சனி, 12 செப்டம்பர், 2020

ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அறிவிப்பு!

minnambalam : திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 89. 19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது.இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 12) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “ஜெகத்ரட்சகன் எம்பி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் 1999 பிரிவு 37 ஏ இன்-படி முடக்கி வைத்து அமலாக்கத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி ஜெகத்ரட்சகனும், அவரது மகன் சுந்தீப் ஆனந்தும் சிங்கப்பூரில் இருக்கும் சில்வர் பாக் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முறையே 70 லட்சம் பங்குகளையும், 20 லட்சம் பங்குகளையும் கையகப்படுத்தியுள்ளனர். ஒரு பங்கின் மதிப்பு ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரானது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் இந்தப் பங்குகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பங்குகள் அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் பிரிவு 4க்கு எதிராக ஜெகத்ரட்சகனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. .

ஃபெமா சட்டப் பிரிவு 37 ஏ இன் விதிகளின்படி, இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள ஏதேனும் அந்நிய செலாவணி, அல்லது அசையாச் சொத்துக்கள் ஃபெமாவின் 4 வது பிரிவுக்கு முரணாக வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், அமலாக்க இயக்குநரகம் கைப்பற்ற அதிகாரம் அளிக்கிறது, அத்தகைய அந்நிய செலாவணி, அசையாச் சொத்துக்கள் இந்தியாவிற்குள் அமைந்துள்ளது. அதன்படி, ஜெகத்ரட்சகன் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய நிலங்கள், இடங்கள், வீடுகள் போன்ற அசையா சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் மற்றும் பங்குகளில் நிலுவை வடிவில் நகரக்கூடிய சொத்துக்கள் என மொத்தம் ரூ .89.19 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடந்து வருகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக