செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பூ பறித்த தலித் சிறுமி, 40 குடும்பத்துக்கு தண்டனை அளித்த சாதி இந்துக்கள் – ஒடிஷா... வீடியோ

சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் வாழ்க்கை நிலையை விவரிக்கிறது , ஒடிசாவின் டேங்கனால் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம். டேங்கனால் மாவட்டத்தில் ஒரு சிறிய விஷயத்தால் ஆரம்பித்த பிரச்சனை காரணமாக, ஆதிக்க சாதியான சவர்ணாக்கள், சமூக ரீதியாக தலித்துகளை புறக்கணித்தனர். இதன் காரணமாக அவர்களின் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது. புறக்கணிப்பு நடந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர், ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு, நிர்வாகம் இப்போது இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது. உயர் சாதியினர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

இருப்பினும், சமூக புறக்கணிப்பு குற்றச்சாட்டுகளை சவர்ணாக்கள் மறுத்துள்ளனர். தங்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றும் கூறியுள்ளனர். 

எந்த ஒரு சிறு விஷயம் நடந்தாலும், தலித்துகள் அடக்குமுறை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக தலித்துகள் தங்களை மிரட்டுவதாக . உயர்சாதியினர் கூறுகின்றனர். எனவே, ‘பரஸ்பர ஒப்புதலின்’ அடிப்படையில், தலித்துகளுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில், விஷயம் என்னவென்றால், கிராமத்தின் ஒரு சிறுமி, ஒருவரின் தோட்டத்திலிருந்து சூரியகாந்தி பூவைப் பறித்தாள். ஆனால் அந்த பெண்ணுக்கு, சமூகத்தின் கட்டுப்பாடுகள் தெரியாது. அவளுடைய இந்த விளையாட்டுத்தனமான செயலின் விளைவு மிகவும் கொடூரமானதாக இருக்கும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. நான்கு மாதங்கள் முழுவதும், அவளுடையது மட்டுமல்ல, அவளுடைய முழு சமூகத்தினரின் வாழ்வும் நரகமாகிவிட்டது.

ஏப்ரல் 6 ஆம் தேதி, டேங்கனால் மாவட்டத்தில் உள்ள கட்டியோ- காடேனி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது தலித் சிறுமி ஸ்ருதிஸ்மிதா நாயக், தெரியாமல் செய்த அந்த ‘குற்றத்திற்காக’ , கிராமத்தின் 40 தலித் குடும்பங்களும் , கடந்த நான்கரை மாதங்களாக தண்டனை அனுபவித்து வருகிறது.

அன்றிலிருந்து 800 உயர் சாதி சவர்ண் குடும்பங்கள், தலித்துகளை முற்றிலுமாக புறக்கணித்தன. நிலைமை என்னவென்றால், எந்த உயர் சாதியினரும் எந்த தலித்துடனும் பேசுவதில்லை. சமூக தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

“அன்று எங்களில் சில பெண்கள் குளத்திற்குச் சென்றோம். அங்கிருந்து திரும்பும் போது நான் ஒரு பூவைப் பார்த்து அதை பறித்தேன். அப்போது அங்கே வந்த ஒரு நபர், எங்களை திட்ட ஆரம்பித்தார். நாங்கள் செய்தது தவறுதான், இனி ஒருபோதும் இதுபோன்ற தவறை செய்ய மாட்டோம் என்று நாங்கள் மன்றாடினோம். ஆனால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, மோசமான வார்த்தைகளால் எங்களை சாடினார். அன்றைக்கு பிறகு நான் குளத்திற்கு போகவேயில்லை, ” என்று சம்பவ நாளை நினைவு கூர்ந்த ஸ்ருதிஸ்மிதா, பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஸ்ருதிஸ்மிதாவின் சமூகத்தினர், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் அந்த புகாரை காவல் நிலையம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இது கிராமத்தில் உயர் சாதியினருக்கும் தலித்துகளுக்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்கியது.

ஸ்ருதிஸ்மிதாவும் அவரது தோழிகளும், அன்றிலிருந்து குளத்திற்கு செல்லவில்லை. ஆயினும், அந்த கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான சாகி நாயக், குளத்திற்குசென்றபோது, ​​உயர் சாதியினர் அவரை அவதூறாகப்பேசி, மீண்டும் ஒருபோதும் குளத்துக்குச் செல்லக்கூடாது என்று மிரட்டினர். இதற்குப் பிறகு சாகி , அங்கு செல்லவேயில்லை.

ஒவ்வொரு தலித்துக்கும் அவரவர் கதை

ஸ்ருதி மற்றும் சாகி மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தலித் சமூகத்தினருக்கும், தாங்கள் சந்தித்த அவமானம் மற்றும் அவதூறு பற்றிய ஒரு கதை உள்ளது.

“கடந்த இரண்டு மாதங்களாக, சவர்ணாக்கள் எங்களை முற்றிலுமாக புறக்கணித்தனர். இதன் காரணமாக நாங்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறோம். கடைக்காரர்கள் எங்களுக்கு எந்த பொருட்களையும் விற்பதில்லை. எங்களுக்கு ரேஷன் சாமான்களும் கிடைப்பதில்லை. மக்கள் சேவை மையத்தின் கதவுகளும் எங்களுக்கு மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை வாங்க நாங்கள் ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். நாங்கள் விவசாயம் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை.

டிராக்டர்கள், தள்ளுவண்டிகள் போன்றவை எங்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் குளத்தில் குளிக்கவும் அனுமதியில்லை. எங்களுடன் யாராவது பேசினால், அவர் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்,” என்று கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான சர்வேஷ்வர் நாயக் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஸ்ருதிஸ்மிதாவின் சர்ச்சைக்குப் பின்னர், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையிலான சமூக தூரம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஜூன் 16 அன்று, உயர் சாதியினர் ,கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டினர் . அதில் தலித்துகளும் கலந்துகொண்டனர். இந்த பஞ்சாயத்துக்குப் பிறகு, கிராமத்தில் தலித்துகளின் சமூக புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது.

கிராமத்தில் சுமார் 800 உயர் சாதி சவர்ண் குடும்பங்கள் உள்ளன. ஆனால், வெறும் 40 தலித் குடும்பங்களே, அங்கு வசிக்கின்றன. எனவே சமூக புறக்கணிப்பை தலித்துகள் அமைதியாக பொறுத்துக்கொள்கிறார்கள். அதை எதிர்க்கும் வலிமை அவர்களிடம் இல்லை.

தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் குற்றச்சாட்டுகள்

ஆனால் உயர் சாதியினரும், தலித்துகளுக்கு எதிராக புகார் சொல்கின்றனர். ” தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கூடுமிடத்தில், தலித் இளைஞர்கள் நாள்முழுவதும் வேலைவெட்டி ஏதுமின்றி அமர்ந்துள்ளனர். அந்த வழியாகச்செல்லும் சவர்ண் சமூக பெண்கள் பற்றி மோசமாக பேசுகின்றனர்,” என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இருப்பினும், இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

தலித்துகளுக்கு எதிராக உயர் சாதியினரின் மிகப்பெரிய குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்கள் பழங்குடி தலித் ஒடுக்குமுறை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்.

“தலித் மக்கள் தங்கள் வலுவை நிலைநாட்ட, இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் அல்லது அச்சுறுத்துகிறார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், எங்கள் சமூகமக்கள் இதனால் நிறைய சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் எங்களைத் துன்புறுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, ” என்று இந்த கிராமத்தின் கைலாஷ் பிஸ்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்த பின்னர் கிராமவாசிகள் இறுதியாக தலித்துகளையும் அழைத்து ஒரு கூட்டத்தை கூட்டினர். தலித்துகளுடன் யாரும் பேசமாட்டார்கள் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பேசினால்தானே பிரச்சினை இருக்கும். இந்த முடிவை அடுத்து, அவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நாங்கள் ஆரம்பித்தோம் , ” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விஷயம் பெரிதாகத்துவங்கியதும், டேங்கனால் எஸ்பி, துணை மாவட்ட ஆட்சியர், உள்ளூர் துமுசிங்கா காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை ஒரு சந்திப்பு நடந்தது.

“இரு தரப்பிலிருந்தும் ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைகள் ஒரு சுமூகமான சூழலில் நடைபெற்றது. ஒவ்வொரு வார்டிலும் ஐந்து உறுப்பினர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் மற்றும் இரு தரப்பினரும் அதில் இடம்பெறுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த குழு ,வார்டில் உள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணும் மற்றும் தீர்வு கிடைக்காவிட்டால் கிராமக் குழுவுக்கு தெரிவிக்கும், “என்று காமாக்யாநகர் மாவட்ட துணை ஆட்சியர் பிஷ்ணு பிரசாத் ஆசார்யா, பிபிசியிடம், தெரிவித்தார்.

இரு தரப்பினரும் , கிராமத்தில் நல்லிணக்கத்தை பேணுவதாக உறுதியளித்துள்ளதாகவும், இது தொடர்பான ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், காவல் நிலைய பொறுப்பாளர், ஆனந்த் டுங்டுங் தெரிவித்தார்.

தடையை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை

வெள்ளிக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு தலித்துகளுக்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக கிராமத்தின் தலைவர் பிராண்பந்து தாஸ் கூறுகிறார். “இப்போது எல்லோரும் முன்பு போலவே ஒன்றுகூடி வாழ்வார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆயினும், இது போல வேறு ஏதாவது நடந்தால் உடனடியாக அதை காவல் நிலையத்திற்கு தெரிவிப்பேன்,” என்று அவர் கூறினார்.

பிரச்சனை, காகிதத்தில் தீர்க்கப்பட்டிருந்தாலும் கூட, இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றம் இன்னும் முடிவடையவில்லை என்பதை அவரது கடைசி வாக்கியம் எடுத்துக்காட்டுகிறது. இந்த விஷயம் எந்த நேரத்திலும் மீண்டும் வெடிக்கலாம் மற்றும் நிலைமை மீண்டும் மோசமடையலாம்.

தலித் இளைஞர் சர்வேஷ்வர் மனதிலும் அதே பயம் இருக்கிறது. “வெள்ளிக்கிழமை இரவுதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சனி மற்றும் ஞாயிறு , பணிநிறுத்த நாட்கள். எனவே சமூக புறக்கணிப்பு உண்மையில் முடிந்துவிட்டதா என்பதைக் காண, இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறுகிறார்,

கிராமத்தில் தற்போது ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது. அது எப்போது வேண்டுமானாலும் உடையலாம், பதற்றம் மீண்டும் தொடங்கலாம்.

இதனிடையே, போலீஸ் உயர் அதிகாரி, இந்தப்பிரச்சனை தொடர்பாக, வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

“சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறு எதுவும் இல்லை,” என்று ஒடிசாவின் தலித் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் மல்லிக் தெரிவித்தார்.

“கடலோர ஒடிஷாவின் ஒவ்வொரு கிராமத்திலும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு, தீண்டாமை மற்றும் சாதி என்ற பெயரில் துன்புறுத்தல் இன்றும் தொடர்கிறது. இது அரசியலமைப்பை அவமதிப்பதாகும். இந்த சமூக களங்கத்தை முடிவுக்கு கொண்டுவரத் தேவையான அரசியல் மன உறுதி , நம் அரசியல்வாதிகளிடம் இல்லை, ” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சமூக புறக்கணிப்பு பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்த பின்னரும் , இதுவரை அரசு எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை. முழு விவகாரத்தையும் மூடி மறைக்கும் நிர்வாகத்தின் அணுகுமுறையானது, இந்த அடக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு, ஆளும் வர்க்கத்தின் மறைமுக ஒப்புதல் எங்கோ இருப்பதை அடையாளம் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக