வெள்ளி, 23 அக்டோபர், 2020

7.5 சதவிகித இட ஒதுக்கீடு ... ஒரு மாதம் அவகாசம் கேட்ட ஆளுநர்: ஆர்ப்பாட்டத்தில் திமுக!

 ஒரு மாதம் அவகாசம் கேட்ட ஆளுநர்: ஆர்ப்பாட்டத்தில் திமுக!

minnambalam :7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா மீதான ஆளுநரின் முடிவு வரும் வரை, கலந்தாய்வு நடத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி உடனடியாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசு தரப்பில் ஐந்து அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து அழுத்தம் அளித்தும், எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதியும், அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. முன்னேறிய சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால்தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என ஆளுநர் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்குப் பதிலளித்து ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், “7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான உங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டியுள்ளது. ஆகவே, இதுதொடர்பாக முடிவெடுக்க எனக்குக் குறைந்தபட்சம் 3 - 4 வாரங்களாவது தேவைப்படுகிறது. அண்மையில் அமைச்சர்கள் குழு என்னை சந்தித்தபோது கூட இதையேதான் கூறியிருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் மற்றும் மாணவர்களுக்குத் துரோகமிழைக்கும் அதிமுக அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுபற்றிய ஸ்டாலின் அறிக்கையில், “நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியை - மத்திய பாஜக அரசின் அறிவுரையின் பேரில் - தமிழக ஆளுநர் அவர்களும் இதை ஆணித்தரமாக எதிர்த்துப் பேச முடியாமல், உள்நோக்கத்துடன் எப்போதும் அடங்கிப் போகும் பழனிசாமியும் ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று சாடியுள்ளார்.

தன்னுடைய கடிதத்திற்கு ஆளுநர் பதிலளித்ததைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “ஏற்கனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்” என்றும் குறிப்பிட்டதோடு, மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவை என்பதைத் தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்திருக்கிறேன் என்று ஆளுநர் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “கால அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் சொன்னதையே அமைச்சர்கள் தமிழக மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைத்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துங்கள். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருகிறேன்” என்று ஆளுநர் அவர்கள் தமிழக அமைச்சர்களிடம் சொன்னதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது. சமூக நீதியைச் சீர்குலைக்கும் அப்படியொரு கருத்து, அந்தச் சந்திப்பில் முன் வைக்கப்பட்டதா என்பதை அமைச்சர்கள் குழு உடனடியாக தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின்,

“நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும் தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் 24-10-2020 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக