செவ்வாய், 15 செப்டம்பர், 2020

நீட் தேர்வை ரத்து செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

vinavu :ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் ! மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் ! தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்காதே ! நீட் தேர்வின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நீட் தேர்வு என்பது நவீன கால மனுநீதியே என்பதை அம்பலப்படுத்தும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தட்சணையாக ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரி வெட்டிக் கேட்டு அவன் திறனை முடக்கியது போல, இன்று கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை வெட்டி எறியவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படி தமது மருத்துவக் கனவு வெட்டியெறியப்பட்டதன் காரணமாகவே பல மாணவர்கள் மனமொடிந்து தற்கொலையை நோக்கிச் செல்கின்றன. நவீன மனுநீதியான இந்த நீட் தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்தாவிடில் இன்னும் பல உயிர்களை நாம் இழக்க வேண்டிய சூழலே ஏற்படும்.

நீட் தற்கொலைகளுக்குக் காரணமான மத்திய மாநில அரசுகளின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா மற்றும் ம.க.இ.க புரட்சிகர கலைக் குழுவைச் சேர்ந்த தோழர் லதா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ப்ரீத்திவ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் சுந்தர்ராஜ் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் கமலக்கண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் கனகராசு, மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனர் தோழர் பஷீர், மக்கள் உரிமைக் கூட்டணி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயா சின்னதுரை, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ரமணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் தோழர் சந்தான மொழி, ரெட் பிளாக் கட்சியின் தோழர் ஏசி ராமலிங்கம், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் ராஜா, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு அமைப்பின் தோழர்கள், நண்பர்கள் பெருந்திரளாகக் கூடி திருச்சியில் இன்று 13.09.2020 காலை 11.30 மணியளவில் பாலக்கரை பிரபாத் தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

பிறகு தோழர்கள் அனைவரும் நீட் தேர்வின் அபாயத்தை விளக்கிப் பேசினார்கள். நீட் தேர்வுக்கு முடிவு கட்டும் வரை தமிழகம் முழுவதும் எமது அமைப்புகள் மற்றும் முற்போக்கு,ஜனநாயக அமைப்புகளின் போராட்டம் தொடரும் என அறைகூவல் விடுத்தனர். இறுதியாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு வந்திருந்த அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி – 94454 75157

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக