செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

இலங்கை கடலுக்குள் இழுவை படகுகளை தடுக்க புதிய திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

BBC : இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சியில் இன்று ஊடகவியாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி – இரணை தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் பிரவேசம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆட்சி காலத்தில் அதனை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்திய இழுவைப்படகு பிரச்சினை இரணைதீவு பகுதியில் மாத்திரமல்லாது, அது இலங்கையின் வட மாகாணத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் தாம் இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடரச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வட மாகாணத்திற்கு அச்சுறுத்தலாகியுள்ள இந்திய இழுவைப் படகினை இலங்கை எல்லை பகுதிக்குள் அனுமதிக்காதவாறு தடுப்பதற்கு உறுதிப்பாட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடங்களில் கட்டுமான பணிகளை முன்னெடுக்கும் போது பாதுகாப்பு பிரிவினர் அதனை தடுத்து வருவதாக, தங்கியிருந்த மீன்பிடிக்க மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என கூறிய அமைச்சர், இதற்கு விரைவில் தீர்வை பெற்றுகொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

வாழ்வாதாரம் சார்ந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் தமது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இழுவைப் படகு பிரச்சினை மற்றும் வட மாகாண மக்களின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக