தம் செய்வது, வாட்ச்மேன் வேலை என எதாவது வேலை கிடைத்தால் மகனின் பாரத்தை குறைக்க முயற்சிப்பேன். அரசு சார்பில் எனது குடும்பத்துக்கான நிதி கிடைத்தது. ஆனால், வெறும் பணத்தை மட்டும் வைத்து வாழ்ந்துவிட முடியுமா? தங்க வீடில்லாமல் தெருவில் தான் இப்போது வசித்து வருகிறேன்" என ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார் பழனிச்சாமி.

மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: இன்னும் தெருவில் வாழும் தலித் மக்கள்

இந்த விபத்திற்கு பிறகு இடிபாடுகளில் அகற்றப்பட்ட உடல்கள் அனைத்தும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கேட்டு தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்கள் மீதி தடியடி நடத்திய காவல்துறையினர், மேட்டுப்பாளையத்தில் உள்ள மயானத்தில் அனைத்து உடல்களையும் எரித்தனர்.

கனமழையால் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டதற்கு தனிமனிதர்கள் பொறுப்பில்லை என்ற கருத்து கூறப்பட்டாலும், அது ஒரு தீண்டாமைச் சுவர் எனும் வாதத்தை முன்வைக்கிறார் தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில்.

இளவேனில்
படக்குறிப்பு,

இளவேனில்

"உயரிழப்புக்கு காரணமான சுவர், அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் 10 அடிகள் உயரம் இருக்கும். அதுவே, தலித் மக்களின் குடியிருப்பிலிருந்து பார்த்தால் சுமார் 20 அடிகளுக்கு மேல் இருக்கும். அவரது பாதுகாப்புக்காக கட்டிய சுவர் என்றால் முறையான கட்டுமான விதிகளை பின்பற்றி, உரிய அடித்தளம் அமைத்து கட்டி இருக்கலாமே. எந்த கட்டுமானங்களும் இல்லாமல், கடினமான கருங்கற்களைக் கொண்டு ஏன் கோட்டை சுவர் போல் மதில் எழுப்ப வேண்டும். அதற்கு, காரணம் அவர் வீட்டிலிருந்து பார்க்கும்போது ஏழை எளிய தலித் மக்களின் வசிப்பிடம் தெரியக் கூடாது என்பதுதான்."

"மேலும், அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை கருங்கல் சுவர் வழியாக குழாய் அமைத்து தலித் மக்களின் வீட்டின் அருகே வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன? இந்த அடிப்படையில்தான் அதைத் தீண்டாமைச் சுவர் என்கிறோம். அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர்தான் வலுவில்லாமல் கட்டப்பட்ட சுவரை பாதித்ததோடு, உயிரிழந்தவர்கள் வசித்து வந்த வீட்டின் உறுதித்தன்மையும் பல ஆண்டுகளாக பாதித்து வந்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து இப்பகுதியனர் பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என தெரிவிக்கிறார் இளவேனில்.

தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுவரிலும் இதே பிரச்சனை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: இன்னும் தெருவில் வாழும் தலித் மக்கள்
படக்குறிப்பு,

கோவை ராவணன்

இதுகுறித்து பேசிய தமிழ் புலிகள் கட்சியின், மாவட்ட செயலாளர் கோவை ராவணன், "புதிதாக கட்டப்பட்டுள்ள சுவர், உரிய அனுமதி பெற்று, கட்டட விதிமுறைகளை பின்பற்றி எழுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதில் அமைக்கப்பட்டுள்ள துளைகள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்படுகிறது. சென்ற வாரம், பெய்த மழையின்போது, இந்த துளைகள் மூலம் வெளியேறிய மழைநீர் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் தான் தேங்கியுள்ளது. இந்த மக்களின் மீது சிறிதளவேனும் அக்கறை இருந்தால் மண்சரிவை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு மேடுகளை உருவாக்கிவிட்டு, 5 அடி தூரத்தில் அவருக்கு ஏற்ற உயரத்தில் புதிய சுவர் கட்டியிருக்கலாம்" என்கிறார்.

"மீண்டும் இந்த சுவரின் அருகே எளிய மக்களுக்கான வீடுகள் கட்டப்படுமா என்பது சந்தேகம் தான். அந்த இடம் வெற்றுஇடமாகத் தான் தற்போது உள்ளது. கழிவுநீர், மழைநீர் என எதையும் அங்கு கொட்டலாம். ஆனால், தங்களது குடும்பங்களையும், வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு இன்னும் மாற்றுஇடம் கிடைக்கவில்லை. ஓராண்டு கடந்தும் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்ற கேள்விக்குத்தான் யாரிடமும் பதிலில்லை" என கூறுகிறார் ராவணன்.

சுவர் இடிந்து விழுந்த விபத்தால் நடூர் பகுதி, மாநில மற்றும் மத்திய அரசுளின் கவனங்களுக்கு சென்றபோதும் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என புகாரளிக்கிறார் 39 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் விஜயா.

மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: இன்னும் தெருவில் வாழும் தலித் மக்கள்
படக்குறிப்பு,

விஜயா

"முதலமைச்சர் வந்தார், டெல்லியிலிருந்து கூட அதிகாரிகள் வந்தனர். நடூர் பகுதியை நகரம் போல மாற்றப்போகிறோம், சாலை வசதி, முறையான குடிநீர் விநியோகம், கழிவுநீர் வெளியேற்றுத் திட்டம், பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடு, மழை காலங்களில் அருகில் இருக்கும் ஓடையிலிருந்து வெள்ளநீர் வராமல் இருக்க பாதுகாப்பு சுவர் என எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் எழுதிக் கொண்டு, உறுதியளித்துச் சென்றவர்கள் இன்றுவரை எங்களை வந்து பார்க்கவில்லை."

"வசதிகள் அனைத்தும் சுவருக்கு அந்த பக்கம் உள்ள மேட்டுப் பகுதியில் மட்டும்தான் உள்ளது. பள்ளத்தில் வசிக்கும் எங்களின் பகுதி ஒவ்வொரு மழையின் போதும் தீவைப் மாறிவிடுகிறது. இடிந்து விழும் நிலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 17 உயிரை இழந்த பின்னராவது எங்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என நினைத்தோம். ஆனால், ஒரு வருடமாகியும் இங்கு எந்த மாற்றமும் இல்லை" என தெரிவிக்கிறார் விஜயா.

நடூர் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் சுமார் 3௦௦ குடியிருப்புகள் உள்ளன. அவை அனைத்துமே சிமென்ட்ஷீட் மற்றும் ஓட்டு வீடுளாக உள்ளன. ஒருசில சிறிய அளவிலான காங்க்ரீட் வீடுகள் மட்டுமே இங்கு உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் துப்புரவு தொழில், கட்டட வேலை மற்றும் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக