வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ஊரடங்கால் வறுமையில் தவிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்! பட்டினிச் சாவிலிருந்து காக்க வேண்டுகோள்!

ns7.tv :கொரோனா கொடூரத்தால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் முற்றிலும் ரத்தாகிவிட்டன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கலைஞர்கள் பட்டினிச் சாவிலிருந்து தங்களைக் காக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகைச்சுவையாலும், நல்ல கருத்துக்களாலும் மக்களை மகிழ்விக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வை சூறையாடிவிட்டது கொரோனா. உயிரைக் காக்க மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் கோயில் திருவிழாக்கள் ரத்தாகி விட்டன. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள், நடிகர்கள், நாடக கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். 

தை மாதம் முதல் ஆடி மாதம் வரையிலான திருவிழாக் காலம். அந்த காலத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் ஆண்டு முழுவதும் வாழ்க்கையை நடத்துவார்கள் நாட்டுப்புற கலைஞர்கள். கொரோனாவால், இதுவரை புக் செய்யப்பட்ட நாட்டுப்புற கலை  நிகழ்ச்சிகள் ரத்தாகி விட்டன. வருமானமும் போய்விட்டதால், தங்களை பட்டினிச் சாவில் இருந்து காக்க வேண்டியது அரசின் கடமை என்கின்றனர் இந்த ஏழைக் கலைஞர்கள். 

தமிழகம் முழுவதும் உள்ள 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை கிடைக்கும். மற்றவர்கள் பாடு திண்டாட்டமாகிடும் என்பது தான் உண்மை நிலை. எனவே நல வாரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் அரசு உதவியளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக