செவ்வாய், 24 நவம்பர், 2020

மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. "வரலாறு காணாத" முன்னெச்சரிக்கை.. ஏன்?

Veerakumar - tamil.oneindia.com : சென்னை: சமீபத்தில் எந்த வருடத்திலும் இல்லாத அளவுக்கு மிக தீவிர புயலாக கரையைக் கடக்கப்போகிறது நிவர். 

இதன் காரணமாகத்தான், இதுவரை இல்லாத அளவுக்கு முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை அரசு எடுக்க தொடங்கியுள்ளது. நவம்பர் 25ம் தேதி மாநிலம் முழுக்க அரசு பொது விடுமுறை, பஸ், ரயில் இயக்கம் ரத்து.. என ஒவ்வொரு அறிவிப்பையும் பார்க்கும்போது மக்களுக்கு இயல்பாகவே, இந்த புயல் குறித்து பீதி எழுவது சகஜம்தான். இது உண்மைதானா, மக்கள் அச்சப்படும் அளவுக்கான புயலா இது? ஒரு ரவுண்ட் அப் பார்த்தால் உங்களுக்கு புரிந்து விடும்.

 சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய 2 புயல்களின் பெயர், வர்தா மற்றும் கஜா. 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜெயலலிதா மறைந்து சில நாட்களில், இந்த புயல் தாக்கியது. அதுவும் சென்னையை மையமாக கொண்டு தாக்கியது. 22 வருடங்களுக்கு பிறகு அவ்வளவு ஆவேசம் கொண்ட புயல் அதுதான் என அறிவித்தனர் வானிலை இலாகாவினர். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் சென்னையில் 20 ஆயிரம் மரங்கள் முறிந்து விழுந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.




கஜா புயல் தாக்கம் கஜா புயல், போன வருஷம் நவம்பர் மாதம் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது அந்த புயல். அத்தோடு விடவில்லை. திண்டுக்கல் வழியாக, கொடைக்கானல் மலையேறி போனது அந்த புயல். போன இடமெல்லாம், கன மழையும் கடும் காற்றும் வீசியது. திண்டுக்கல்லில் புயலா என மக்கள் ஆச்சரியப்பட்டனர்.


145 கி.மீ வேகத்தில் காற்று இதன்பிறகு, அச்சுறுத்தும் புயலாக மாறியுள்ளது, நிவர். ஏனெனில், வர்தா புயலின்போது 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. ஆனால் இப்போது 145 கி.மீ வரை காற்றின் தீவிரம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது இதைவிட காற்றின் வேகம் அதிகரித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள்.


பள்ளி, கல்லூரி லீவுகள் கஜா புயலின்போது, கடலூர், நாகை மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வலிமையான புயல் வர்தா புயல் பாதிப்பை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், நிவர் புயல் கரையை கடக்கும் முன்பாகவே, மொத்த தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, 22 ஆண்டுகளில் இல்லாத புயல் என அழைக்கப்பட்ட வர்தாவைவிடவும், மோசமான, வலிமையான புயலாக நிவர் இருக்கப்போகிறது என்பது தெரிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக