திங்கள், 30 நவம்பர், 2020

டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம் ..புதிய வேளாண் சட்டங்கள்: அடக்குமுறைக்கு அஞ்சாத விவசாயிகள் போராட்டம்

 விவசாயிகள் போராட்டம்

vikatan :விவசாயிகள் போராட்டம்  ...
ரோனா அச்சுறுத்தல், கடும் குளிர், அரசின் அடக்குமுறை என எதற்கும் அஞ்சாமல் உறுதிமிக்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மோடி அரசு செவிசாய்க்குமா?

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில், இதற்கு யார் காரணம் என்று மத்திய பா.ஜ.க அரசும் டெல்லி ஆம் ஆத்மி அரசும் ஒன்றுக்கொன்று குற்றம்சாட்டிவருகின்றன. அந்த அளவுக்கு தலைநகரில் கொரோனா பிரச்னை தீவிரமாக இருக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி `டெல்லி சலோ’ போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்துவருகிறார்கள். கொரோனாவிட மோசமான பாதிப்புகளை இந்தச் சட்டங்கள் ஏற்படுத்தும் என்பதே போராடும் விவசாயிகளின் அச்சம்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

சமீபத்தில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் - 2020, விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்- 2020, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் - 2020 ஆகிய இந்த மூன்று சட்டங்களும்தான், விவசாயிகளின் கோபத்துக்குக் காரணம்.

இந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று நாடு முழுவதிலும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து பேராடிவருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் ஒன்று சேர்ந்தன. இந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் செப்டம்பர் 25-ம் தேதி மறியல் போராட்டமும் சட்ட நகல் எரிப்புப் போராட்டமும் நடைபெற்றது.

விவசாயிகளின் நலன்களை நோக்கமாகக் கொண்டே இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக மத்திய அரசு கூறிவருகிறது. விளைபொருள்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரத்தை இந்தச் சட்டம் அளிக்கிறது என்கிறது மத்திய அரசு. ஆனால், இந்தியாவில் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் வகையில் இந்த சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது என்பது விவசாய அமைப்புகளின் குற்றச்சாட்டு. இந்தச் சட்டத்துக்கு எதிராக பா.ஜ.க கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரே பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலே பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த மூன்று நாள்களாக ‘டெல்லி சலோ’ போராட்டத்தை விவசாயிகள் நடத்திவருகிறார்கள். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பதற்றம் நிலவுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரிந்தர் தலைமையிலான காங்கிரஸ் அரசும், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டத்துக்கு பா.ஜ.க அரசு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. ''விவசாயிகளை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன'' என்பது ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டாரின் குற்றச்சாட்டு.

`சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பது, பொது அமைதியைக் குலைப்பது, கிரிமினல் நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் (தற்போதும் போராடும் விவசாய சங்கங்கள்) கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளன’ என்று விவசாய சங்கங்களின் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்வது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ஹரியானா மாநில அரசு குறிப்பிடப்பட்டது.

தமிழக விவசாயிகளின் டெல்லிப் போராட்டம்
தமிழக விவசாயிகளின் டெல்லிப் போராட்டம்

டெல்லிக்குள் விவசாயிகளை நுழையவிடக் கூடாது என்பதற்காக உத்தரப் பிரதேசம், ஹரியானா எல்லைகளில் கண்ணீர்புகைக் குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். மாநில எல்லைகளில் விவசாயிகளை போலீஸார் தடுத்துநிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். வியாழக்கிழமை (நவ. 26) இரவு முழுவதும் சாலைகளிலேயே முகாமிட்டனர்.

தடைகளை உடைத்து முன்னேறி, வெள்ளிக்கிழமை (நவ.27) அன்று டெல்லி எல்லையை விவசாயிகள் சென்றடைந்தனர். அவர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை போலீஸார் வீசினர். மேலும், குளிர்நீரைப் பீய்ச்சியடித்தனர். அதையும் மீறி விவசாயிகள் முன்னேறினர்.

டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வந்த விவசாயிகளைத் தடுப்பதற்காக மணல் மூட்டைகள் ஏற்றப்பட்ட வாகனங்களை சாலைகளின் குறுக்கே போலீஸார் நிறுத்திவைத்தனர். முள்கம்பி வேலிகளையும் சாலைகளில் அமைத்தனர். பல இடங்களில் சாலைகளில் பள்ளங்களைத் தோண்டிவைத்தனர். இந்தத் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு, டெல்லிக்கு வரும் விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும், விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்களும் மாணவர்களும் தொழிற்சங்கத்தினரும் நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த அழுத்தம் காரணமாக கடைசியில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதற்கு அரசு அனுமதித்தது.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு பரவலான ஆதரவும் எழுந்துள்ளது. #IamWithFarmers (விவசாயிகளுடன் நான் இருக்கிறேன்) என்ற ஹேஷ்டாக்குடன் சமூகவலைதளங்களில் நாடும் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில்,``பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. போராட்டம் செய்ய வேண்டாம் என்று விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அதே நேரத்தில்,, விவசாயிகள் போராட்டத்தை பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் துண்டிவிட்டிருப்பதாகவும், அவரது ஆதரவுடனே இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும் பா.ஜ.க தலைவர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். இதனால், விவசாயிகளின் போராட்டத்தையும் அவர்களின் கோரிக்கைகளையும் மத்திய ஆட்சியாளர்கள் எப்படி அணுகப்போகிறார்கள் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாமல் விவசாயிகள் போராடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினர். பிரதமரைச் சந்தித்து முறையிட வேண்டும் என்று கோரினர். ஆனால், அவர்களை பிரதமர் சந்திக்கவே இல்லை. தற்போது, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்ப்பாரா என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக