வெள்ளி, 25 செப்டம்பர், 2020

Evergreen favourite singer என்ற பெருமிதத்தோடு விடைபெறுகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

Ravi Pallet
  Sivasankaran Saravanan : இறவாப்புகழ் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது பாடும் திறனைப்பற்றி தனியாக எடுத்துச்சொல்லவேண்டிய அவசியம் இல்லை. 50 + வருடங்களாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஒருவர் பாடியிருக்கிறார் என்பது வருங்காலங்களில் பிரமிப்புடன் பார்க்கப்படும். எத்தனையோ பாடகர்கள் நல்ல குரல்வளத்துடனும் , பாடும் திறமையும் பெற்றிருந்தபோதிலும் பாலு மட்டும் ஏன் நமக்கு ரொம்ப நெருக்கமாகிறார் என யோசித்ததுண்டு.
சூப்பராக இல்லாவிட்டாலும் , சுமாராகவாது பாட வேண்டும் , பாடி பிறரை கவரவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு சிறுவயது முதலே உண்டு. என்னைப்போல சுமாராக கூட பாடத்தெரியாதவர்கள் தான் பெரும்பான்மையினர். இந்த பாட வராத பெரும்பான்மை மக்களுக்கு பிடித்த பாடகர் எஸ்பிபி. அதற்கு காரணம் அவர் பாடும் பாடல்கள் அவர் பாடுவதாலேயே எங்களுக்கு எளிமையாகிவிடுகிறது. எங்களைப்போன்ற சாமானியர்களுக்காகவே அவர் தனது மேதைமையை காட்டாமல் எளிமையாக பாடுவதாக நாங்கள் உணர்கிறோம். ஒருவேளை இதுதான் அவரது மேதைமையாக இருக்கலாம். நல்ல இசை ஞானமும் பயிற்சியும் பெற்று அவரை இன்ஸ்பிரேசனாக எடுத்துக்கொண்டு நிறைய பேர் பாடவருகிறார்கள். ஆனால் அப்படி வருபவர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு , தங்களது தனித்தன்மையை காட்டவேண்டும் என முடிவெடுக்கின்றனர். அதில் தவறேதும் இல்லை. ஆனால் எஸ்பிபியின் தனித்தன்மை என்று பார்த்தால் யார் வேண்டுமானாலும் அவர் பாடலை பாடலாம். யாருக்கு வேண்டுமானாலும் அவர் குரல் அப்படியே பொருந்தும்.
நன்றாக பாடத்தெரிந்த கமல்ஹாசனுக்கும் பாலுவின் குரல் அற்புதமாக பொருந்தும். பாட வராத ரஜினிகாந்துக்கும் அவர் குரல் தான் பெஸ்ட். இதுதான் எஸ்பிபியின் தனித்தன்மையாக நான் கருதுகிறேன். ஓட்டல் வைத்திருப்பவர்கள் மற்றும் அதில் பணிபுரிவர்களுக்கு இது நன்றாக புரியும்: ஓட்டல்களில் எத்தனையோ விதவிதமான புது உணவுவகைகளை அறிமுகம் செய்தாலும் evergreen best seller என்றால் இன்றுவரை இட்லி தான். இட்லி என்பது சாதாரண எளிமையான உணவு. வீடுகளில் மட்டுமல்ல ஓட்டல்களிலும் இட்லி தான் அதிகம்பேரால் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. சில பேர் இருக்கிறார்கள். ஓட்டலுக்கு வந்து வழக்கமான இட்லியே சாப்பிடுவதா? வித்தியாசமான, அதைவிட சுவை மிகுந்த அல்லது வேறு ஒரு புதிய சுவை உணவை சாப்பிட்டு பார்ப்போம் என்பார்கள். மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவே. இட்லிக்கே போயிடுவோம் என நினைக்கிற நாங்கள் தான் மெஜாரிட்டி. என்னைக்கேட்டால் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் குணம் இது தான். உணவு உடை உள்ளிட்டவற்றில் ரொம்ப கிரான்ட் டாக, மற்றவர்களை விட வித்தியாசமாக காட்டவேண்டும் என நினைக்கமாட்டாரகள். தங்களுக்கு தொந்தரவு தராத,எளிமையான அதேசமயம் மனதுக்கு நெருக்கமானவற்றையே அதிகம் விரும்புவார்கள். அது எத்தனைக்காலம் ஆனாலும் போரடிக்காது. எஸ்பி பாலுவின் குரலும் அப்படிப்பட்டது தான். தமிழர்களுக்கு சலிப்பே தராத குரல் அவருடையது.
ரஜினிகாந்த் படத்தின் முதல் பாடலை பாலு தான் பாடவேண்டும். எத்தனை வருடங்கள் ஆனாலும் எங்களுக்கு அதுதான் பிடிக்கும். வித்தியாசமாக செய்யவேண்டும் என புதுசாக ஒருத்தரை பாடவைக்கலாம். அவர் நன்றாக பாடலாம். சிறப்பானவகையில் கூட அந்த பாடலை புது பாடகர் பாடியிருக்கலாம். ஆனால் ஏனோ தெரியாது எங்களுக்கு எஸ்பிபி பாடினால் தான் பிடிக்கும். கர்னாடக இசையில் நிபுணத்துவம் பெற்ற மிகத்திறமைவாய்ந்த பாடகர்கள் , மிக சிறந்த குரல் வளத்துடன் இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஏற்றார் போல அவர்கள் பாடுவதில்லை. அதே அளவு திறமையை வைத்துக்கொண்டே பாலு எங்களுக்கு பிடித்தமாதிரி எளிமையாக பாடுகிறார் - எங்களையும் கூட சேர்ந்து பாடவைக்கிறார். பாடத்தெரியவில்லையே என்ற எங்களின் தாழ்வு மனப்பான்மையை போக்குகிறார். அதனால் தான் ஐம்பது ஆண்டுகளை கடந்தும் அவர் சாமானிய மனிதர்களின் விருப்பத்திற்குரிய பாடகராக மிளிர்கிறார்.
பாடும் திறமை எனபதைத்தாண்டி அவரது மொழி உச்சரிப்பு குறிப்பிடத்தக்கது. திரையில் யாருக்கு பாடுகிறோம், எந்த சூழ்நிலையில் இந்த பாட்டு வருகிறது, பாடலாசிரியர் எந்த அர்த்தத்தில் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார், இசையமைப்பாளரின் எதிர்பாரப்பு என்ன இவை அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு திரையில் உண்மையிலேயே அந்த நடிகர் பாடுவது போல பாடுவது தான் எஸ்பிபி ஸ்பெசல். ல , ள, ர, ற உச்சரிப்பில் கூட துல்லியமாக இருக்கும் அவர் குரல். இது எல்லாவற்றையும் விட இத்தனை மேதைமை தனக்கு இருந்தும் கூட அது எதையும் தனது ரசிகர்களிடமோ வேறு எவரிடமோ காட்டாதது அவருக்கே உரித்தான கூடுதல் சிறப்பு. தனக்கு எதிரில் பாடும் இளம் பாடகர்களை comfortable ஆக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் கண்ணியம் , பாராட்டும் குணம் இதெல்லாம் அவரை கலைஞன் எனபதைத்தாண்டி நம்மை அவரோடு இன்னும் நெருக்கமாக உணரவைக்கின்றன.
தான் மருத்துவமனைக்கு செல்லும் வரையிலும் கூட பாடிவந்த எஸ்பிபியின் மறைவு ஒருவகையில் எனக்கு ஆறுதல் தான். இன்றுவரையிலும் அவர் குரல் சலிக்கவேயில்லை. திரையுலகில் ஒரு போக்கு உண்டு. அரசியல் போல இவர்களும் ஓய்வு தரவேமாட்டார்கள். மிகப்பெரிய ஹிட் படங்களைத்தந்த இயக்குநர் வயதான காலத்திலும் அடுத்தபடம் எப்ப பண்ணுவீங்க சார் என அழுத்தம் தந்தபடியே இருப்பார்கள். பாடகர்களை கேட்கவே வேண்டாம். வயது முதிர்ந்தாலும் விடமாட்டார்கள். உங்கள் குரலை கேட்டாகவேண்டும் என அடம்பிடித்து பாடவைப்பார்கள். மிகச்சிறந்த பாடல்களைப்பாடிய டிஎம்எஸ் , பி.சுசீலா போன்றவர்களை வயதான காலத்திலும் பாடவைத்து அவர்கள் குரலில் ஏற்பட்ட தொய்வை ரசிகர்களுக்கு காட்டியவர்கள் நம் திரைத்துறையினர். எஸ்பிபியை நிச்சயம் இப்படி அழுத்தம் தந்திருப்பார்கள். இப்போது அதுபோல இன்றி , Evergreen favourite singer என்ற பெருமிதத்தோடு விடைபெறுகிறார் பாலு.
-சிவசங்கரன் சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக