திங்கள், 30 நவம்பர், 2020

சமண சிற்பங்கள்! தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சித்தன்னவாசல், கழுகுமலை, சிதாரல்...

/madrasradicals.com : சித்தன்னவாசல், கழுகுமலை, சிதாரல் என்று சமண தடயங்கள் பல தமிழகத்தின் முக்கிய தொல்லியல் தளங்களாக இருக்கிறது. கடந்த சில மாதங்களில் புதிதாக பல இடங்களில் சமண சிற்பங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் தெ.கல்லுப்பட்டி..

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் து.முனீஸ்வரன், வரலாற்றுத்துறை மாணவர் ம.மணி, தமிழ்த்துறை மாணவர் நீ.பழனிமுருகன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்த கள ஆய்வில், 

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்கேணி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு பகுதியில் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பமும், கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜராஜசோழனின் வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தேவட்டி முனியாண்டி கோவில் அருகில் செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். 

ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளர் உதவியுடன் படிக்கப்பட்டதில் இவை முதலாம் இராஜராஜசோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் எனத் தெரியவந்தது.

மேலும் அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கி.பி.9-ம் நூற்றாண்டாகக் கருதலாம். சமண சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி.9-ம் நூற்றாண்டு முதல் கி.பி.13-ம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறியமுடிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாகோவில்

புதுகோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே மங்களாகோவில் கிராமத்தில் அக்னி ஆற்றுக்கு வடபுறமுள்ள விவசாய நிலத்தில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த  சமண சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை வட்டம், மங்களாகோவில் கிராமத்தைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகி உ.அரசப்பன் அளித்த தகவலைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார், உறுப்பினர்கள் பா.ரமேஷ் குமார், அ.ரகமத்துல்லா ஆகியோர் அடங்கிய குழுவினரால் மங்களாகோவில் அக்னி ஆற்றங்கரை அருகேயுள்ள க.முருகேசன் என்பவரின் விவசாய நிலத்தில், சமண சமயத்தின் சிற்பம் ஆகஸ்ட் மாதம் கண்டெடுக்கப்பட்டது.  

இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: 

தற்போது கண்டெடுக்கப்பட்ட சமண சிற்பம் ஒன்றரை அடி அகலம், மூன்றரை அடி உயரத்துடன் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன், நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சிதைவுற்றுள்ளது. மேலும் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்படும் என்று கூறினார். 

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் சிவன் கோவிலில் புதிதாக மகாமண்டபம் கட்டும்பணி நடந்து வருகிறது. சேதமடைந்த பழைய மகாமண்டபத்தில் இருந்த கற்கள், தூண்கள் கோவில் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அப்பகுதியை ஆய்வு செய்தபோது, அங்கு கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

கருங்கல்லால் ஆன இந்த சிற்பம் 3 அடி உயரம், 1½ அடி அகலம் உள்ளது. கீழே பீடமும், அதன் மேல் சமண துறவி இருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. பீடத்தில் 3 சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் உள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் துறவி அமர்ந்துள்ளார். அவர் முகம் சிதைந்துள்ளது. அவருக்கு பின்புறம் ஒளிவட்டம் உள்ளது. தலைக்கு மேல் இருந்த முக்குடை, அசோகமரம் உடைந்து சேதமாகியுள்ளன. சமணத் துறவியின் இருபுறமும் உள்ள இயக்கர்களின் சிற்பங்கள் உடைந்துள்ளன. சிங்கம் மகாவீரரின் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாக கருதலாம். பல ஆண்டுகளாக வெளியில் கிடந்துள்ளதால், வெயில், மழையால் சிற்பம் சேதமடைந்து உள்ளது. இந்த சிற்பம் கிடைத்திருப்பதன் மூலம் கி.பி.10-ம் நூற்றாண்டு அளவில் இந்த ஊரில் ஒரு சமணப்பள்ளி இருந்திருக்கும் எனக் கருதபடுகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்த ராஜகுரு கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி, சூடியூர், மஞ்சூர், செழுவனூர், மாரந்தை உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் புலியூர்

திருவள்ளூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலியூர் கிராமத்தில் உள்ள பழைய சிதிலமடைந்த பஜனை கோயிலுக்கு அருகில் இந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர்

அதே போல சில தினங்களுக்கு முன் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரனின் சிற்பம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  போலூரில் அடர்த்தியான தாவரங்களின் கீழ் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பரிசோதித்த வல்லுநர்கள், கி.பி 10 -11ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறினர். இருந்தும் முழுமையான ஆய்வுகள்  வரும் போதுதான் மேலும் உண்மைகள் வெளிவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக