புதன், 30 டிசம்பர், 2020

நேர்மை எனும் பொய் ! தமிழருவி மணியனின் பயந்தாங்கொள்ளித்தனம் என்பது ஒழுக்கமோ நேர்மையோ அல்ல

Image may contain: 1 person

Abilash Chandran : · நேர்மை எனும் பொய் தமிழருவி மணியன் தான் ஒரு நேர்மையாளர், ஒழுக்கசீலர் அதனால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்கிறார். இது உண்மையெனில் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வரும் டீலிங்கில் அவருக்குப் பின்னிருந்த இயக்கியவர்கள் யார் என வெளிப்படையாக சொல்லட்டும். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் பாஜகவின் அர்ஜுனமூர்த்தியும் எப்படி ஒரே கட்சியில் இருவேறு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட முடியும் என விளக்கட்டும். அவர் செய்ய மாட்டார். 

ஏனென்றால் ரகசியங்களைப் பாதுகாப்பதே அவரைப் போன்ற அரசியல்வாதிகளின் பிரதான லட்சியம். ரகசியத்திற்கும் நேர்மைக்கும் தூரத்து உறவு கூட இல்லை. காந்தி ஒரு உதாரணம். அவர் எதையும் மறைத்ததில்லை, தனது பாலியல் விழைவுகளைக் கூட பிரசுரித்தார். மணியன் போன்றவர்களோ திரைமறைவு வேலைகளை செய்து அதிகாரத்தைப் பிடிப்பது, அது குறித்த உண்மைகளை வெளியே சொல்லாமல் காப்பது என இருக்கிறார். காந்தி இருந்திருந்தால் ஒரு பிய்ந்த நெருப்பை எடுத்து இவரை சாத்தியிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.....

. சரி, ‘நேர்மை’ என்பதை மணியன் வேறொரு பொருளில் புரிந்து கொள்கிறார் என வைப்போம் - நிர்வாகத்தில் பொதுவான ஊழல் செய்யாமல் இருப்பது, பெரும் கட்டுமானப்பணிகளில் மறைமுக ஒப்பந்ததாரராக இருந்து பெரும்பணம் ஈட்டுவது, வெளிநாட்டு தொழில்நிறுவனங்களின் இந்திய அரசியல் முகவராக செயல்படுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பதை சொல்கிறார் என்றால் அந்த நேர்மையானது ஒருவித நீர்த்துப் போன போலியான சொல். நீங்கள் ஒன்றில் இருந்து விலகி இருப்பதால் நேர்மையாளர் என்பது தவறு செய்ய வாய்ப்புக் கிடைக்காததால் ஒருவர் நல்லவர் என்பதாகும். 

இது பொதுவாக மத்திய வர்க்கத்தினரில் பலருக்கும் உள்ள கற்பிதமே. பயந்தாங்கொள்ளித்தனம் என்பது ஒழுக்கமோ நேர்மையோ அல்ல. அப்படி நினைப்பது பத்தாம்பசலித்தனம். இவரை ஒட்டி ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் இதுவரை அரசியலில் ஈடுபடாதவர்கள் அனைவரும் ஒழுக்கமானர்கள், நேர்மையானவரக்ள் என முடிவு செய்து வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பார். நேர்மையை இப்படி நான்-மற்றமை எனப் பார்ப்பதும் ஒரு மத்திய வர்க்கப் பார்வையே. கொஞ்சமாவது விவரம் உள்ளவர்கள் ஊழலை ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகப் புரிந்து கொள்வார்கள்.

ஊழல் எப்போதும் தனியாரின் பங்கெடுப்பினாலே நிகழ்கிறது. விளம்பரத்துக்காக மட்டுமே நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிடும் அரசால் ஏன் ஒரு கட்டுமானப்பணியை தானாக மேற்கொள்ள முடியாது? முடியும். ஆனால் அதில் நடக்கும் தில்லுமுல்லுக்கு தானே பொறுப்பாகும் நிலையும் ஏற்படும். அதற்குப் பதிலாக பணி ஆரம்பிக்கும் முன்பே கட்டிங் வாங்கிக் கொள்ள தனியாரிடம் ஒப்படைக்கிறார்கள். தனியார் ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்? அவர்களிடம் சொத்து குவிந்திருக்கிறது. 
அதை மேலும் பெருக்கிக் கொள்ள அரசுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள். ஏன் பணம் கொடுக்கவும் வாங்கவும் நம்மைப் போன்றவர்கள் கூட சில நேரம் தயங்குவதில்லை? ஏனென்றால் சொத்து ஓரிடத்தில் மட்டும் குவியும் போது மக்கள் தாம் மட்டும் ஏன் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கிறோம். கலவரத்தின் போது மக்களில் சிலர் புகுந்து கொள்ளையடிப்பது போலத்தான் இது. மக்களாட்சியின் போது சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் சிறிதும் பெரிதுமாக பொருளாதார சுரண்டல் இருந்து கொண்டிருக்கிறது; அதற்குப் பொறுப்பு மக்களாட்சி அமைப்போ ஆளுங்கட்சியோ அல்ல. இந்த பொருளாதார அமைப்பு மட்டுமே.
நமது பொருளாதார அமைப்பு அநீதியானது என்பதாலே ஊழல் தொடர்ந்து நிகழ்கிறது என மண்டையில் மசாலா உள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள். ரஜினி, கமல், மணியன் போன்றோரிடம் இந்த சிந்தனை இல்லை. நம்மைப் போலல்லாதவர்கள் கெட்டவர்கள், அவர்கள் திராவிட கட்சிக்காரர்கள், அவர்கள் மட்டுமே ஊழல் செய்கிறார்கள் என எளிமையாகப் புரிந்து கொள்வார்கள். அதுவே அவர்களின் சித்தாந்தம். 
 
கமல் வெளியிடும் ஊழல் பட்டியலை பாருங்கள். அதில் பல லட்சம் கோடிகளை லஞ்சமாகக் கொடுக்கும் தொழிலதிபர்களின் பெயர்கள் இருக்காது. கமலின் படங்களுக்கு முதலீடு செய்பவர்களின் பணத்தில் ஊழலின் பங்கு இல்லையா? பெரும் நடிகர்கள் கறுப்புப் பணமாக வாங்கும் பணம் எங்கே முதலீடு செய்யப்படுகிறது? பிக்பாஸில் பேசும் போது ஒரு சினிமாவின் உருவாக்கத்தில் நூற்றுக்கணக்கான பேரின் சமமான பங்களிப்பு உண்டு என்கிறார். எனில், நட்சத்திர நடிகரில் இருந்து லைட் மேன் வரை ஏன் இவ்வளவு சம்பள விகிதத்தில் வித்தியாசம்? 
 
அதைக் கூட விடுங்கள், என்றாவது ஹீரோயினுக்கும் எனக்கும் ஒரே சம்பளம் கொடுங்கள் என சொல்லியிருக்கீங்களா? இதை ரஜினி செய்திருக்கிறாரா?
இவர்களின் உலகில் “நேர்மையின்” பொருள் தான் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக