சனி, 26 செப்டம்பர், 2020

ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறது. அதிக வரி காரணம்..

RS Prabu : ஈருருளி தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. அதிக வரி விதிப்பைக் காரணம் காட்டுகிறார்கள். அஃது உண்மைதான். அதே வரி சொகுசு கார்களுக்கும் உண்டு ஆனால் அதன் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
வருங்காலத்தில் மேலாண்மை கல்லூரிகளில் சந்தைப்படுத்தல் பிரிவில் ஹார்லி டேவிட்சன் ஓர் உதாரணமாக காட்டப்பட்டும்.
மேலை நாடுகளில் குறைவான காலமே வெயில் என்பதால் அவர்கள் road trip என்ற பெயரில் சூப்பர் பைக் வாங்கி பயணிப்பதற்கு அங்குள்ள சாலை உட்கட்டமைப்பு, போக்குவரத்து விதிகளை மதிக்கும் ஒழுக்கம் ஆகியவையும் காரணம்.
நம் ஊரில் road trip கலாச்சாரம் இராயல் என்ஃபீல்ட் ஆசாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏதோ ஏழைக்கேற்ற எல்லுருண்டை என்ற அளவில் ஒன்றரை இலட்சத்திற்கு ஒரு வண்டி வாங்கி லடாக் வரைக்கும் ரோட் ட்ரிப் போய் வந்துவிட்டால் பிறவிப் பயனை அடைந்துவிட்டதாக கிடைக்கும் ஒவ்வொரு நபரிடமும் அதைப் பேசியே கொல்லுவார்கள். சரி, நம்ம பயலாச்சே பேசட்டுமே என்று பாட்டிலைத் திறக்கும் போதெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டி இருப்பது இராயல் என்ஃபீல்ட் வண்டி உரிமையாளர்களுடைய நண்பர்களாக இருப்பவர்களின் சமூகக் கடமையாகும்.
ஆனால் 6 இலட்சத்துக்கு ஆரம்ப விலை என்று ஒரு பைக்கை சந்தைப்படுத்தும் முன்பு எவ்வளவு பேர் அதை வாங்குவார்கள், அந்த நாட்டின் சாலை வசதி, மக்களின் செலவளிக்கும் மனப்பாங்கு போன்றவற்றை ஆராயாமல் கையை விட்டு சுட்டுக்கொண்டது ஹார்லி டேவிட்சன் செய்த தவறு.
பெனெல்லி, கவாசகி, கேடிஎம் போன்றவையும் கடை போட்டிருக்கிறார்கள். அவர்களின் portfolio-வில் 2 இலட்சம் முதல் வண்டிகள் இருக்கின்றன. யாராவது விற்க விரும்பினால் பாதி விலைக்காவது போகும். ஆனால் ஹார்லி டேவிட்சனின் pre-owned bike market அதாவது நம் ஊரின் பேச்சு வழக்குப்படி second hand bike market என்பது பூஜ்யம்.
ஹார்லி டேவிட்சனை எடுத்துக்கொண்டு நீண்ட தூர ரோட் ட்ரிப் மட்டுமே செல்ல முடியும். மினி ரோட் ட்ரிப் என்று பக்கத்து டவுனுக்கு சென்று வியாபார விசயமாக யாரையாவது பார்ப்பதோ, உறவினர் வீடுகளுக்கோ செல்லவும் முடியாது. ஒரு கல்யாண வீட்டுக்கோ, இழவு வீட்டுக்கோ எடுத்துச் செல்லவும் உதவாது. இதில் சும்மா ஏறி உட்கார்ந்து பார்த்த ஒரு நீதிபதியால் நடந்த கதைகளை நாடே அறியும்.
அந்த காலத்தில் இருந்து பைக்கிலேயே சுற்றிப் பழக்கப்பட்ட ஜாவா ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவன் கூட ஹார்லியைத் தவர்த்துவிட்டு பிஎம்டபிள்யூ பைக்குகளை விரும்புகிறார். இப்போது அமெரிக்காவில் 14 மாகாணாங்களுக்கு ரோட் ட்ரிப் அடித்துக் கொண்டிருக்கும் ஜக்கி, பெனெல்லி பைக்குகளை பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிக வரி விதிப்பு தவறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன மெஷின் என்பது போல எதையாவது கொண்டுவந்து வைத்து கடை போட்டுவிட்டு, அந்த ஊர் மக்களுக்கு வாங்கும் சக்தியில்லை, இரசனையில்லை, வாழத் தெரியவில்லை என்று சொல்வது தவறு.
சும்மா கல்யாண பத்திரிகைகளில் USA, UK, Australia என்று பெயருக்குப் பின்னால் போடுவதற்கு வாரிசுகளை நாற்பது ஐம்பது இலட்சம் செலவு செய்து வெளிநாடு அனுப்பி படிக்க வைத்து, ஒரு ஏக்கரை விற்று இரண்டு கோடிக்கு வீடு கட்டி, 25 இலட்சத்துக்கு ஒரு இன்னோவா வாங்கிக் கொடுத்து இருபது இலட்சம் செலவு செய்து கல்யாணம் பண்ணி வைக்கும் ஏழை விவசாயிகளை ஒவ்வொரு கிராமத்திலும் வைத்திருக்கும் ஊரில் மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லை என்று ஒரு அமெரிக்க நிறுவனம் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக