செவ்வாய், 24 நவம்பர், 2020

7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு!

minnambalam : 7.5 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாக குறைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப் மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது. இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவை தமிழக அரசே செலுத்தும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 24) முறையிடப்பட்டது. அதில், “7.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதால், தரம் பாதிக்கப்படுகிறது” என கூறப்பட்டது. கலந்தாய்வு நடைபெற்று வருவதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கலந்தாய்வை நிறுத்திவைக்கவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் அதனை நிறுத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாகக் கூறியதோடு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என மறுத்துவிட்டனர். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு பட்டியலிடும் போது மட்டுமே விசாரிக்கப்படும் எனவும் கூறினர்.

எழில்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக