புதன், 4 நவம்பர், 2020

U.S Election live அமெரிக்க தேர்தல் முடிவுகள் நேரடி ... ஜோ பைடன் முன்னிலை ..

தினத்தந்தி : வாஷிங்டன்,உலகமே கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அமெரிக்க வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் நடக்கிற இந்த தேர்தல், அமெரிக்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தலாக மட்டுமல்லாமல், உலகம் செல்ல வேண்டிய பாதை இதுதான் என்று சுட்டிக்காட்டுகிற தேர்தலாகவும் அமைகிறது.இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 74) குடியரசு கட்சி சார்பில் மீண்டும் களத்தில் குதித்துள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (77) போட்டியிடுகிறார். ஜோ ஜோர்கென்சன் (லிபர்டேரியன் கட்சி), ஹோவி ஹாக்கின்ஸ், (கிரீன் கட்சி) மற்றும் 7 பேர் போட்டியிட்டாலும் ‘நீயா, நானா?’ என்கிற அளவுக்கு டொனால்டு டிரம்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையேதான் போட்டி நிலவியது.

துணை ஜனாதிபதி பதவிக்கு அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, இந்திய வம்சாவளிப்பெண்ணான கமலா ஹாரிஸ் (56) களத்தில் உள்ளதால் இந்தியாவில் இந்த தேர்தல் முன் எப்போதையும் விட இப்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஜோ பைடன் முன்னிலை பெற்றிருப்பதை காட்டின.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே ஜனாதிபதி ஆக முடியும். கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன. இந்த மாகாணங்கள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.

நேற்று ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில்  ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன்:  டெக்சாஸ், ஜார்ஜியா, புளோரிடா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் வெர்மான்ட் ஆகிய இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்டக்கி, வர்ஜீனியா மற்றும் தென் கரோலினா, இன்டியானா, ஆகிய இடங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக