வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கொரொனா தொற்று, மரணங்கள் குறித்து பொய்யான புள்ளிவிவரங்கள் கொடுக்கும் தமிழக அரசு

LR Jagadheesan : · நீண்டநாட்களாக ஒரு பொய்யான பிம்பத்தை இங்கே சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் திராவிட, அம்பேட்காரிய, தலித்திய முற்போக்காளர்களே இதில் அதிக முன்னணியில் நின்று தீவிரமாக களமாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக சுகாதாரத்துறை கோவிட்.19 தொற்றை மிகச்சிறப்பாக கையாள்வதாகவும் தமிழ்நாட்டு சுகாதாரத்துறை இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்வதாகவும் செய்யப்படும் தொடர்ச்சியான வெற்றுப்பீத்தல்கள் வேதனையை தருகின்றன ஆனால் அதற்கு மாறான சில அடிப்படை தரவுகளை, சம்பவங்களை, தகவல்களை இவர்கள் பெரும்பாலும் பேசுவதில்லை. பொதுசுகாதாரத்துறையின் சில சில தனிப்பட்ட சாகச சம்பவங்களைக்காட்டி தமிழ்நாட்டில் எல்லாமே மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக இவர்கள் உருகும் உருகல் முழு உண்மையல்ல. முழுப்பொய்களைவிட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை. அதுவும் கொள்ளைநோய்காலத்தில்.

கொரொனா தொற்று குறித்தும் அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் மாதக்கணக்கில் தொடர்ந்து திட்டமிட்டு பொய்யான புள்ளிவிவரங்கள் கொடுக்கும் ஒரு மாநில அரசு; கூசாமல் பொய்சொல்வதை ஒரு கலையாகவே வளர்த்தெடுத்த ஆனப்பெரிய அரசியல் நடிகனும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஊறித்திளைத்தவருமான ஒரு சுகாதார அமைச்சர்;
இந்தியாவிலேயே அதிகமான மருத்துவர்களை கொரொனாவுக்கு பலிகொடுத்ததாக கூறப்படும் ஒரு மாநிலம்; கொரோனா தவிர மற்ற சிகிச்சைகளில் அக்கறை காட்டாத ஆரம்பசுகாதார நிலையங்கள்; அதனால் அதிகரித்துக்கொண்டிருக்கும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், இதயக்கோளாறு போன்றவற்றால் அவதியுறும் நாள்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை தேடி ஓட வேண்டிய அவலம் என தமிழ்நாட்டின் பொதுசுகாதார செயற்பாடுகள் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கின்றன.

அது குறித்தெல்லாம் தமிழ்நாட்டு ஊடகங்களும் பேசுவதில்லை. சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் பேசுவதில்லை. ஏனெனில் இந்த இருதரப்பிலும் பெரும்பான்மையானவர்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பதோ அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களில் ஒருவராக வரிசையில் நின்று சிகிச்சை பெறுவதோ இல்லை. எனவே இவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறையொன் இன்றைய உண்மை நிலவரத்தின் முழுமையோ அதன் தீவிரமோ தெரிவதாக தோன்றவில்லை.

தமிழ்நாட்டின் பொதுசுகாதாரம், குறிப்பாக ஆரம்பசுகாதார நிலவரம் மோசமாகிக்கொண்டே போகிறது என்பதே உண்மை. ஆனால் அதை சொல்லக்கூடாதென தமிழ்நாட்டு ஊடகங்களின் வாய்களில் வழக்கம்போல பெரிய கொழுக்கட்டைகள் திணிக்கப்பட்டிருக்கின்றன. அரசு கேபிள் அச்சம் ஒருபக்கம்; அரசு விளம்பர வருவாம் மறுபக்கம்; தேர்தலின் போது ஆளும்கட்சி தருவதாக உத்தரவாதமளித்திருக்கும் விளம்பர வருவாம் மூன்றாம் பக்கமாக சேர்ந்து தமிழ்நாட்டு ஊடகங்களை மௌனிக்க செய்திருக்கிறது.

ஆனப்பெரிய செல்வாக்கோடு இருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த மூன்றுமாதகாலமும் அவரது நோய்குறித்து எந்த உண்மையையும் கூறாமல் ஒருகோடி ரூபாய்க்கு விருந்துண்ட பெருமை மிகு வரலாற்றுக்கு சொந்தமான தமிழ்நாட்டு ஊடகங்கள் இதில் காக்கும் காரிய மௌனம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஏற்க முடியாதது என்றாலும்.

சமூக ஊடக முற்போக்காளர்களோ இதை கொள்கை கண்ணாடியால் மட்டுமே பார்த்து எல்லாம் சிறப்பாக இருப்பதாக வழக்கம்போல பஜனை பாடிக்கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற பொதுசுகாதார நிலவரம் சென்னையில் கொரொனா அல்லாத நோயாளர்கள் படும் அவலம் குறித்து கடந்த ஒரு மாதத்தில் என்னிடம் நேரடியாக புலம்பிய ஐந்து வெவ்வேறு நபர்களின் நேரடி அனுபவத்துக்கும் இங்கே முற்போக்காளர்கள் சமூக ஊடகங்களில் பாடிக்கொண்டிருக்கும் போற்றி போற்றிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையே இதோ இந்த பதிவும் காட்டுகிறது.

பிகு: அரசு மருத்துவமனைகளின் இன்றைய உயிர்நாடியாக இருப்பது பெருமளவு முதுகலை மருத்துவ மாணவர்கள் என்றும் அவர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் தான் தமிழ்நாடு இன்னொரு குஜராத்தாகவோ உத்தரப்பிரதேசமாகவோ மாறாமல் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கவச உடைகளில் இன்னமும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. அதிகபட்ச மருத்துவர் மரணங்கள் குறித்தே கவலைப்படாத ஒரு சுகாதரத்துறை அமைச்சரும் அவரை பாதுகாக்கும் அல்லக்கைகளும் இருக்கும் தமிழ்நாட்டில் மருத்துவர் உள்ளிட்ட பொது சுகாதார பணியாளர்களின் உயிர் பாதுகாப்பு கவச உடைகளை பற்றி யாருக்கென்ன கவலை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக