வியாழன், 31 டிசம்பர், 2020

மழைக்காக ஹோமம்,வேள்வி, யாகம், அபிஷேகம், ஜபம், திருமஞ்சனம்.. ... அப்பட்டமான பொய்கள்!

Image may contain: text that says 'ஹோமம் செய்து பாடல் பாடி மழையைத் தருவிக்க இயலுமெனில்.உலகின் உலகின் பல பாகங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளை சோலை ஆக்கியிருக்கலாமே?! குறைந்த பட்சம் வறண்டு போன இராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் பிரச்சனையையாவது போக்கியிருக்கலாமே?'
Dhinakaran Chelliah :· #மழைக்காக வருண யாகம் பொய் மழைக்காக ஹோமம், வேள்வி, யாகம், அபிஷேகம், ஜபம், திருமஞ்சனம், பதிகம் எனும் அப்பட்டமான பொய்! “மழைக்காக வருண யாகம் : சிவனுக்கு ருத்ராபிஷேகம் விஷ்ணுவுக்கு திருமஞ்சனம் - அறநிலையத் துறை ஆணை” எனும் அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் வெளியிடப்பட்டது. இதற்காக இதுவரை எத்தனை கோடிகள் செலவிடப்பட்டதோ தெரியவில்லை.முக்கியமாக மழை வரவழைக்க வேண்டி தனியாக எந்த ஒரு ஹோமமோ,யாகமோ, வேள்வியோ, யக்ஞமோ,மந்திரமோ, ஸ்லோகமோ ஏதும் இல்லை. யாராவது அப்படியொரு மந்திரம் யாக வேள்வியின் போது சொல்லப்படுவது இருந்தால், நூலின் ஆதாரத்துடன் தெரியப் படுத்தவும். இது ஒரு புறம் இருக்க, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள ஹோமம் வேள்வி, யாகம் அபிஷேகம், ஜபம் எதிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள்!
முதலில் வருண ஜபம் அல்லது வருண காயத்ரி மந்திரம் பற்றிப் பார்ப்போம்:
Aum Jalbimbaye Vvidmahe
Nila Purushaye Dhimahi
Tanno Varunah Prachodayat
Translation:
Om, Let us meditate on the reflection of water
O person of ocean blue, give me higher intellect
And let the God of water illuminate my mind
இந்த மந்திரத்தில் மழை வேண்டி ஒரு வரியும் இல்லையே பிறகு எப்படி இது வருண காயத்ரி மந்திரம் ஆகும்?! இதே மந்திரம் தமிழில்
வருண பகவான் மந்திரம்
ஓம் ஜலபிம்பாய வித்மஹே |
நீலபுருஷாய தீமஹி|
தன்னோ வருண ப்ரசோதயாத் ||
அடுத்து “காலே வர்ஷது பர்ஜன்ய” வேள்வியைப் பார்ப்போம்:
இந்த ஸ்லோகம் வால்மீகி இராமாயணத்தில் இறுதியில் பாடக் கூடிய “மங்களம்” பகுதியில் வருகிறது. இதைத் தவறாக வேதத்தில் உள்ளதாக இணையத்தில் பல பதிவுகளில் காண முடிகிறது.
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா: |
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து ||
காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதிவீ ஸஸ்யசாலினீ
தேசோஅயம் க்ஷோபரஹிதோ ப்ராஹ்மணா: ஸந்து நிர்ப்பயா:
அபுத்ரா: புத்ரிண: ஸந்து புத்ரிண: ஸந்து பௌத்ரிண:
அதனா: ஸதனா: ஸந்து ஜீவந்து சரதாம் சதம்...
இப்படியாக மங்கள ஸ்லோகம் நீள்கிறது.
மேலுள்ள வரிகளுக்கான சுருக்கமான பொருள்:
ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்
காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.
குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வமில்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.
இதில் ஒரே ஒரு வரியில் மழை பற்றிய செய்தி வருகிறது, மழை வேண்டி எழுதப்பட்ட தனி ஸ்லோகம் அல்ல!
அடுத்து தைத்திரீய உபநிக்‌ஷதத்தில் உள்ள மழை பற்றிய மந்திரத்தைப் பார்ப்போம்:
தைத்திரீய உபநிஷதத் தத்துவங்கள் 6:
பிரார்த்தனை மந்திரம்:
ஓம் சன்னோ மித்ர: சம் வருண: I சன்னோ பவத்வர்யமா I சன்ன இந்த்ரோ
ப்ருஹஸ்பதி: I சன்னோ விஷ்ணுருருக்ரம: I நமோ ப்ரஹ்மணே I
நமஸ்தே வாயோ I த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி I த்வாமேவ
ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி I ரிதம் வதிஷ்யாமி I ஸத்யம்
வதிஷ்யாமி I தன்மாவவது I தத்வக்தாரமவது I அவது மாம் I அவது
வக்தாரம் II ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II 1 II
பொருள்: மித்ரன் என்ற தேவன் நமக்கு நன்மை செய்யட்டும்: வருணன் நன்மை செய்யட்டும்:அர்யமான் என்ற தேவன் நன்மை செய்பவனாக இருகட்டும்: இந்திரனும் பிரஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்யட்டும்: எங்கும் நிறைந்தவராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும்: பிரம்மமே உன்னை வணங்குகிறேன்: வாயு தேவனே உனக்கு நமஸ்காரம்.நீயே கண்களுக்கு புலனாகும் பிரம்மம்.பிரபஞ்ச ஒழுங்கு முறையைப் போற்றுகிறேன்.அந்த பிரம்மம் என்னைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும்.
இதிலும் வர்ணன் பற்றிய ஒரே ஒரு வரி மட்டும் உள்ளது, இதவும் மழை வேண்டி தனியே எழுதப்பட்ட மந்திரமல்ல.
கீழுள்ள ஸ்லோகத்தைச் சொன்னால் மழை வரும் என இணையத்தில் குறிப்புகள் உண்டு. இது ஸ்லோகமே தவிர வேள்வி ஹோமத்தின் போது உச்சரிக்கப்படும் மந்திரம் அல்ல!
‘ருஷ்யச்ருங்காய முனயே விபண்டக சுதாய ச
நம: சாந்தாதிபதயே ஸத்ய:
ஸத்வ்ருஷ்டி ஹேதவே'
அதாவது, `விபண்டகரின் புதல்வரும் அமைதியை நல்குபவருமான ருஷ்யச்ருங்க முனிவரை மழையை வேண்டி வணங்குகிறேன்' என்று பொருள். இந்த ஸ்லோகத்தைக் கூறி வேண்டிக்கொண்டால், அந்த முனிவர் மழையை அருள்வார் என்ற பதிவும் உண்டு.
இந்த ருஷ்யச்ருங்க முனிவரின் வழிநடத்தலில்தான் தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்ததார். தசரதன் இவரை அழைத்து வர பல பெண்களைக் கொண்டு இவரை மயக்கிய கதை பாலகாண்டத்தில் உண்டு.
அடுத்து, சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறையின் உள்ள மழை பற்றிய பதிகத்தைப் பார்ப்போம் :
சுந்தரர் திருப்புன்கூர் தலத்தை அடைந்தபோது, அங்கு மழை இன்றி மக்கள் வாடுவதைக் கண்டார். அவ்வூர் மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு பதிகம் பாட, மழை பொழிய, அந்த சாதனைக்காக ஐந்து வேலி நிலம் அளிக்கப் பெற்றார். அனா விருஷ்டி அதி விருஷ்டி ஆன போது, அதை மக்கள் அவரை மழையை நிறுத்தப் பாடச் சொன்னார்கள். செய்தார்,மழை நின்றது. இன்னொரு ஐந்து வேலி நிலம் கிடைத்தது. ஆனால், அவரோ எல்லா நிலங்களையும் ஆலயத்திற்கே கொடுத்தார். சுந்தரர் பாடிய திருப்புன்கூர் மழை வேட்டல் பதிகத்திலிருந்து ஒரு பாடல்:
‘‘வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீர்இலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்(று) எங்களை என்ன
ஒலிகொள் வெண் முகிலாய்ப் பரந்(து) எங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து
பெயர்த்து பன்னிருவேலி கொண்(டு) அருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும்புனல் திருப்புன்கூர் உளானே’’
இதே போன்று சம்பந்தர்,அப்பர் மழை வேண்டி பதிகம் பாடியதாக திருமுறைகளில் உண்டு.
மழை வேண்டுமென பாடல்கள் பாடித்தான் எல்லாம் வல்லவனுக்கு,எங்கும் நிறைந்தவனுக்கு,எல்லாவற்றையும் கடந்தவனுக்கு,பரம் பொருளுக்கு, அவனன்றி ஓரணுவும் அசையாதவனுக்கு தெரிவிக்க வேண்டுமா? அவனுக்குத் தெரியாதா அடியார்களின் வேதனை?!
ஹோமம் நடத்தி,பதிகம் பாடி திருப்திப் படுத்தினால்தான் எல்லாம் வல்லவனின் உள்ளம் உருகுமா?! மழையைத்தான் தருவிக்க முடியுமா? இதில் துளியேனும் உண்மையிருக்கும் பட்சத்தில் நமது விவசாயிகள் அனுதினமும் இதையல்லவா செய்திருக்க வேண்டும்?!
தவிர உலகில் ஆங்காங்கே அதிக மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது,எந்த ஹோமம் யாகம் வேள்வி செய்து மழை வராமல் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பது? பொய்களுக்கும் ஏமாற்று பித்தலாட்டங்களுக்கும் அளவே இல்லையா!
ஹோமம் செய்து பாடல் பாடி மழையைத் தருவிக்க இயலுமெனில்,உலகின் பல பாகங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளை சோலை ஆக்கியிருக்கலாமே?!
குறைந்த பட்சம் வறண்டு போன இராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் பிரச்சனையையாவது போக்கியிருக்கலாமே?.
தேவையான இடங்களில் மழை இல்லாது செய்வதும்,
தேவையற்ற இடங்களில் மழையை பெய்விப்பதும்,மழையால் பெருவெள்ளத்தை ஏற்படுத்துவதும்தான் இறைவனது கருணைச் செயலா?! அல்லது வேலையா?!
இனியும் மந்திரம்,ஜபம்,அபிஷேகம், திருமஞ்சனம்,ஹோமம்,யாகம், வேள்வி,யக்ஞம்,பதிகம் என மக்களை ஏமாற்ற முடியாது!
குறிப்பு: பிண்ணூட்டத்தில் தமிழக இந்து அறநிலையத் துறையின் சுற்றறிக்கையை இணைத்துள்ளேன்! இந்த சுற்றறிக்கையின்படி கோயில்கள் அனைத்திலும் மழை வேண்டி ஹோமம், யாகம் , அபிஷேகம்,திருமஞ்சனம் , ஆராதணை, வருண ஜபம் நடைபெற்று வருகிறது.இந்த ஏமாற்று வேலையை வெற்றிகரமாக சிட்னி முதல் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்தாயிற்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக