வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நீட் தேர்வு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு; உடல் வெப்பம் 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால் தனி அறையில் தேர்வு

dailythanthi.com : நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது. உடல் வெப்பம் 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கூறியிருக்கிறது. 

சென்னை, கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வு, மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யவேண்டும் என்றும், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்தநிலையில் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.), அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி தேர்வு நடக்கும் என்று அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளில் தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் நாடு முழுவதும் எவ்வளவு மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.



அதன்படி, நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 தேர்வு மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் ஆகும். தமிழகத்தை பொறுத்தவரையில், இந்த ஆண்டு 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர். இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் குறைவாகும். இந்த நிலையில், நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், கடவுச்சொல், பிறந்ததேதி ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால்டிக்கெட் 3 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. அதில் தேர்வு மையம் மற்றும் பூர்த்தி செய்ய வேண்டிய சுய விவரங்கள், மாணவ-மாணவிகள் செய்ய வேண்டிய விவரங்கள், கொரோனா காரணமாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதனை மாணவ-மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சில விவரங்கள் வருமாறு:-

தேர்வர்கள் முககவசம், கையுறை, வெளிப்படையாக தெரியக்கூடிய தண்ணீர் பாட்டில், சிறிய அளவிலான (50 மில்லி லிட்டர்) கிருமி நாசினி திரவ பாட்டில், தேர்வு தொடர்பான ஆவணங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லலாம். தேர்வர்களின் உடல் வெப்பம் 99.4 டிகிரி என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு அறை வளாகத்தில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்வர்கள் அணிந்து வரும் முககவசம் தேர்வு அறைக்கு வரும் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு அறைக்குள் வரும் போது தேர்வு மையத்தில் வழங்கப்படும் முககவசத்தை தான் அணிய வேண்டும். தேர்வு முடிந்ததும், தேர்வு கண்காணிப்பாளரிடம் பூர்த்தி செய்த ஹால் டிக்கெட்டை (அட்மிட் கார்டு) ஒப்படைக்க வேண்டும். அதனை செய்யத் தவறினால் விடைத்தாள் மதிப்பீடு செய்யாமல் போகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக