வியாழன், 27 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டின் இன்றைய 69% இட ஒதுக்கீட்டிற்கும் சமூகநீதிக்கும்.. பெரியார்.. கலைஞர்!

  LR Jagadheesan : · கலைஞரின் மகத்தான வரலாற்று சாதனைகளில் இன்னொன்றுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று முதற்கட்ட அங்கீகாரம் அளித்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் இன்றைய 69% இட ஒதுக்கீட்டிற்கும் சமூகநீதிக்கும் இரண்டே இரண்டுபேர் தான் முதன்மையான காரணகர்த்தாக்கள். சமூகநீதிக்காவலர்கள். 

ஒருவர் பெரியார். அடுத்தவர் கலைஞர். அந்த இருவரும் தான் 24 மணிநேரமும் சமூகநீதி குறித்து உண்மையான அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் மாறும் சமூக தேவைக்கேற்ப சமூகநீதியை புதுப்புது வடிவத்தில் நிறுவனமயமாக்கிய சாதனையாளர்கள். சரி. இப்போது இன்னொரு முக்கிய கேள்வி எழுகிறது. தலித் என்கிற அரசியல் அடையாளத்துக்குள் இருக்கும் அல்லது இருப்பதாக சொல்லப்படும் அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து இந்த வழக்கை தொடுத்தது யார்? அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அணிதிரண்டு ஆதரித்த கட்சிகள், அமைப்புகள், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், கல்விநிலையங்கள், அறிவுஜீவிகள் யார்? ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களுக்கான ஆகக்குறைந்தபட்ச நீதியான இந்த உள் ஒதுக்கீட்டையும் கூட கொடுக்கக்கூடாது என்று இவர்கள் இவ்வளவு வன்மமாக எதிர்க்க வேண்டிய தேவை என்ன? அதன் பின்னிருக்கும் உளவியல் எது?    

சுயஜாதிவெறி தானே?

அந்த சுயஜாதி வெறிகொண்டு இவ்வளவுதூரம் அருந்ததியர்களை வெறுக்கும் இந்த நபர்கள்/அமைப்புகள் குறித்து தமிழ்நாட்டின் ஆனப்பெரிய தலித் அமைப்புகளோ அறிவுஜீவிகளோ ஏன் ஒரே ஒரு கண்டனத்தைக்கூட தெரிவிக்க மறுக்கிறார்கள்?

அதுவும் ஜாதிப்பாசம் தானே? இவர்களின் கள்ள மௌனத்துக்கு வேறென்ன காரணம்? சொல்லுங்கள் தலித் போராளிகளே?

அருந்ததியருக்கு எதிரான இவ்வளவு வன்மத்தை கக்கும் நீங்களும் உங்களின் கள்ள மௌனமும் தான் தமிழ்நாட்டில் தலித் அரசியல் என்பது அடிப்படையில் ஜாதிச்சங்க அரசியல் என்பதற்கான நிதர்சன சாட்சிகள்.

எப்போதும் போல இப்போதும் சொல்கிறேன் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை திராவிட அரசியலை விட தலித் அரசியல் ஜாதி ஒழிப்பிலோ சமூகநீதி தளத்திலோ சமூக நீதி வழங்குவதிலோ மதசார்பின்மையை பாதுகாப்பதிலோ ஒரே ஒரு தளத்தில் கூட மேம்பட்டதல்ல. மாறாக அவை அனைத்தையும் பலவீனப்படுத்துவதில் மட்டுமே மொத்த கவனத்தையும் ஆற்றலையும் செலவழித்துக்கொண்டு தாங்களும் வீணாகி தமிழ்நாட்டையும் பாழாக்க மட்டுமே உங்கள் அரசியல் பயன்பட்டு வந்திருக்கிறது.

கலைஞர் என்கிற தமிழ்நாட்டின் காவலன் இமயமாய் இருந்தவரை அதன் பாதிப்புகள் பெரிதாக கெடுதி செய்யவில்லை. அவர் இல்லாத எதிர்காலத்தில் அவருக்கு ஈடான மாற்றும் இல்லாத அரசியல் பொட்டல்வெளியில் நீங்கள் இனியும் திருந்தாவிட்டால் உங்களின் வரலாற்று பொறுப்புணர்ந்து நடந்துகொள்ளாவிட்டால் ராமதாஸைப்போல இன்னொரு அழிவு சக்தியாக மட்டுமே தமிழ்நாட்டு அரசியலில் பங்காற்ற முடியும். ஆக்கப்பூர்வ பங்களிப்பு செய்ய முடியாது.

இந்த தீர்ப்பு தமிழ்நாட்டின் “தலித் அரசியல்” சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டக்கடைசி வாய்ப்பு. முடிவு அவர்கள் கையில்.

பிகு: ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை அங்கீகரித்திருக்கிறது. இத்தகைய உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இருப்பினும் உள்ஒதுக்கீடு முறை செல்லாது என கடந்த 2004ஆம் ஆண்டு 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்ததால் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், “பட்டியல் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது” என்றும் கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். 

உள் ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்திருப்பது தமிழகத்தில் தற்போது அருந்ததியருக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை எதுவும் கிடையாது அந்த முறை தொடர்ந்து நீடிக்கலாம் என்பதை உறுதிசெய்துள்ளது. அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அணிருதா போஸ் ஆகியோர் அடங்கிய ஐவர் அமர்வுதான் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இனி 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில், புதிதாக விசாரிக்கப்பட்டு புதிய தீர்ப்பு வெளியாகும். அதுவரை உள் ஒதுக்கீடு தடையின்றி தொடரும். ஏழுநீதிபதிகள் அமர்வும் இன்றைய தீர்ப்பை உறுதி செய்து அருந்ததியர்களுக்கு நீதி வழங்கும் என்பது எதிர்பார்ப்பு. வழங்க வேண்டும் என்பது கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக