வியாழன், 15 அக்டோபர், 2020

உலகிலேயே சிறிய செயற்கைகோளை கண்டுபிடித்த கரூர் மாணவர்கள் - 73 நாடுகளில் 25 ஆயிரம் மாணவர்கள்.. நாசா தேர்வு செய்தது

maalaimalar :உலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். உலகிலேயே சிறிய செயற்கைகோளை கண்டுபிடித்து கரூர் மாணவர்கள் அசத்தல் - நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது
செயற்கைகோளை தயாரித்த கல்லூரி மாணவர்கள். மாணவர்கள் கண்டுபிடித்த சிறிய அளவிலான செயற்கை கோள். கரூர்: உலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இந்த செயற்கைகோள், 2021-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று தெரிகிறது. கியூப் இன் பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இடையே போட்டியை நடத்தி வருகிறது. இதில் தேர்வு பெறும் மாணவர்களின் செயற்கை கோளானது நாசாவின் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.  

இந்தநிலையில், கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை சேர்ந்த அட்னன், தென்னிலையை சேர்ந்த அருண் ஆகிய இருவரும் கரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும், அரவக்குறிச்சி அருகேயுள்ள நாகம்பள்ளியை சேர்ந்த கேசவன் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் இணைந்து போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், அவர்களின் கண்டுபிடிப்பு இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இருந்தாலும் அவர்கள் மனம் தளராமல் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் வழிகாட்டி உதவியுடன், 3 சென்டி மீட்டரில் 64 கிராம் எடையுள்ள செயற்கைகோளை கண்டுபிடித்து ஒப்புதலுக்காக நாசாவுக்கு அனுப்பி வைத்தனர். 73 நாடுகளை சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 80 கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில், கரூர் மாணவர்களின் கண்டுபிடிப்பும் ஏற்று கொள்ளப்பட்டதோடு, 3 பேருக்கும் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டது. இவர்களின் இந்த சிறிய அளவிலான செயற்கைகோள் அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் நாசாவின் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து இதனை வடிவமைத்த மாணவர்கள் கூறியதாவது:-

அறிவியில் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பாடுபட்டு 3 செ.மீ. அளவுள்ள, 64 கிராம் எடையில் இந்த செயற்கைகோளை கண்டுபிடித்தோம். ரி இன்போர்சுடு கிராப்னி பாலிமர் எனப்படும் மெட்டலைவிட 100 மடங்கு உறுதி வாய்ந்த பொருளை கொண்டு இதன் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை விண்ணில் ஏவுவதன் மூலம் உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் லேசான செயற்கைகோளாக இது வலம் வர உள்ளது.

இதில் 13 சென்சார்கள் உள்ளன. இதன்மூலம் நம்மால் 20-க்கும் மேற்பட்ட அளவுகளை (பாராமீட்டர்ஸ்) பெற முடியும். மேலும், ராக்கெட்டிற்குள் நிகழும் காஸ்மிக் கதிர்களின் தன்மையை பற்றியும் அறிய முடியும். இதற்கு தேவையான சக்தியானது செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களில் இருந்து கிடைக்கிறது.

இதனை உருவாக்க ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவானது. ஒரு ஆண்டுக்குள் இதனை உருவாக்கினோம். இந்த செயற்கை கோள் உருவாக்க சில தனியார் அமைப்புகள் மற்றும் ஏராளமானோர் நிதியுதவி அளித்தனர். தொடர்ந்து எதிர்காலத்தில் பெரிய அளவிலான செயற்கைகோளை உருவாக்கி அதில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதை நோக்கி தான் எங்களின் செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக