புதன், 30 டிசம்பர், 2020

அறந்தாங்கி சிறுமி பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை... 6 மாதத்தில் தீர்ப்பு!

பாலியல் வழக்கில் தூக்குத் தண்டனை: 6 மாதத்தில் அதிரடி தீர்ப்பு!

minnambalam.com பாலியல் வழக்கில் தூக்குத் தண்டனை: 6 மாதத்தில் அதிரடி தீர்ப்பு! புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்து கொலை செய்தால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு போக்சோ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது. எனினும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயப்பிரியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் ஜூன் 30ஆம் தேதி புகார் அளித்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேலமரங்கள் சூழ்ந்த பகுதியில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடைகள் கலைந்து ரத்த காயங்களுடன் சிறுமி இறந்து கிடந்தார். சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இவ்வழக்கில் குற்றவாளியைத் தீவிரமாக தேடிய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்ற ராஜா(27) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை மருத்துவ பரிசோதனை செய்ய அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லும் வழியில் ஜூலை 16ஆம் தேதி போலீஸ் பிடியிலிருந்து தப்பினார்.

இந்நிலையில் ஒருநாள் முழுவதும் தேடி அவரை கண்டுபிடித்த போலீசார் போக்சோ சட்டம், கொலைக் குற்றம், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நேற்று (டிசம்பர் 29) தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்யா, “பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு மரண தண்டனையும், சிறுமியைக் கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு மரண தண்டனையும், தடயத்தை அளிக்க முயன்ற குற்றத்திற்காக 7 வருட சிறையும், ரூ.5,000 அபராதமும், சிறுமியைக் கடத்தியதாக 7 வருட சிறையும், ரூ.5 ஆயிரமும், வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்காக ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

பாலியல் வழக்கில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் நடந்து 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக