சனி, 8 ஆகஸ்ட், 2020

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் .... சாவித்திரி கண்ணன்

சாவித்திரி ண்ணன் : இலங்கை தேர்தல் சில அதிர்ச்சியான,வித்தியாசமான கள நிலவரங்களை நமக்கு உணர்த்தியுள்ளது!கடும் தமிழ் தேசியவாதம்,போலி இனவாதம் பேசியவர்களை இலங்கை தமிழ் மக்கள் பெருமளவு புறக்கணித்துள்ளனர்! ஓரிருவர் விதிவிலக்காக வென்றுள்ளனர்.அதுவும் மிக சொற்ப வாக்குகளில்!  

வட கிழக்கு மாகாணங்களில் உள்ள 25 தொகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெறும் 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது! (தமிழர் தரப்பில் ஒரு பெண் வேட்பாளருக்கு கூட வெற்றிக்கான வாய்ப்பு தமிழர் கட்சிகளால் வழங்கமுடியவில்லை. ரவிராஜாவின் மனைவி சசிகலா திட்டமிட்டு தோற்கடிக்கப் பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வருகின்றன) முக்கிய தலைவர்களுமே பழைய முறையிலான உணர்ச்சியை கிளரும் பேச்சுகளை தவிர்த்து எந்தளவுக்கு தமிழர்களுக்கான உரிமையை,அதிகார பரவலை சாத்தியமாக்குவது என்பது குறித்தே பிரச்சாரம் செய்தனர். தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதான தலைவர்களில் ஒருவரான சுமந்திரன்,தேர்தலுக்கு முந்திய தனது ஊடக நேர்காணல் ஒன்றில், ‘’தமிழீழ தனிநாட்டையோ, அதற்கான ஆயுத போராட்டத்தையோ இனியும் ஆதரிப்பதற்கில்லை…’’ என்றதோடு விடுதலைப் புலிகள் மீதான கடும் விமர்சனங்களையும் வைத்தார்.

வெற்றி பெற்ற தலைவர் இரா.சம்மந்தனோ,’’அரசுடன் இணக்கமாக பயணிக்க தயார்’’ என பேட்டி தந்துள்ளார்!

போட்டியிட்ட தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல பிரதான தலைவர்கள் பெரும் தோல்வி அடைந்துள்ளனர். அதே சமயம் தமிழர் பகுதியில் 14 இடங்களில் ராஜபக்சேவை ஆதரிக்கும் கட்சிகளும்,சுஜித் பிரேம தேசாவை ஆதரிக்கும் கட்சிகளும்,ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி வேட்பாளர் ஒருவரும் வென்றுள்ளனர்! அதாவது பிரதான சிங்களர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர்களாக தமிழர்கள் நின்று வென்றுள்ளனர்.

பொதுவாக இந்த தேர்தலில் இரு தரப்பிலும் இனப்பகைமையை தூண்டும் பேச்சுகள் இதுவரையில் இல்லாத அளவுக்கு மட்டுப்பட்டிருந்தன என்பதை மிகவும் ஆரோக்கியமானதாகவே பார்க்க வேண்டியுள்ளது!

வருங்காலத்தில் இரு தரப்பிலும் இனவெறிப் போக்கு முற்றாக மறைவதற்கு இன்னும் ஒரிரு தசாப்தங்கள் தேவைப்படும் என்றே நினைக்கிறேன்.

கடந்தகால இனவாத அணுகுமுறையை கைவிட்டு அனைவருக்கும் பொதுவான ஆட்சியை தருவதற்கான கட்டாயத்தை ராஜபக்சே எதிர்கொள்ளக் கூடும்! சர்வதேச சமூகமும் அவரை உற்று நோக்குவதால், கடந்த கால களங்கங்களுக்கு பிராயசித்தம் தேடும் வண்ணம் ஒரு பொறுப்பான ஆட்சியை அவர் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்!

அவரை அத்துமீறாமல் கட்டுபடுத்துவதற்கான ஆளுமைகள் பலதரப்பிலும் நிறைந்துள்ளதைக் காண்கிறேன். அதிலும், சிங்களர்கள் தரப்பிலேயே கூட அதிகமாக காணமுடிகிறது.

குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமவீர பேசியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது! ’’கடந்த காலங்களில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பெற்று வந்த போது நடந்த பல தீமைகளை பாடமாகக் கொண்டு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி கோத்தபய பாடுபட வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல ஜனநாயக சக்திகள் இந்த தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்துள்ளனர் என்றால்,அது நிபந்தனையற்ற ஆதரவாக ஒரு போதும் இருக்காது என நம்பலாம்! எந்த ஒரு நாட்டுக்குமே வெளியிலிருந்து தரப்படும் நிர்பந்தத்தைவிட உள்ளுக்குள் ஏற்படும் நிர்பந்தங்கள் தான் வலுவானதாகவும்,ஆரோக்கியமானதாவும் இருக்கமுடியும்!

சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக