வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

நெல்லை: 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை! நெல்லை: 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை!

 

நெல்லை: 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை!

மின்னம்பலம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கொலை, கொள்ளை, சிறுமிகள் வன்கொடுமை, வெடிகுண்டு வீச்சு, என்கவுண்ட்டர் என அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலியில் இரு திருநங்கைகள் உட்பட 3 பேரின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அடுத்த சுத்தமல்லியில் திருநங்கைகளுக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்குப் பவானி, அனுஷ்கா ஆகிய திருநங்கைகள் வசித்து வந்தனர். இதில் அனுஷ்காவின் கணவர் முருகன். இவர்கள் மூவரும் நேற்று முதல் காணவில்லை என்று சக திருநங்கைகள் தேடியுள்ளனர். பின்னர் சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாகப் பவானி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.    குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொடுப்பதாக இவர்கள் மூவரையும் ஏமாற்றியதாக சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூன்று பேரை பிடித்து விசாரித்திருக்கின்றனர்.


அவர்கள் அளித்த தகவலின்படி பாளையங்கோட்டை நான்குவழிச்சாலை அருகே கிணற்றிலிருந்து சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. மாயமானவர்கள் சடலமாக மீட்கப்பட்டது திருநங்கைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுத்தமல்லி காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக