ஈட்டி´ என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. (´குடிஅரசு´, 06.12.1947) பார்ப்பனியத்தின் படுமோசமான போக்கை, அதனால் ஏற்படும் ஆக்கிரமமான அழிவுகளை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டி அப்பார்ப்பனியப் பிடிப்பிலிருந்து நாம் (திராவிடர்கள்) அகன்றால்தான் நமக்கு வாழ்வுண்டு என்பதையும் சொல்லி வந்திருக்கின்றோம்.
பார்ப்பனியம் இந்த நாட்டில் நுழைந்த காலத்திலிருந்தே அதற்கு எதிர்ப்பு இருந்து வந்திருக்கின்றது. அதற்கு ஏற்பட்டிருக்கும் அளவற்ற எதிர்ப்புக்குப் பிறகும், அது இன்னும் ஆட்சி செய்கிறதென்றால் – ஆட்சியை ஆட்டி வைத்து வருகின்றதென்றால், அதற்குக் காரணம் அந்தப் பார்ப்பனியத்தின் “எட்டினால் குடுமியைப் பிடி, எட்டாது போனால் காலைப்பிடி” என்கிற போக்குத்தான் காரணம் என்றும் விளங்கி வந்திருக்கின்றோம்.
இந்தப் போக்கினாலேயே, அதாவது வளைந்து, தெளிந்து, மறைந்து நடத்தும் நடவடிக்கைகளினாலேயே, அதன் விஷக்கடிக்கு – வெறிப் பற்களுக்கு இரையானவர்களாகவும், இரையாகிக் கொண்டிருப்பவர்களாகவும் திராவிடர்கள் இருந்துவர வேண்டியதாயிருக்கிறது. இருந்தும், இவ்வளவு அழிவிற்குப் பிறகும்கூட திராவிடர் சமுதாயம் தனக்கு ஏற்பட்டு வரும் மீள முடியாத கேட்டையுணரவில்லை என்றால், இவ்வளவு மானமற்ற சமுதாயம் வேறு ஒன்றும் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்பதைத் தவிர நம்மால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
கஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் – பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.படையெடுத்து வந்த
வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக்குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம். வெள்ளையராட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி பலமான நேரத்தில் அக்கிளர்ச்சி ஸ்தாபனத்தைக் கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களைப் பலி கொடுத்து உறிஞ்சிப் பிழைத்து வந்தது இப்பார்ப்பனியம். இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய பிறகு, ஜெர்மானியன் வரலாமென்று கனவு கண்டு, அதற்குத் தக்க விதமாய் ஆயத்தப்படுத்திக் கொள்ள, அதாவது ஆரிய சாம்ராஜ்ய பதியே! வருக! வருக! என்று வரவேற்புக் கொடுப்பதற்காக ஜெர்மன் மொழியைக் கற்க ஆரம்பித்தது பார்ப்பனீயம்.
வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு எல்லா வகையான பார்ப்பனர்களும், லோக குரு சங்கராச்சாரியிலிருந்து லோட்டா அலம்பும் கிருஷ்ணமூர்த்தி வரை எக்காளமிட்டுத் திரியும் நிலையை இன்று பார்த்து வருகின்றோம். இந்த முயற்சிக்கு நம்மவர்கள் என்று சொல்லத்தக்க சில திராவிடர்களும், விபீஷணர்களாகி இருக்கும் நிலையை எண்ணும்போது நாம் உண்மையிலேயே வருந்த வேண்டியதாயிருக்கிறது.
“இந்து மதத்திலும் பண்பாட்டிலும் நம் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் சிரத்தையுண்டாகப் புத்தகம் ஒன்று தமிழில் எழுதுவோருக்கு, ரூ.1000-பரிசு. புத்தகம் 12-வயது முதல் 16-வயது வரையுள்ள பையன்களுக்கும், பெண்களுக்கும் படிக்கத்தக்கதாயிருக்க வேண்டும். சர்.எஸ்.வரதாச்சாரி, திவான்பகதூர் கே.சுந்தரம் செட்டி கே.பாலசுப்பிரமணிய அய்யர், சி.கே.சுப்பிர மணிய முதலியார், டாக்டர் வி.ராகவன் ஆகியோர் தீர்ப்புக் கூறுவர். இத்தீர்ப்பு கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி அங்கீகாரத்துக்குட்பட்டதாகும்” என்று ஒரு செய்தி சுதேச மித்திரனில் வெளியாகி இருக்கிறது.
தம் சிறுவர் சிறுமிகள் யார்? திராவிடர் சிறுவர் சிறுமிகளைத் தானே இங்கே “நம்” என்று உரிமை கொண்டாடப்படுகின்றது. இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை என்று பலகாலமாக நாம் சொல்லி, உண்மையாய் இல்லாத ஒன்றை நாம் ஒப்புக்கொண்டு வந்ததனாலேயே இந்த இழிவான நிலைமைக்கு நாம் ஆளாகி வந்திருக்கின்றோம். இதனைப் பல ஆராய்ச்சியாளர்களும் சைவ வைணவப் பண்டிதர்களும்கூட ஒப்புக்கொண்டு பேசி எழுதி வந்திருக்கிறார்கள். அப்படியிருக்க இம்மாதிரியான ஒரு முயற்சியை ஒரு மடச்சாமியார் ஏன் தொடங்க வேண்டும்? இதனை மற்றையப் பார்ப்பனர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? அதில் சுதந்திரங்களும், சுப்பிரமணியங்களும் ஏன் அந்த ஜோதியில் கலந்து கொள்ள வேண்டும்?
“பார்ப்பன ராஜ்யம் நடக்கிறது. வெள்ளைக்காரனாட்சியினால் வர்ணாசிரம தருமம் மாறிப்போய்விட்டது. வர்ணாசிரமத்தை நிலைக்க வைக்க நாம் மகாத்மாவை படைத்துக் கொண்டிருக்கின்றோம். வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து பல சூத்திரர்கள் நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் தேவடியாள் மகன்? என்று கேட்க ஆரம்பித்திருக்கின்றார்கள். இவர்களை நாம் எப்படியாவது அடக்கிவிடுவோம். அதாவது அவர்களிலேயே சிலருக்கு உத்தியோகங்களைக் கொடுப்பது, சிலருக்குப் பண ஆசை காட்டி வியாபாரங்களுக்குச் சலுகை காட்டுவது. இவ்வாறு செய்து இவர்களைக் கொண்டே மற்றவர்களை அடக்கிவிடுவோம். எதிர்காலத்திலேயும் இம்மாதிரியான தொந்தரவுகள் இருக்கக் கூடாது. அதற்கு இளமையிலேயே இந்த வருணாசிரம தருமத்தைப் புகுத்திவிடுவோம். இப்போதிருக்கிற கல்வி மந்திரி நம்முடைய அடிமை. அந்த அடிமையைக் கொண்டு திராவிடர் உணர்ச்சி கொண்டு ஒரு சில ஆசிரியர்களையும் ஒழித்துவிட ஏற்பாடு செய்து விட்டோம். திராவிட உணர்ச்சியை ஊட்டி வந்தவர்களை ஒழித்துவிட்டால் மட்டும் போதாது, அதற்கு மாறான நம்முடைய கருத்தை நம்மினத்தின் பெருமையை, திராவிடர்கள் என்றுமே சூத்திரர்களாக இருக்கத்தான் வேண்டுமென்பதை, நிலைநாட்டுவதற்கு இனிப் புராணங்கள் போதாது.
ஆதலால் “பழைய கள் புதிய மொந்தை” என்பதுபோல் பழைய சரக்கையே சிரத்தையுண்டாக்கத்தக்க வகையிலே எழுத வேண்டும். அவ்வாறு எழுதியதை ஏ! சூத்திர அவினாசியே! பள்ளிக் கூடங்களிலே நாஸ்திகம் பரவிவிட்டது, அதைப் போக்க வேண்டுமானால் இதை உடனே பாடத்திற்குரியவை, பிள்ளைகளைப் படிக்கச் சொல் என்று சொல்ல வேண்டும். கேட்டுத்தானே ஆக வேண்டும். கேளாது போனால், அதாவது அதைப் பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திற்குக் கட்டாயமாக வைக்காது போனால், அந்த அவினாசியையே ஒழித்துவிடுவோம் என்பது அவினாசிக்குத் தான் தெரியாதா என்ன? என்கின்ற எண்ணமே தவிர இதற்கு நம்மால் வேறு ஒரு அர்த்தமும் சொல்ல முடியவில்லை.
இந்து மதத்திற்குப் புத்துயிர் தரும் இந்த முயற்சியிலே “இந்துலா” விலேயே மூழ்கி அதற்கு அடிமையாகி விட்ட சுந்தரஞ் செட்டியும், சைவமணி சுப்பிரமணிய முதலியாரும் தீர்ப்புக்கூற உடன்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையாயிருந்தால் நாம் அவர்களுக்குச் சொல்லுகிறோம்.
அய்யா, பெரியவர்களே! உங்களுக்கு வயதோ ஆகிவிட்டது. இதுவரைக்கும் நீங்கள் பிறந்த இனத்திற்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறீர்களா? அதுதான் இல்லையென்றால் தீமையாவது செய்யாமலிருந்திருக்கிறீர்களா? உங்களிலே ஒருவர் நீதிபதி, மற்றொருவர் சைவப் பண்டிதர், கடைசிக் காலத்திலேகூட திராவிடர்கள் உங்களை மறக்கக்கூடாது என்பதற்காகவா இந்த வேலை. நீங்கள் அய்வரில் இருவராக இருந்து அளிக்கப் போகின்ற தீர்ப்பு, பிறந்த இனம் உங்களுடைய பிற்காலச் சந்ததி, நான்காவது அய்ந்தாவது ஜாதிதான், அந்தந்தச் ஜாதியர்கள் அவரவர்களுக்குக் குறிப்பிட்ட வேலையைத்தான் செய்ய வேண்டும் என்று கூறப் போகின்ற தீர்ப்புத்தானே. இந்தத் தீர்ப்பைக் கூறி நீங்கள் நீண்ட பழியைத் தேடிக் கொள்ளாதீர்கள் என்பதுதான்.
லோக குருவின் இம்மாதிரியான முயற்சியினால் கொண்டு வரவிருக்கும் நூல் காலப்போக்கில் நமது திராவிடர் இளைஞர்களுக்குப் பாட நூலாக – அதுவும் கட்டாயமாகப் படிக்க வேண்டியதாக இருக்கப் போகின்றது என்பதை நாம் இப்பொழுதே சொல்லுகிறோம். திராவிடர் பெருங்குடி மக்களே! இந்த ஏற்பாட்டை அதாவது என்றைக்கும் நீங்கள் தேவடியாள் பிள்ளையாகவே இருப்பதற்கு ஒப்புக் கொள்ளப் போகிறீர்களா என்பதுதான் நமது கேள்வி? இதுதான் பார்ப்பனியத்தின் ஆசை என்பதை நாம் அதிகப்படுத்திக் கூறுகின்றோம் என்று யாரேனும் நினைத்தாலும் நினைக்கலாம். இதோ கீழே படியுங்கள்:-
“பாரத நாட்டு மக்களாகிய நம்மவர்கள் சென்ற நூற்றாண்டு முதல் நமது கலை, நாகரிகம், தர்மம் இவைகளைக் கற்றறிந்து கொள்ள சந்தர்ப்பமில்லாமல், ஆங்கிலத்தைக் கற்கும் போட்டியிலேயே ஈடுபட்டதனால் நமது தர்மத்தின் ஸ்வரூபம் விளங்காமலும் அதில் ஆர்வம் குறைந்தும் காணப்படுகின்றது. இந்நிலையில் நம் முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வழிபட்டு நம்முடைய உண்மையான நாகரிகம் நிலை பெற்று நிற்கும்படி, பொது மக்களுக்கு உதவியிருக்கும் அறமுறையை நம் தர்ம நூல்களில் உள்ளவாறு அறிந்து அநுஷ்டிப்பது நம் எல்லோருடைய கடமையுமாகும். இந்நோக்கத்தோடு ஸ்ரீ மடத்தின் ஆதரவுடன் இந்து கலாச்சாரக்கழகத்தாரால் அவ்வப்பொழுது அற (தார்மிக) வெளியீடுகள் பதிப்பித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வெளியீடுகள் கூடிய வகையில் எல்லாப்
பொது மக்களையும் எட்டும்படி, பிரசாரம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபடச்
சவுகரியமுள்ளவர்கள் எல்லோரும், இத்தொண்டில் உதவுமாறு இதன் மூலம்
கோரப்படுகிறது. இவ்விதம் ஈடுபடச் சவுகரியமுள்ளவர்கள், தங்களுடைய முழுப்
பெயர் விலாசங்களை மடத்து மானேஜருக்காவது அல்லது
கும்பகோணம் இந்து கலாசார கழகத் தலைவர் ஸ்ரீ ஆர்.கந்தசாமி மூப்பனார் என்ற
விலாசத்திற்காவது எழுதி அனுப்ப வேணும். நாங்கள் வசிக்கும் இடத்திற்குச்
சமீபமாக எவ்வளவு தூர எல்லைக்குள் பிரசாரம் செய்ய சவுகரியப்படும் என்பதையும்
தெரிவிக்க வேணும். தங்களுக்குத் தெரிந்த வரையில் எந்தெந்த ஊர்களில் பஜனை
மடங்கள் முதலிய சைவ வைஷ்ணவ ஆஸ்திக ஸ்தாபனங்கள் இருக்கின்றன என்பதையும்
கூடிய வரையில் முழு விவரங்கடன் எழுதும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.”
இது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குருவின் மடம் ஏஜென்ட் தெரிவித்த விக்ஞாபனம். (20-11-1947- சுதேச மித்திரனில் உள்ளது அப்படியே இங்கு தரப்பட்டிருக்கிறது.)
இதைத் திராவிடத் தோழர்கள் பலமுறை கருத்தூன்றிப் படிக்க வேண்டுமென்பது நமது ஆசை, வெள்ளைக்காரனாட்சியினால் வருணாச்சிரம தருமம் குலைந்து போய்விட்டது. (உண்மையில் பாதுகாத்தே வந்திருக்கிறது) இப்போது வந்திருக்கிற ராமராஜ்ஜிய ஆட்சியில் இது பழையபடியும் நன்றாக இடம் பெறவேண்டும் என்பது தான் பார்ப்பனியத்தின் முயற்சி என்பதை இந்த விக்ஞாபனத்தின் முதற்பகுதி அறிவிக்கிறதே தவிர வேறென்ன?
இந்தச் செயலுக்கு ஒரு கழகமாம்! அதற்கு மூப்பனார் தலைவராம்! தார்மிக வெளியீடு வழங்க ஏற்பாடாம்! அதைப் பிரசாரம் செய்யச் சவுகரியமுள்ளவர்கள் உதவவேண்டுமாம்! எப்படியிருக்கிறது பார்ப்பனியத்தின் பாய்ச்சல்?
ஏமாந்த நம் சோணகிரிகள் இதற்கும் அகப்படாமல் போகமாட்டார்கள். நாலு சோணகிரிகளை மேய்ப்பதற்கு ஒரு பார்ப்பான் வீதம் பாதுகாவலனுக்குப் போட்டு, இந்தப் பிரசாரம் நம் நாட்டுக் கிராமங்களில் நடப்பதோ, அதற்கு நம்முடைய சோணகிரிகளே பணம் கொடுப்பதோ நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இராமாயணம் பாரதங்களை பழைய சோணகிரிகளான ராஜாக்கள் இருந்த காலத்தில், பிரசாரம் செய்வதற்கு ஊர் ஏற்பாடாகி இருந்ததாம். இது கதையல்ல, கல்வெட்டுச் சொல்கிறது. ஊருக்கு ஒரு பார்ப்பான் அவன் அந்தந்த ஊரிலே இராமாயணம் பாரதங்களை மாற்றி மாற்றிப் பிரசாரம் செய்ய வேண்டும். அந்த ஊரிலே அவனே பொருளைச் சம்பாதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும். எப்படிப் பொருளைச் சம்பாதிக்கிறது? தெரியுமா? நாட்டு ராஜா பல வரிகள் மூலம் வசூல் செய்வது போல இந்த “ஊர் ராஜா” அரசன் போடாத வரிகளையெல்லாம் போட்டு வசூல் பண்ணிக்கொள்ளுகிறதாம். அதாவது நாட்டு ராஜா மத்திய கவர்ன்மென்ட் என்றால் இந்த ஊர் ராஜா மாகாண கவர்ன்மென்ட் மாதிரி. ஆமா, மாதிரிதான். ஏனென்றால், நம் மாகாண கவர்ன்மென்ட் தன் தேவைக்கெல்லாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இந்த ஊர் ராஜா அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இந்த மாதிரியான ஓர் ஏற்பாடு இனி நம் நாட்டிலே நடந்தால் கூட நாம் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
நாட்டிலே தமிழுணர்ச்சி பெருகியிருப்பதையறிந்த நயவஞ்சகப் பார்ப்பனியம், இதற்குப் பெயர் கொடுத்திருக்கிறது. கலாச்சாரக் கழகம் என்று, இதற்குத் தலைவர் கந்தசாமி மூப்பனார். திராவிடன் கையைக் கொண்டே திராவிடன் கண்ணைக் குத்த முயலும் பார்ப்பனியத்தின் படுமோசத்தை – ஜால வித்தையை திராவிடர்களே தெரிந்து கொள்ளுங்கள்.
மதுவிலக்கைச் செய்துவிட்டு, மதபோதையை ஊட்டி வருகிறது நமது ராமராஜ்யம். இது ஆச்சாரியாரின் அற்புதமான மூளையிலே உதித்த ஆலோசனை. இந்த ராமராஜ்யத்திலே லோக குருக்கள் கட்டளைக்கிணங்க மூப்பனார்கள் “இந்து பல்லக்கைச்” சுமப்பார்களேயானால் கேட்கவா வேண்டும்? நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிக விரைவிலேயே, பழைய காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை ஏற்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் செய்யப்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.
“இந்த லோககுரு” (எந்த லோகத்திற்கோ) முயற்சி தவிர, பிராமண சேவா சங்க முயற்சிகள் வேறு நடந்த வண்ணமாயிருக்கின்றன. சங்கக் காரியதரிசி, முதல் முதல் தஞ்சை ஜில்லாவில் சுற்றுவதாகத் திட்டம். அங்கங்கே பார்ப்பன மிராசுதார்களைக் கண்டும் நம் “மூப்பனார்களை”க் கண்டும் என்னென்ன முறையில் எப்படி எப்படி திராவிடர்கள் பொருள்களைத் திரட்டலாம்? என்று அக்கிரகாரங்கள் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று வகுத்திருக்கும் திட்டங்கள் – ஆலோசனைகளைக் கூறலாம். இந்தச் சங்கத்திலே படைவேறு திரட்டி பயிற்சியும் கொடுக்கிறார்களாம். “பார்ப்பாரப் பிள்ளையாவது நண்டு பிடிக்கிறதாவது” என்று நாம் கேலி பேசலாம். இவ்வாறு கேலி பேசுவது, ஒருவேளை திராவிட – ஆரிய இரத்தக்கலப்பு ஏற்படுவதற்கு முன்னாலே பேசினால் ஏதாவது அர்த்தமிருக்கலாம். இப்போது அவ்வாறு கேலி பேசுவது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல்தான் என்பது நமது எண்ணம்.
இப்போது சமீப காலங்களில் நடந்த செயல்களை நினைப்பூட்டிப் பாருங்கள். கல்லூரிகளிலே பார்ப்பன மாணவர்களுக்கு இடம் போதவில்லை என்பதை அறிந்தவுடனே, எவ்வளவு விரைவாகத் திராவிடர்களுடைய பொருள் பலத்தைத் திரட்டி எத்தனை லட்சங்களைக் கொண்டு விவேகானந்தா கல்லூரியைக் கட்டி முடித்து “பார்ப்பனர்களுக்கு மட்டும்” என்று போர்டு போடாமலே பார்ப்பன மாணவர்களையே சேர்த்துக் கொண்டு பார்ப்பனியம் எப்படி ஒரு கல்லூரியை நடத்தி வருகின்றது? கோவிலுக்குள்ளே செருப்புக் காலோடு நடந்து கருப்புச் சட்டைக்காரர்கள் ஆபாசமாகப் பேசினார்கள் என்ற கட்டுக்கதையைப் பரப்பிக் காலிகளைக் கொண்டு மதுரையிலே பார்ப்பனியம் எப்படி தன் வெறிச் செயலை நடத்திக் காட்ட முடிந்தது? தன் பொருளைச் செலவு செய்யாமலே, தான் போர்க் களத்தில் இறங்காமலே பார்ப்பனியம் எவ்வாறு தன் காரியங்களிலே வெற்றி பெற்று வந்திருக்கிறது?
எதிரியை – எதிரியின் பலத்தைக் கேவலமாகக் கருதுவது ஒருவருக்கு ஒரு நாட்டாருக்கு அழிவையே தரும் என்பது அறிஞர்கள் முடிவு. முதலாவது உலக மகா யுத்தத்திலே ஜெர்மனி தோற்றதற்குக் காரணம், ஜெர்மன் படை வீரர்களுக்கு அய்ரோப்பியர்களின் கோழைத்தனத்தைப் பற்றியும் வஞ்சக தந்திரச் செயல்களைப் பற்றியும் ஏராளமான கதைகளைச் சொல்லி அய்ரோப்பியர்களைக் கேலியாகக் கருதும்படி ஜெர்மானிய வீரர்களுக்கு, ஜெர்மானியத் தலைவர்கள் ஊட்டி வந்த உணர்ச்சியே காரணமாகும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் கூறுகின்றனர். இந்தப் படிப்பினையை நாம் திராவிடர்களுக்கு இந்த நேரத்தில் நினைப்பூட்டுகின்றோம்.
இவையல்லாமல் சமஸ்கிருத சாகித்ய பரிஷத் என்ற பெயராலே செத்த மொழியைச் சிங்காரிக்கும் சாஸ்திகள் வேறு சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு அங்கங்கே கூடித் திட்டமிட்டு வருகின்றனர்.
இவைகளையெல்லாம் திராவிடத் தோழர்கள், அவர்கள் எக்கட்சியினராயிருந்தாலும் எண்ணிப் பார்த்து ஒரு முடிவிற்கு வரவேண்டாமா? நாம் திராவிடர் என்கின்ற உணர்ச்சியைக் கொள்ள வேண்டாமா? திராவிடத் தோழர்களே! தயவு செய்து எண்ணிப் பாருங்கள், என்று மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.
– ´ஈட்டி´ என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. (´குடிஅரசு´, 06.12.1947)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக