சனி, 5 செப்டம்பர், 2020

இந்தி எதிர்ப்புப் போராளி' சி.இலக்குவனார் நினைவு நாள் (3.9.1973)

 Sundar P : இந்தி எதிர்ப்புப் போராளி' சி.இலக்குவனார் நினைவு நாள் (3.9.1973)

1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழாசிரியர்களின் பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழாசிரியர்களே... மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம் தான் தமிழகமெங்கும் மாணவர்களை போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சி.இலக்குவனார் வைத்த முதல் 'தீ' தான் காங்கிரசு ஆட்சிக்கு கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார் இந்தி எதிர்ப்புப் போருக்கு மாணவர்களை அனுப்பியதோடு தாமும் போர்க்களத்தில் குதித்தார்.

மதுரை முதல் சென்னை வரை 'நடைப்பயணம்' மேற்கொள்ளப் போலதாக அறிவித்த போது முதல்வர் பக்தவத்சலம் உடனே பணி நீக்கம் செய்திட ஆணையிட்டார்.

என் அலுவல் போனால் போகட்டும், இந்தியை ஒரு போதும் ஆள விட மாட்டேன்! என்று இலக்குவனார் முழங்கிய போது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தமிழறிஞர் எனும் பெருமை இலக்குவனாருக்கு வந்தடைந்தது.

பேராசிரியர் இலக்குவனார் 'தொல் காப்பியம்' நூலை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

தொல்காப்பியத்தின் காலம் "கி.பி. 2ஆம் நூற்றாண்டு" என்று பல அறிஞர்கள் கூறிய நிலையில், "கி.மு.7ஆம் நூற்றாண்டே" தொல் காப்பியத்தின் காலம் என்று ஆதாரங்களோடு மெய்ப்பித்தார்.

அதனை, "Thol kappiam in english with critical studies" என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

முன்னாள் முதல்வர் அண்ணா வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது இலக்குவனாரின் ஆங்கில நூலை போப்பாண்டவருக்கும் அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கும் பரிசாக அளித்தார்.

அண்ணாதுரை ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பக்தவச்லம் அரசின் பணி நீக்க ஆணையை இரத்து செய்து மீண்டும் பணி வழங்கிடவும் செய்தார்.

திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார் அறியப்பட்ட போதிலும் சிலப்பதிகாரத்தை பழித்தவர் அல்ல; 1951ஆம் ஆண்டு ஆம்பூரில் திராவிடர்கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகராக இருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்திப் பேசும் இலக்கியம் என்று பேசினார்.

அதை விடுதலை ஏடே (15.3.1951) 'சிலப்பதிகாரத்தின் சிறப்பு' என்று தலைப்பு கொடுத்து வெளியிட்டது.

அண்ணாதுரை அவர்கள் "தீ பரவட்டும்" என்று கூறி கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற தமிழ் நூல்களை கொளுத்த வேண்டும் என்று அந்தக் காலத்தில் பேசி வந்தார்.

அப்போது "கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்கள் மூடநம்பிக்கைகளை பரப்புவது உண்மையென்ற போதிலும், மூடக்கருத்துகளை விலக்கியும், சிறந்த நெறிகளையும், மொழிவளத்தையும் இனங்கண்டு போற்றியும் பின்பற்றுவதை விடுத்து அவற்றைக் கொளுத்த முனைவது தேவையற்றது" என்று மறுப்பு எழுதினார்.

அது போல் திராவிட இயக்கங்களுக்கே உரிய ஆங்கிலப் பித்தும் கொண்டவரல்ல;

ஒருமுறை நாவலர் நெடுஞ்செழியன் தமிழ்ப்பயிற்று மொழி குறித்த விவாதத்தில் ஆங்கிலத்திற்கு ஆதரவாகப் பேசிடவே, அவர் சினங்கொண்டு "தமிழ்மொழி நாவலரா? ஆங்கில மொழிக் காவலரா?" என்று அறிக்கை விடுத்தார்.

அவர் அனைத்துக் கல்லூரிகளிலும் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தி வந்ததை எதிர்த்து வந்ததோடு கல்லூரிகளில் உடனடியாக தமிழ்ப் பயிற்று மொழித்திட்டத்தை அனைத்து நிலைகளிலும் கொண்டு வரவேண்டுமென்று தான் நடத்திய "குறள்நெறி" ஏட்டிலே தொடர்ந்து எழுதி வந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக