செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

நீட் எழுதாத டாக்டர்கள்! உயிரை பணயம் வைத்துபோராடும் தமிழக மருத்துவர்கள்

Sivasankaran Saravanan : · திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வட இந்திய இளைஞர் விக்ரம் குமார் (வயது 20) சாலை விபத்தில் படுகாயமடைகிறார். அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். விபத்தில் வயிறு கிழிந்து வயிற்றின் உள்ளே குடலில் துளை ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. ஆனாலும் சிகிச்சை முழு வெற்றியைத்தரவில்லை. ரத்தக்கசிவு தொடர்ந்து இருந்தபடியே இருக்கிறது. எனவே அவசர அவசரமாக அந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் கோயம்பத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். 

 கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி நள்ளிரவு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் , டாக்டர் முருகதாசன் , மயக்க மருந்து டாக்டர் உள்ளிட்ட மருத்துவக்குழு அந்த இளைஞருக்கு அறுவைசிகிச்சையை தொடங்குகிறார்கள். வயிற்றுப்பகுதியை ஓப்பன் செய்து குடலில் துளை ஏற்பட்ட இடத்தை நீக்கி இரண்டு குடல்களை ஒன்றாக இணைக்கிற பெரிய அறுவைசிகிச்சை அது. நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கிய ஆபரேசன் முடிய காலை 6 மணி ஆனது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சையில் அந்த இளைஞர் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதில் மருத்துவர்களின் துணிச்சலை பாராட்டியே தீரவேண்டும். அறுவைசிகிச்சைக்கு வந்தவருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முடிவு வரும்வரை காத்திருக்க முடியாது - உடனே ஆபரேசன் செய்தாகவேண்டும் என்பதால் PPE kit போட்டுக்கொண்டு அந்த 4 மணிநேர ஆபரேசனை செய்துள்ளனர். அடுத்தநாள் மயக்கம் தெளிந்த அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது முடிவில் தெரியவந்துள்ளது.

போரில் எந்நேரமும் மரணம் ஏற்படலாம் என்ற நிலையில் உயிரை பணயம் வைத்து செல்லும் ராணுவ வீரனைப்போல , இந்த கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். அதற்கான உரிய மரியாதையும் அங்கீகாரமும் மருத்துவர்களுக்கு அளிக்கப்படவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக