புதன், 30 டிசம்பர், 2020

துரைமுருகனிடமிருந்து ஸ்டாலினை காக்க வேண்டும்!- வீடியோ!

minnambalam : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மீதும், அவரது மகனான வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தொடுத்து 40 நிமிடங்களுக்கு மேல் ஓடக் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரான குடியாத்தம் குமரன்.

 திமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும், தலைமைக் கழகப் பேச்சாளராகவும் இருந்த குடியாத்தம் குமரன் வேலூர் எம்பி தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றிபெற்ற சில நாட்களில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார்.                        கலைஞர் மறைந்த சில நாட்கள் கழித்து அவருக்கு வேலூரில் இரங்கல் கூட்டம் நடந்தபோது அதில் குடியாத்தம் குமரன் பேச முயன்றிருக்கிறார். ஆனால் அவர் பேசவேண்டாம் என்று துரைமுருகன் சொல்லிவிட்டார். ஆனபோதும் குமரன் அந்த நிகழ்வில் கலைஞர் பற்றிப் பேசியிருக்கிறார். தன்னை துரைமுருகன் பேச விடாமல் தடுத்த கோபத்தில் அன்று இரவு சக நிர்வாகியிடம் செல்போனில் பேசும்போது துரைமுருகனைப் பற்றி கடுமையாகப் பேசியிருக்கிறார் குமரன்.                   அந்த நிர்வாகி அதை அப்படியே ஒலிப்பதிவு செய்து கதிர் ஆனந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். கதிர் ஆனந்த் இதை தன் அப்பா துரைமுருகனிடம் போட்டுக் காட்ட கோபமான துரைமுருகன் அதை அப்படியே பத்திரமாக வைக்கச் சொல்லியிருக்கிறார்.

இதுபற்றி டிசம்பர் 27ஆம் தேதி தனது ஃபேஸ்புக் வீடியோவில் பேசியிருக்கிற குடியாத்தம் குமரன்,

“இந்தியாவிலேயே வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்தான் பணப் பட்டுவாடாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. அதன் பின் 2019 ஆகஸ்டு மாதம் தேர்தல் நடந்தபோது நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தும் கூட கதிர் ஆனந்துக்காக மேடை மேடையாக பேசினேன். நான் இதற்காக துரைமுருகனிடம் காசு வாங்கவில்லை. அவர் காசும் கொடுக்க மாட்டார். வாட்டர் கம்பெனியே வைத்திருந்தாலும் கட்சிக்காரனுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்க மாட்டார்.

அந்தத் தேர்தலில் கதிர் ஆனந்த் ஜெயித்த பிறகு என்னை நீக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார். நான் கலைஞர் மறைந்த சில நாட்களில் பேசிய ஆடியோவை ஸ்டாலினிடம் போட்டுக் காட்டி என் மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். நான் அறிவாலயம் சென்று ஆர்.எஸ்.பாரதி அவர்களைப் பார்த்தேன். மன்னிப்புக் கடிதம் எழுதித் தரச் சொல்லி கேட்டார். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அண்ணா அறிவாலயத்தில் அண்ண சிலை அருகே செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் நான் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. எல்லாவற்றுக்கும் காரணம் துரைமுருகன் தான். கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராக உள்ளே சென்று, அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் வெளியே வந்தேன். கதிர் ஆனந்துக்காக தேர்தலில் கத்திக் கத்தி உழைத்த என்னை அவர் ஜெயித்த இருபதாவது நாள் கட்சியை விட்டு நீக்கினார்”என்று தான் நீக்கப்பட்டதை விரிவாகச் சொல்லியிருக்கிறார் குடியாத்தம் குமரன்,

தொடர்ந்து அந்த வீடியோவில், “ நான் மீண்டும் கட்சியில் சேர்வதற்கு பல முயற்சிகள் எடுத்தேன். தலைமைக் கழக நிர்வாகிகள் எல்லாரையும் சந்தித்தேன். எல்லாரும் எனக்கு ஆதரவாகத்தான் பரிவோடுதான் பேசினார்கள். ஆனால் பொதுச் செயலாளர் துரைமுருகனை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. நான் சில நாட்களுக்கு முன் கடைசியாக சென்னை கோட்டூர் புரத்தில் இருக்கும் துரைமுருகன் இல்லத்துக்கே சென்றேன். அவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். நான் அவரிடம் என்னை மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டேன். அப்போது அவர், ‘நான் பொதுச் செயலாளரா இருக்கற வைக்கும் நீ திமுகவுக்குள்ள வர முடியாது. நான் போனாக் கூட என் பையன் இருக்குறான். அவன் உன்னை கட்சிக்குள்ள விடமாட்டான்’என்று கூறினார்.

இந்தக் கட்சிக்கு துரைமுருகன் செய்த துரோகத்தை விடவா நான் துரோகம் செய்துவிட்டேன்? உங்களுக்காக கத்திக் கத்தி பேசினேனே அது துரோகமா?

துரோகம் என்றால் என்ன தெரியுமா துரைமுருகன் அவர்களே? 1998 ஆம் ஆண்டே திமுகவுக்கு உங்கள் துரோகம் தொடங்கிவிட்டது. அன்று வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் இப்போதைய உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் முகமது சகி அவரை தலைவர் கலைஞரும், தளபதியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேட்பாளராக அறிவித்தார்கள். அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவர்களே நீங்கள் செய்த காரியம் என்ன? அன்று பாமக வேட்பாளராக போட்டியிட்ட என்.டி. சண்முகத்துக்கு நீங்கள் வேலை செய்தீர்களா இல்லையா? அன்று சகி தோற்றார். துரைமுருகனின் தொகுதியில் இரண்டாயிரம் வாக்குகள் திமுக குறைவாக பெற்றது. துரைமுருகன் தான் தோற்கடித்தார் என்பது தலைவருக்கும் தெரியும், தளபதிக்கும் தெரியும். அன்று குடியாத்தம் ஒன்றிய செயலாளர் சீவூர் துரைசாமி. அவர் மாங்காய்க்கு ஓட்டுக் கேட்டுப் போகிறார். அவர் வண்டியிலே பின்னால் உட்கார்ந்துகொண்டு நான் சூரியனுக்கு ஓட்டு கேட்டுப் போகிறேன். நான் துரைசாமியிடம், ‘ஏங்க மாங்காய்க்கு ஓட்டுக் கேட்குறீங்க?’ என கேட்டேன். அவர், ‘அமைச்சர் சொல்லிட்டாரு. மாங்காய்க்கு ஓட்டுக் கேட்கச் சொல்லி’ என்று பதில் சொன்னார். அப்பவே போய்யா என்று சொல்லிவிட்டு அந்த வண்டியை விட்டு இறங்கிவிட்டேன். அப்போது எனக்கு இருபது வயது. அந்த துரைசாமி பின் பாமகவுக்கே போய்விட்டார்.

அதன் பின் 2014 இல் வேலூரில் அப்துல் ரகுமானை நிறுத்தி மீண்டும் முஸ்லிம் லீக்குக்கு கொடுக்கிறார்கள். அப்போதே கதிர் ஆனந்துக்கு சீட் கேட்டார். கலைஞர் கொடுக்கவில்லை. அந்தத் தேர்தலில் அப்துல் ரகுமானுக்கு துரைமுருகன் செய்தது என்ன? அப்போது அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் உங்களிடம் ஆதரவு கேட்டார். ஆனால், உங்களுக்கு எதிராக சொத்து வழக்கில் அரசு சார்பில் அவர் ஆஜரானவர் என்பதால் அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அதனால் பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் நின்ற ஏ.சி. சண்முகத்துக்கு நீங்களாகவே ஆதரவு கொடுத்தீர்கள். அப்போது துரைமுருகன் காரில் நானும் போய்க் கொண்டிருக்கிறேன்.

அப்போது துரைமுருகன் போனுக்கு ஏ.சி. சண்முகம் வருகிறார். அப்போது சண்முகத்திடம், ‘எங்க கூட்டணி பாய் வேட்பாளர் மூணாவது இடம்தான் வருவாப்ள. சண்முகம் நீதான் ஜெயிப்பே’என்று கூறினார். அப்போது நான், ‘அண்ணே என்னண்ணே இது?’என்று கேட்க, ‘டேய்...என் மகனுக்கு சீட் கேட்டு தரலேல்ல. அப்துல் ரகுமான் எப்படி ஜெயிக்குறார்னு பார்க்குறேன்’என்று சொன்னார். அன்று அவர் காரைவிட்டு இறங்கிவிட்டேன்.

நான் யாருக்கும் பயப்படவில்லை. துரைமுருகன் என்ற நபரால், அவர் மகன் கதிர் ஆனந்தால் தளபதிக்கு எதிராக சதி நடந்துகொண்டிருக்கிறது. துரைமுருகனின் சதியில் இருந்து தலைமைக் கழக நிர்வாகிகள் தளபதியை காக்க வேண்டும். தன் மகனுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் கலைஞர் காலத்திலேயே வேலூர் திமுக கூட்டணி வேட்பாளர் அப்துல் ரகுமானை தோற்கடித்தவர் துரைமுருகன். அப்போது துரைமுருகன் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு அளித்ததற்கு நானே சாட்சி. அப்போதைய மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை காந்தி தலைவர் கலைஞரிடம், ‘கட்சிக்கு துரோகம் செய்த துரைமுருகனை கட்சியை விட்டு நீக்க வேண்டும்’என்று கடிதம் கொடுத்தார். அப்போது தளபதி ஸ்டாலினும்,திமுகவை விட்டே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரக்கோணம் நாடாளுமன்றத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்ற இளங்கோவுக்கும் எதிராக துரைமுருகன் வேலை செய்தார்.

நான் கொள்கையில் கற்போடு இருக்கிறேன். இந்த நிமிடம் வரை திமுகவின் கொள்கையில் கற்போடு இருக்கிறேன். ஆனால் துரைமுருகனும்,கதிர் ஆனந்தும் திமுகவின் கொள்கையில் கற்போடு இருக்கிறீர்களா? இல்லவே இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு பொதுச் செயலாளர் துரைமுருகன் தான். இனமானப் பேராசிரியர் இருந்த இடத்தில் துரைமுருகனா? இப்போது நான் பேசியது பத்து சதவிகிதம்தான். துரைமுருகன் தலைமைக் கழக நிர்வாகிகளைப் பற்றி சொன்னதெல்லாம் நேருக்கு நேராக கேட்டவன் நான். அதையெல்லாம் அடுத்தடுத்து வீடியோக்களில் விளக்குகிறேன்” என்று பேசியிருக்கிறார் குடியாத்தம் குமரன்.

இந்த வீடியோ வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கும் திமுகவினர் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது. திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் ஸ்டாலின் வரைக்கும் இந்த வீடியோ சென்றிருக்கிறது. உடனடியாக இதுபற்றி எ.வ.வேலு மூலமாக குடியாத்தம் குமரனை தொடர்புகொள்ளச் செய்து அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

குமரன் பேசியிருப்பது தனிப்பட்ட துரைமுருகனைப் பற்றி அல்ல... திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனைப் பற்றி என்பதால் இது கட்சிக்கே அவமானம் என்பதால் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

மின்னம்பலம் சார்பில் இன்று (டிசம்பர் 30) குடியாத்தம் குமரனைத் தொடர்புகொண்டு இந்த வீடியோ பற்றிக் கேட்டோம். “ஆமாம் சார். நான் தான் பேசினேன்.என் மனப் புழுக்கத்தைக் கொட்டிவிட்டேன். திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் கூட, திமுக அனுதாபியாக சமூக தளங்கள் மூலம் ஸ்டாலின் முதல்வராக தொடர்ந்து பரப்புரை செய்வேன்”என்று முடித்துக்கொண்டார்.

துரைமுருகனைத் தொடர்புகொள்ள இயலாததால், அவரது மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்தை இன்று மாலைத் தொடர்புகொண்டு , குடியாத்தம் குமரனின் வீடியோ பற்றிக் கேட்டோம்.

“நான் கிராம சபைக் கூட்டங்கள்ல கலந்துக்கிட்டிருக்கேன் சார். அப்படி எந்த வீடியோவையும் நான் பார்க்கலையே. பாக்காமல் ஒண்ணும் சொல்ல முடியாதுல்ல” என்றார் பொறுமையாக.

ராகவேந்திரா ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக