சனி, 12 டிசம்பர், 2020

சித்ரா விவகாரத்தில் அமைச்சர் மகன்கள்! அதிமுக அமைச்சர்களின் பிள்ளைகளுக்கும் சின்னதிரை, பெரியத்திரை நடிகைகளை

மின்னம்பலம் : முல்லை கதாபாத்திரம் மூலம் மக்களிடையே புகழ் மணந்துகொண்டிருந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்குப் பின்னால் அவரது காதல் கணவர் ஹேமந்த் இருக்கிறார் என்று சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்.

சித்ரா விவகாரத்தில் அமைச்சர் மகன்கள்!

போலீஸும் இந்த வழக்கில் ஹேமந்த்திடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில்.... சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியது, பதிவு திருமணம் செய்துகொண்ட கணவன்தான் என்று தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

“சின்னத்திரை, சினிமா நடிகைகளை பொருளாதார ரீதியாக நெருங்கி அவர்களை நம்ப வைத்து, பின் நடிகைகளிடமிருந்தே பணம் பறிப்பதை சிலர் திட்டமிட்டுச் செய்கிறார்கள். அப்படித்தான், சித்ராவையும் நெருங்கியிருக்கிறார் ஹேமநாத் என்கிற ஹேமந்த்.

பூந்தமல்லி கரையான் சாவடியைச் சேர்ந்த ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் கார் ஓட்டுநர். சிங்கப்பூரில் டிரைவர் வேலை கிடைத்ததும் அங்கே போய் கார் ஓட்டி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் கரையான் சாவடியில் இருந்து சென்னை ஜெ.ஜெ. நகருக்கு குடிபெயர்ந்தது அவர்கள் குடும்பம். சிங்கப்பூரில் இருந்து ரவிச்சந்திரன் சென்னை திரும்பியும் கூட வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்கள்.

ஹேமந்த் ஒரே மகன் என்பதால் அதிகமான செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். அதுவும் அப்பாவின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த பிள்ளை என்பதால், ஹேமந்த்தின் நண்பர்கள் வட்டாரம், அவரது பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் அம்மாவுக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஹேமந்த் டிப் டாப் உடை அணிந்துகொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பழகிய நண்பர்களிடம் ஏமாற்றத் துவங்கினான்.

அதிமுக, திமுக விஐபிக்களின் மகன்களுடன் நட்பு வைத்துக்கொண்டு, அவர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு அனைத்து வேலைகளையும் செய்து, அதன் மூலம் தன்னை ஓரளவுக்கு வசதி படைத்த நபராக வெளிப்படுத்திக்கொண்டார். அதிமுக அமைச்சர்களின் பிள்ளைகளுடன் சுற்றுவது அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு , ’அந்த அமைச்சர் என்னோட ஃப்ரண்ட் அப்பாதான்’ என்று மற்றவர்களை நம்பவைத்து பெரிய அளவில் மோசடித் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார் ஹேமநாத்.

2012-2013 ம் ஆண்டில் கல்லூரி மாணவிகள் மூலமாக அவர்களின் குடும்பத்தார்களிடம், ’ஆன்ட்டி...அங்கிள்’ என்று நெருக்கமாகப் பேசி வேலை வாங்கி கொடுக்கிறேன், எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி கொடுக்கிறேன் என்று கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார் ஹேமந்த்.

அந்தப் பணத்தை வைத்து கார், பைக் என வலம் வந்தவர் சின்னத்திரை, வெள்ளித்திரை பெண்களுடன் நெருக்கம் காட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்துவந்தார். அதிமுக அமைச்சர்களின் பிள்ளைகளுக்கும் சின்னதிரை, பெரியத்திரை நடிகைகளை அறிமுகம் செய்துவைத்து பழக்கத்தை உருவாக்கிவிட்டார்.

மார்கெட் இல்லாத நடிகைகளுக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுப்பதாகவும், ’திரைத்துறைக்கு அமைச்சர் மகன்தான் இன்வெஸ்மெண்ட் செய்கிறார், நான் சொல்லி வாய்ப்பு வாங்கி தருகிறேன்’என்று சொல்லி தனது பின்னால் நடிகைகளைச் சுற்றவைத்தார் ஹேமந்த்.

அப்படித்தான்.. சித்ராவிடமும் பழக ஆரம்பித்திருக்கிறார் ஹேமந்த். தான் ஒரு பெரிய தொழில் அதிபர் என்றும் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் எல்லாம் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும் ஹேமந்த் சொல்லச் சொல்ல சித்ரா, அவர் மீது நம்பிக்கையை வளர்த்திருக்கிறார். விலையுயர்ந்த காரில் செல்வதும் விஐபிகளை அறிமுகம் செய்வதுமாக இருந்து வந்த ஹேமந்த் மீது சித்ராவுக்குக் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

இடையே கொரோனா ஊரடங்கு வர, அது ஹேமந்த்துக்கு சாதகமாகிவிட்டது. ‘இப்போது பதிவு திருமணம் செய்துகொள்வோம். கொரோனா காலம் முடிந்ததும், பெரிய அளவில் திருமண விழா ஏற்பாடு செய்துகொள்வோம். நம் திருமணத்துக்கு முதல்வர், அமைச்சர்கள், போலீஸ் ஆபீசர்கள், தொழில் அதிபர்கள் என விஐபிகள் வருவார்கள்’ என்று ஆசைவார்த்தைகள் கூறியதும் சித்ரா மெய் மறந்து கனவு உலகத்தில் மிதந்துள்ளார்.

பதிவு திருமணமும் முடிந்ததும் ஹேமநாத்தும் சித்ராவும் ஒளிமறைவு இல்லாமல் தம்பதிகளாக வலம் வந்தார்கள். இந்த நேரத்தில்தான் ஹேமநாத்தால் ஏமாந்தவர்கள் கொடுத்த பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அதனால் சித்ராவிடம் அடிக்கடி பணம் பெற்றுச் சென்றுள்ளார். இது தொடர்கதையாக இருக்கவே சித்ரா உஷாராகி பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார். இதிலிருந்துதான் இருவருக்கும் பிரச்சினை தொடங்கியுள்ளது. பணம் கேட்டு ஹேமந்த் தொந்தரவு செய்ய, ‘எதற்காக இவ்வளவு பணம் கேட்கிறாய்?’ என்று சித்ரா மேலும் மேலும் விசாரிக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஹேமநாத் பற்றிய விவரங்கள் சித்ராவுக்கு தெரியவருகின்றன” என்ற போலீஸார் தொடர்ந்தனர்.

“அமைச்சர் எம்.சி.சம்பத் மகன், முன்னாள் அமைச்சரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் மகன், இன்னும் சில அமைச்சர்களுடைய மகன்களின் நண்பர் என்று சொல்லி என்று 2012-2013இல் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ஒரு கோடி ஏமாற்றிவிட்டார். 2014இல் ஜெ ஜெ நகரில் ஹேமந்த், தாய் வசந்தா, தந்தை ரவிச்சந்திரனுடன் வசித்த வந்தபோது... பணம் ஏமாந்தவர்கள் ஜெ ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ரவி இந்த புகாரின் அடிப்படையில் ஹேமந்த் தாய், தந்தையை அழைத்து வந்து ’உங்கள் மகனை வரச்சொல்லுங்கள். ஏமாற்றியவர்களுக்கு எப்போது பணம் கொடுப்பீங்க’என்று கேட்டுள்ளார்.

உடனே ஹேமந்த் அந்த ரவி இன்ஸ்பெக்டர் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டினார். அதாவது தன் தாய் வசந்தா தனிமையில் இருக்கும்போது தகாத முறையில் நடந்துகொண்டார் என்று அவரையே புகார் கொடுக்க வைத்து, தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இன்ஸ்பெக்டர் ரவி தன் மேல் நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்று உத்தரவாதம் வாங்கிக் கொண்டு, தாய் வசந்தா கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். .

பணம் ஏமாறிய நபர்களுக்கு 26 லட்சம், 15 லட்சம் என செக் கொடுத்திருந்தான் அந்த செக் பவுன்ஸாகிவிட்டது, அதன் பிறகு நீதி மன்றம் சென்றார்கள், நீதி மன்றமும் இந்த வழக்கில் உண்மை உள்ளது சிசிபி விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அங்கேயும் தனது அரசியல் செல்வாக்கையும், போலீஸ் செல்வாக்கையும் வைத்துத் தப்பித்து விட்டார்..

அதன்பிறகு ஏமாந்தவர்கள் அமைச்சர் சம்பத்தை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். ‘ அவன் வருவான். அவ்வளவாக எனக்குத் தெரியாது. என் பையன் பெயரை தவறாக மிஸ்யூஸ் பண்ணிட்டான். எங்களுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென அமைச்சர் மறுத்துள்ளார்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

”காவல்துறையினர் மோசடி புகார்கள் வந்தபோதே ஹேமந்த் மீது சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் சித்ராவை ஏமாற்றியிருக்கமாட்டான், சித்ராவும் தற்கொலை வரை போயிருக்க மாட்டார்” என்கிறார்கள் போலீசிலேயே இருக்கும் நேர்மையான அதிகாரிகள்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக