சனி, 12 டிசம்பர், 2020

ஸ்டாலினுக்கு டாக்டரின் கட்டளைகள்! தினசரி 54 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிங் போக வேண்டாம்

மின்னம்பலம் : ஒவ்வொரு நாளும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு பல்வேறு உத்தரவுகளையும், கட்டளைகளையும் இட்டுக் கொண்டிருக்கிறார். அதேநேரம் நேற்று (டிசம்பர் 11) திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது மருத்துவர் தணிகாசலம் சில கட்டளைகளை இட்டிருக்கிறார்.  டிசம்பர் 11 ஆம் தேதி தனது தொகுதியான கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு... திடீரென உடல் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. உடனே அருகிலுள்ள ஆர்த்தோ அன்ட் நியூரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்டாலினுக்கு அங்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ரத்த அழுத்தம் குறைந்தது தெரியவந்தது.

அதற்குள் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி என்று தகவல்கள் பரவ, மீண்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கே வந்தார்.

“ எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. இதனால் இரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் 10 நிமிடம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லச் சொன்னார்கள். அதனால் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் திரும்பினேன். மற்றபடி ஏதும் இல்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார் ஸ்டாலின். இதையெல்லாம் அறிந்து ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பதறிவிட்டனர்.

ஸ்டாலின் உடல் நிலைபற்றி நேற்றே மின்னம்பலத்தில் செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அவரது மருத்துவரான டாக்டர் தணிகாசலம், ஸ்டாலினுக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்து இதன்படியே நடக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

”என்னை வந்து பார்த்துவிட்டே வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்று கூறிய பிறகு டாக்டர் தணிகாசலத்தை நேற்று சந்தித்துள்ளார் ஸ்டாலின். அப்போது ஸ்டாலினின் உடல் நலம் பற்றி மருத்துவர் விசாரித்திருக்கிறார்.

“இப்பல்லாம் நைட் தூக்கம் சரியா வர்றதில்லை டாக்டர்...கையும், இடுப்பும் அப்பப்ப வலிக்குது” என்று ஸ்டாலின் சொல்ல, “இப்ப என்னென்ன உடற்பயிற்சிகள் பண்றீங்க. வாக்கிங் கரெக்ட்டா போயிட்டிருக்கீங்களா?” என்று கேட்டுள்ளார் தணிகாசலம்.

“வாக்கிங்கும் போறேன்..வாரம் ஒரு தடவை நீலாங்கரையிலேர்ந்து மாமல்லபுரம் வரைக்கும் சைக்கிளிங் போறேன்” என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

அதற்கு டாக்டர், “ஏங்க நீங்க சைக்கிளிங் போறீங்கனு தெரியும். இவ்ளோ தூரமா போறீங்க? அப் அண்ட் டவுன் 54 கிலோ மீட்டர் தூரம் இருக்குங்க. அவ்ளோ தூரமெல்லாம் சைக்கிளிங் போக வேண்டாம். டெய்லி அரைமணி நேரம் நல்லா வியர்வை வர்றவைக்கும் வாக்கிங் போங்க. நல்லா தூங்குங்க. அதுபோதும். சைக்கிளிங்கை குறைச்சுக்கங்க. யோகாவை தொடர்ந்து பண்ணுங்க” என்று உரிமையோடு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். ஸ்டாலினும், டாக்டர் தணிகாசலத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

”ஸ்டாலின் சமீப காலமாகவே அசைவ உணவுகளைக் குறைத்துவிட்டார். முழுக்க முழுக்க சைவம்தான். சில வாரங்களாகவே தொடர்ந்து சைக்கிளிங் சென்றதால் இடுப்பு வலியும் கை வலியும் ஏற்பட்டிருக்கிறது. அதுகுறித்துதான் மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். மற்றபடி ஸ்டாலின் ஹெல்த் நன்றாக இருக்கிறது”என்று கூறுகிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்களில்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக