செவ்வாய், 15 செப்டம்பர், 2020

தமிழரும் தமிழ்நாடும் பெற்ற வரங்கள் பெரியார், அண்ணா,கலைஞர்.. வாய்த்த சாபங்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்.

LR Jagadheesan: தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் சுயமரியாதை; சுயசார்பு; சுயாட்சி ஆகிய மூன்றின் குறியீடு அண்ணா என்கிற மூன்றெழுத்து சொல். அந்த மூன்றையும் துள்ளத்துடிக்க கொன்று புதைத்துவிட்டு அண்ணாவின் பிறந்தநாளுக்கு போற்றி பாடுவதால் தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்கோ என்ன பயன்? 

காஞ்சியில் பிறந்தவர் என்பதால் அண்ணா என்ன இன்னொரு அத்திவரதரா? பூஜிக்கவும் பஜனை பாடவும்? அவர் தமிழ் அரசியலின் உன்னத உருவகம். தமிழனின் போராட்டகுணத்தை தன் தலைமைத்துவத்தால் பொறுப்புணர்வாக்கி ஆக்கப்பூர்வ அரசியலுக்கு அடிகோலிய மூத்தோன். அவர் போட்டுவிட்டுப்போன வலுவான அடித்தளம் தான் இன்றுவரை நின்றுபிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழரின் தலை தாழாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.       அதற்கு நேர் மாறாக யதார்த்த உலகில் மோடியின் எடுபிடி எடப்பாடிக்கெல்லாம் அல்லக்கையாக செயற்பட்டுக்கொண்டே, அதனால் வரும் பயன்கள் அத்தனையையும் எந்த கூச்சமும் இன்றி அனுபவித்துக்கொண்டே, மெய்நிகர் உலகில் அண்ணா எங்கள் தெய்வமே என்று உருகுவதெல்லாம் சிவாஜியே பார்த்து மிரளும் நவரச நடிப்பு. பாவம் நடித்துக்களைத்து விட்டீர்கள் நடிப்புச்சுதேசிகளே. கொஞ்சம் ஓய்வெடுங்கள். 

அண்ணாவுக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போட்டுவிட்டுப்போன சதகோடி நாமங்களே போதும். உங்களின் நாடகீய நாமாவளிகள் அவருக்குத்தேவையில்லை. உண்மையில் தமிழரும் தமிழ்நாடும் பெற்ற வரங்கள் பெரியார், அண்ணா,கலைஞர். அவர்களுக்கு வாய்த்த சாபங்கள் 21 ஆம் நூற்றாண்டு தமிழ்நாடும் தமிழரும். அதன் மிகச்சிறந்த உதாரணம் மோடி காலால் இட்ட கட்டளையை தலைமேற்கொண்டு நிறைவேற்றும் எடுபிடி எடப்பாடியும் அவரது அரசும். முடிந்தால் அந்த களங்கத்தை அகற்ற உதவுங்கள். முடியாத பட்சத்தில் மூடிக்கொண்டிருங்கள். போலி போராளித்தனம் செய்யாமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக