சனி, 15 ஆகஸ்ட், 2020

தனலட்சுமியின் கல்வி கேள்விக்குறி .. ஜாதி சான்றிதழ் இல்லையாம் ... பரங்கிணி கிராமம்

Yuvan Swang : படத்தில் இருக்கும் பெண் தனலட்சுமி.தி.பரங்கினி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி பெண்.பத்தாம் வகுப்பில் தான் படித்த பள்ளியில்
முதலிடம்.இப்போது +2 முடித்திருக்கிறார்.     கடந்த வாரம் அவரை நான் திண்டிவனம் வரவழைத்து பிஎஸ்சி அக்ரி படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு பிரவுசிங் செண்டருக்கு அழைத்துச் சென்றேன்.       காந்திகிராமம் பல்கலைக்கழகம் இணையதளத்தில் சாதிச்சான்று வழங்கப்பட்ட தேதி,வழங்கிய அதிகாரி நிலை கேட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாதிச்சான்றிதழ் கேட்டது.     இவரிடம் சாதிச்சான்று இல்லாததால் இரண்டு இடங்களுக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை. அவர் முகத்தில் வெளிப்பட்ட ஏமாற்றத்தை உணர முடிந்தது.
அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு இயல்பாக இருக்க முயற்சி செய்தார்.

இப்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் விண்ணப்பம் பெறப்படுகிறது.

இன்னும் பதினைந்து நாட்களுக்குள் இவருக்கு சாதிச்சான்று கிடைத்தால் அவருக்கு உறுதியாக அக்ரி சீட் கிடைக்கும்.ஆனால் சாதிச்சான்று இல்லாமையால் இவர் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

கற்கை நன்றே கற்கை நன்றே,பிச்சை புகினும் கற்கை நன்றே..

அவர் பொறுப்பாக படித்து விட்டார்.ஆனால் அவர் மேல் படிப்புக்குச் செல்லாமல் தடுப்பது எது?
யாருடைய அலட்சியம்?

ஆறாம் வகுப்பு படிக்கும் போதே விண்ணப்பித்து விட்டார்.அவருடன் விண்ணப்பித்த மற்ற சமூகத்தினருக்கு சாதிச்சான்று கிடைத்து விட்டது.ஆனால் இவருக்கு கிடைத்த பாடில்லை.

ஒரு கொடுமை என்னவென்றால் இவர் வகுப்பில் இவருடன் +2 படித்து ஃபெயிலான பிள்ளைக்கு கூட சாதிச்சான்று இருக்கும்.பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை வைத்து மேற்படிப்பு செல்ல முடியும்.

ஆனால் இந்த தனலட்சுமி?????

மேற்படிப்பு செல்லும் தருணம் இது. விபத்தில் சிக்கியவருக்கு அளிக்கப்படும் அவசர சிகிச்சைகள் போல் இவர் விஷயத்தில் வருவாய்த்துறை செயல்பட வேண்டும்.ஆனால் நடப்பதோ வேறு.

இவருக்காக விழுப்புரம் எம்பி முனைவர் திரு.ரவிக்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளும் இவர் பிரச்சினையை எழுதியிருக்கின்றன.

நேற்று விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தனலட்சுமி உட்பட சாதிச்சான்று கிடைக்காத பிள்ளைகளும் பெற்றோர்களும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்,தமிழ்நாடு மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தினருடன் இரவு பதினோரு மணி வரைக்கும் காத்திருப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

கடந்த மாதம் ஒரு சம்பவம்.ஒரு பழங்குடி பெண்ணுக்கு வங்கியில் வேலை கிடைக்கிறது.ஆனால் சாதிச்சான்று கிடைக்காததால் பணியில் சேர முடியவில்லை.
பிரச்சினை நீதிமன்றத்துக்கு செல்கிறது.அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அபராதம் விதிக்கிறார்கள்.அந்த பெண்ணுக்கு உடனடியாக சாசாதிச்சான்று வழங்கப்பட்டது.

தனலஷ்மி விஷயம் உரிய இடங்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

+2 வரை சிரத்தையுடன் படித்த ஒரு பழங்குடி பெண் தங்கள் குடியிருப்பின் மற்ற பெண்களைப் போல் பள்ளியிறுதி முடித்தும் மேற்படிப்பு செல்ல முடியாமல் மனம் வெதும்பி சமயலறைக்குச் சென்றது போல் தனலஷ்மியும் சமயலறைக்குச் செல்ல போகிறாரா அல்லது கல்லூரிக்கு போக போகிறாரா என்பது பத்து நாட்களில் வருவாய்த்துறை என்ன செய்ய போகிறது என்பதில் இருக்கிறது.

Yuvan Swang

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக