ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

எகிப்தில் கிடைத்திருக்கும் இந்தியக் குரங்கின் எலும்புக்கூடு

 S
ubashini Thf
அண்மைய கால உலகளாவிய அகழ்வாய்வுகளில் சுவாரஸ்யமான ஒரு தகவல் பற்றி அண்மையில் வாசித்தேன். செங்கடல் பகுதியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு துறைமுக நகரமாக இன்றைய எகிப்து நாட்டில் இருக்கின்ற பெரனிஸ் என்ற துறைமுகப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு இது.
தூங்கிக் கொண்டிருக்கின்ற குழந்தையை போல உடல் வைக்கப்பட்டு ஒரு இறந்த குரங்கின் உடல் புதைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் குரங்கின் எலும்புக்கூடு, இது ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும்,இது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குரங்கு ஒன்றின் எலும்புக்கூடு என்றும் அகழ்வாராய்ச்சி குறிப்பிடுகின்றது. இந்த எலும்புக்கூடு எகிப்தின் பண்டைய பெரனிஸ் துறைமுக நகரில் விலங்குகள் மயான பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3D scan வகை ஆய்வின் வழி இது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குரங்கு என்பதைப் போலந்து அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் மார்த்தா அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். link link

இதுவரை ஆப்பிரிக்க பகுதிகளில் இந்திய வகை குரங்குகள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டவில்லை என்றும் இதுவே முதல் கண்டுபிடிப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பண்டைய இந்தியாவிலிருந்து கடல் வழி பயணத்தில் தொடர்ச்சியாக பல வாரங்கள் கப்பலில் கொண்டுவரப்பட்டு, செங்கடல் பகுதியில் இளம் வயதிலேயே இந்தக் குரங்கு இறந்திருக்க வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தக் குரங்கு இறந்து போனதற்குக் காரணம் அதன் உணவு வகை மாற்றமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றனர். இந்தக் குரங்கு படுத்துக்கொண்டிருக்கும் வகையில் இதனை புதைத்திருக்கின்றார்கள். அதன்மேல் துணி போன்ற கம்பளி மூடப்பட்டுள்ளதும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அருகாமையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கிடைக்கின்ற சிப்பிகள், எம்ஃபோரா பானைகளின் உடைந்த சில்லுகள், மூன்று பூனைகளின் எலும்புக்கூடுகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.

பண்டைய ரோமானியர்களும், எகிப்தியர்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குரங்குகளை வீட்டு விலங்குகளாக வைத்திருக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும், அதற்காக குரங்குகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர் மார்த்தா கூறுகிறார்.
விலங்குகளுக்கான மயானத்தில் இந்த குரங்கின் எலும்பு கூடு புதைக்கப்பட்டுள்ளது என்று அறியும் போது இந்தப் பகுதியில் பண்டைய எகிப்திய பண்பாட்டில் ஈமக்கிரியை என்பது முக்கிய பங்கு வகிப்பதையும் மம்மிகள் உருவாக்கம், பிரமிடுகள் கட்டுமானம் என்ற சிந்தனையின் தொடர்ச்சியாக விலங்குகளுக்கும் தனிப்பட்ட மயானம் இருந்தது பற்றியும், அவை புதைக்கப்படும் போது அவற்றோடு மேலும் சில பொருட்களும் உடன் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட செய்தியும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கும் ரோமானிய பேரரசுக்கும் இடையிலான நீண்டகால வணிகமுயற்சிகள் மற்றும் அதன் பொருட்டு நிகழ்ந்த கடல்வழி பயணங்கள் ஆய்வாளர்களுக்கு மேலும் மேலும் பல புதிய செய்திகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. வரலாற்று ஆய்வில் அகழாய்வுகளுக்கான அதிகப்படியான கவனம் கடற்கரையோர நகரப் பகுதிகளில் நிகழ்த்தப்பட வேண்டியது அவசியம் என்பதை இத்தகைய கண்டுபிடிப்புகள் நமக்கு உறுதி செய்கின்றன.

-முனைவர்.க.சுபாஷிணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக